ARTICLE AD BOX
SK: சிவகார்த்திகேயனுக்கு வந்த பிரச்னை.. தனுஷையே மிஞ்சும் அளவுக்கு சிக்கல்.. அப்படி என்ன ஆச்சு?
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஆர்ட்டிஸ்ட்டாக உள்ளார். இன்னும் சொல்லப்போனால் ரொம்பவும் பிசியான நடிகர். இவரது நடிப்பில் தற்போது மூன்று படங்கள் உருவாகி வருகிறது. இதில் அவரது 25 வது படமும் அடக்கம். இப்படியான நிலையில் சிவகார்த்திகேயனுக்கு புது சிக்கல் ஒன்று வந்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அமரன். அமரன் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிப் படமாக மாறியதால் சிவகார்த்திகேயன் சம்பளம், அவரது படத்தின் வியாபாரம் என அனைத்தும் பல மடங்கு உயர்ந்து விட்டது. இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் என்றால் அது மதராஸி. இந்தப் படம் இவரது 23வது படம், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க கமிட் ஆகியுள்ளார். ஶ்ரீ லக்ஷ்மி மூவீஸ் நிறுவனம் சார்பில் என். ஶ்ரீ லக்ஷ்மி பிரசாத் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

மதராஸி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளில் அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை படத்தின் தயாரிப்பாளர் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட யோசித்து வந்தால், ஏ.ஆர். முருகதாஸின் செயல் தயாரிப்பாளருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது. ஏ.ஆர். முருகதாஸ் தற்போது இந்தியில் சல்மான் கானை வைத்து சிகிந்தர் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் இந்த மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது, படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

சிவகார்த்திகேயன்: இதனால் இந்த மாதம் முடியும் வரை ஏ.ஆர். முருகதாஸ் மதராஸி படத்தின் பக்கம் வரவே மாட்டார். மேலும் படத்தின் ரிலீஸ்க்குப் பின்னரும் ஏதாவது புரோமோசன் வேலைகளில் களமிறங்க முடிவு செய்துள்ளாரா இல்லையா எனத் தெரியவில்லை. அப்படி ஒரு திட்டம் இருந்தால், ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இருந்து தான் மதராஸி படத்தின் பக்கம் திரும்புவார்.

பராசக்தி: ஏ.ஆர் முருகதாஸ் வந்தாலும், சிவகார்த்திகேயன் வருவாரா எனத் தெரியவில்லை. காரணம் சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி படத்தின் லுக்கில் தாடி இல்லாமல் உள்ளார். அப்படி இருக்கும்போது, என்ன நடக்கும், படத்தை திட்டமிட்டது போல வெளியிட முடியுமா என தயாரிப்பாளர் புலம்பி வருகிறார் என கூறப்படுகிறது.

தனுஷ்: இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் தொடங்கி தமிழ் சினிமா வட்டாரத்தினர் மத்தியிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதில் பலரும் கூறுவது, தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் கமிட் ஆகி பிசியாக நடித்து வரும் நடிகர் என்றால் அது தனுஷ் தான். அவர், தமிழ், தெலுங்கு மற்றும் ஹாலிவுட் என படங்களில் கமிட் ஆகி நடித்துக் கொண்டே உள்ளார். இதனால் அவருக்கு அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்கள் தனுஷ் எப்போது கால்ஷீட் கொடுப்பார். கால்ஷீட் கொடுத்த படத்தை எப்போது முழுவதும் முடித்துக் கொடுப்பார் என்று புலம்பி வருகிறார்கள். இப்போது அந்த வரிசையில் சிவகார்த்திகேயனும் வந்து விடுவாரோ என பேசி வருகிறார்கள்.
