T Nagar Bridge: சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால், போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என நம்பப்படுகிறது.

2 மாதங்களில் தியாகராய நகர் மேம்பாலம் தயார்..!

சென்னையில் கட்டப்பட்டு வரும் புதிய பாலங்கள் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ., மூர்த்தி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என். நேரு, ”தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் அடுத்த இரண்டு மாதத்திற்குள் முடிவடையும். கணேசபுரம் மேம்பாலம் மட்டும் ரயில்வேதுறையின் மீதமுள்ள பணிகளால், இன்னும் ஒரு 3 மாதம் காலம் ஆகும்” என பதிலளித்தார்.

நீட்டிக்கப்படும் தியாகராய நகர் மேம்பாலம்:

தியாகராய நகரில் சிஐடி நகர் தொடங்கி தெற்கு உஸ்மான் ரோட் வரை, 1.2 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. 131 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும்போது, அப்பகுதியில் போக்குவரத்து கணிசமாக குறையக்கூடும். அதற்கு ஏற்றார்போல, வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் சுமார் 50 மீட்டர், ரங்கநாதன் தெரு அருகே இடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டு மேம்பாலங்களையும் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்மூலம், சி.ஐ.டி நகர் முதல் பனகல் பார்க் வரை இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள தொடர்ச்சியான மேம்பாலமாக புதிய மேம்பாலம் மாறும். தி.நகரில் கட்டப்பட்டு வரும் இருவழி மேம்பாலத்தில் வழக்கமாக அமைக்கப்படும் கான்கிரீட் மேம்பாலங்கள் போல் இல்லாமல் இரும்பு தூண்கள் இருக்கும். இது மேட்லி சந்திப்பு, ரங்கநாதன் தெரு மற்றும் பனகல் பார்க்கில் நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகளைக் கொண்டிருக்கும்.

போக்குவரத்து நெரிசலுக்கான தீர்வு

மேம்பாலப் பணிகள் காரணமாக வடக்கு உஸ்மான் சாலை மூடப்பட்டுள்ளதால், பயணிகள் நீண்ட போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். சிஐடி நகர் அண்ணாசாலைக்கு செல்லும் வாகனங்கள் பனகல் பார்க்கில் நடைபாதை பிளாசா வழியாக வெங்கடநாராயண சாலைக்கும், தண்டபாணி தெரு, பர்கிட் சாலை, சிஐடி நகர் மெயின் ரோடு வழியாக அண்ணாசாலைக்கும் திருப்பி விடப்படுகின்றன. இதற்கு அதிக போக்குவரத்து நெரிசல்களின் போது 15 நிமிடங்கள் மற்றும் 30 நிமிடங்கள் வரை ஆகும். வாகனங்கள் நடைபாதை பிளாசா மற்றும் வெங்கட்நாராயணா சாலையில் நீண்ட நேரம் சிக்கிக் கொள்கின்றன. அதேநேரம், தற்போது மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாலம் இணைப்பு மூலமாக, சிஐடி நகர் தொடங்கி தெற்கு உஸ்மான் ரோடை அடைய வெறும் 2 நிமிடங்கள் போதும் என கூறப்படுகிறது. மேலும், மவுண்ட் ரோட்டிலிருந்து திநகருக்கு 5 நிமிடங்களில் வரலாம்.

ஷாப்பிங் ஈசி..!

சென்னை மாநகராட்சியின் பிரதான வணிக பகுதியாக தியாகராய நகர் திகழ்கிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு குவிய, விழா காலங்களில் தினசரி லட்சம் பேர் குவிகின்றனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை உணர்ந்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக தான், சிஐடி நகர் தொடங்கி தெற்கு உஸ்மான் ரோட் வரையிலான மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், போக்குவரத்து நெரிசல் குறைவதோடு மக்கள் எளிதாக அலைச்சலின்றி ஷாப்பிங்கிலும் ஈடுபட முடியும் என கருதப்படுகிறது.

4 கி.மீ., நீள மேம்பாலம்:

இதனிடையே, தி.நகரிலிருந்து சிஐடி நகருக்கு தினமும் சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் பயணிக்கின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் நேரத்தில் (பீக் ஹவர்ஸ்) வாகனங்களின் வேகம் அங்கு மணிக்கு 10 கிமீக்கு குறைந்துவிடும். இத்தகைய சூழலில் சி.ஐ.டி நகர் மேம்பாலம் வடக்கு உஸ்மான் சாலையுடன் இணைக்கப்பட்டவுடன், மே மாதத்திற்குள் விவேக் சந்திப்பில் உள்ள வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தையும் ஆற்காடு சாலையின் குறுக்கே உள்ள ரங்கஜபுரம் மேம்பாலத்தையும் இணைக்கும் மற்றொரு திட்டத்தை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கும். அதன் மூலம் சென்னையின் மிக நீளமான நான்கு கிலோமீட்டர் மேம்பாலம் தியாகராய நகரில் தான் இருக்கும்.