ARTICLE AD BOX
கடந்த ஆண்டில் இருந்தே பங்குச்சந்தை இறங்குமுகத்தில் சென்றுகொண்டு இருக்கிறது. 'இப்போது சரியாகும்...', 'அப்போது சரியாகும்' என்று முதலீட்டாளர்கள் தங்கள் மனதை தேற்றிக்கொண்டாலும், பங்குச்சந்தை இன்னும் சரியான பாடில்லை. இன்றும்கூட, பங்குச்சந்தை சரிவில்தான் முடிவடைந்துள்ளது.
'ஏன் இப்படி பங்குச்சந்தை இறங்குமுகத்தில் இருக்கிறது' என்பதை விளக்குகிறார், Equinomics Research நிறுவனர் மற்றும் பங்குச்சந்தை நிபுணர் சொக்கலிங்கம்.
"சந்தை இப்படி இறங்குமுகத்தில் இருப்பதைக் கண்டு பயப்படவோ, ஆச்சர்யப்படவோ தேவையில்லை. இது மிக இயல்பான ஒன்றுதான்.
தற்போது சந்தை இந்த நிலையில் இருப்பதற்கான 5 காரணங்களைப் பார்க்கலாம். வாங்க...
1. இது சந்தையில் கரெக்ஷன் காலகட்டம். அதாவது இதுவரை சந்தைகளில் எந்தெந்த பங்குகள் அதிக விலைக்கு விற்பனை ஆகிக்கொண்டிருந்ததோ, அதெல்லாம் சரியாகி சரியான விலைக்கு வந்துகொண்டிருக்கிறது.

2. ட்ரம்ப் - இந்தக் காரணம் நம் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ட்ரம்ப்பின் அதிரடிகள் இப்போதுள்ள சந்தை சரிவிற்கு முக்கிய காரணம். ஆனால், இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ட்ரம்ப் வந்ததால் சரிவு என்றில்லை. ட்ரம்ப் அதிபராக பதவியேற்பதற்கு முன்பே, அதாவது சென்ற செப்டம்பர் மாதம் முதலே சந்தை சரிவடைய தொடங்கிவிட்டது. ஆனால், அவர் அதிபரான பின் கொண்டுவரும் சட்டத்திட்டங்களால் இன்னும் நிலைமை மோசமடைகிறது.
3. இந்தியாவின் ஜி.டி.பி கடந்த ஆண்டு முதல் காலாண்டை விட, இரண்டாவது காலாண்டில் குறைந்தது. இதனால், முதலீடுகள் பாதிக்கப்பட்டன.
4. இந்தியாவின் வருமானத்தில் முக்கிய பங்கு கார்ப்பரேட் வருமானத்திற்கும் உண்டு. ஆனால், கடந்த ஆண்டு இதன் வருமானம் சொல்லிக்கொள்ளும்படி இருக்கவில்லை. அதன் வருமானம் ஒற்றை இலக்கத்திற்குகூட சென்றது.
5. யாரும் எதிர்பார்க்காத விதமாக தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் விலை குறைந்து வருகிறது. இதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை இந்தியாவில் இருந்து தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
இந்த ஐந்து காரணங்களால்தான் இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது." என விளக்கமாகக் கூறினார்.
Share Market: இந்த 5 காரணத்தினால் பங்குச்சந்தை 'இந்த' மாதம் சரியாகிவிடும் - நிபுணர் விளக்கம்