<p style="text-align: justify;">சேலம் மாவட்டத்தில் மாம்பழம் சீசன் தொடங்கி உள்ளது. இதில் செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைப்பது கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
<p style="text-align: justify;">தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் மாமரங்கள் அதிகளவில் உள்ளது. திருச்சி தொட்டியம், முசிறி, பரமத்திவேலூர், கரூர், ஈரோடு, கோபிச்செட்டிபாளையம் உள்பட பல பகுதிகளில், வாழைமரங்கள் பல லட்சம் சாகுபடி செய்யப்படுகிறது. சமீப காலமாக பழங்கள், கால்சியம் கார்பைட் என்ற ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை சாப்பிடுவர்களுக்கு ஒவ்வாமை, வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வயிறு எரிச்சல், தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இறுதியில் புற்றுநோய் கூட ஏற்படுகிறது. </p>
<p style="text-align: justify;">செயற்கை முறையில் பழுக்க வைக்கும் பழங்களை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில், சேலம் சுற்றுவட்டார மாவட்டங்களில் மாம்பழம் சீசன் களைக்கட்டத் தொடங்கிவிடும். இந்த ஆண்டும் மாம்பழ சீசன் வந்துள்ளது. சீசனின் போது சேலம் மார்க்கெட்களில் டன் கணக்கில் மாங்காய் காய்களாக விற்பனைக்கு வருவது வழக்கம். இவை குடோன்களில் பழுக்க வைத்து, பின்னர் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், மாங்காய்களை விரைவாக பழுக்க வைக்க சில வியாபாரிகள் கால்சியம் கார்பைட் ரசாயனம் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர். செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்தால், அந்த வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். </p>
<p style="text-align: justify;">இதுகுறித்து சேலம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் பழங்களை வாங்கும் போது பார்த்து வாங்கவேண்டும். செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களில் சுவை, மனம், நிறம் முற்றிலும் மாறுபட்டிருக்கும். பழங்கள் மீது கருப்பு நிற வட்டம் காணப்படும். இவை விரைவில் அழுகிவிடும். பழத்தின் மேல் பகுதி ஆரஞ்சு கலரிலும், உள் பகுதி வெள்ளை நிறத்தில் இருக்கும். பழத்தை அறுக்கும் சொர, சொர வென சத்தம் கேட்கும். பழம் பழுத்த மாதிரி தெரியும். ஆனால் கொட்டியாக இருக்கும். இயற்கை முறையில் பழுக்கவைத்த பழம் 5 முதல் 7 நாட்களாகும். ஆனால், செயற்கை முறையில் பழுக்க வைத்த பழம் 2 முதல் 3 நாட்களில் பழுத்து விடும். அதை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் என கண்டறியலாம். அவ்வாறு செயற்கை முறையில், பழுக்க வைத்த பழங்களை உடலுக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்று எரிச்சல் கடைசி கட்டத்தில் புற்று நோய் கூட வர நேரிடும். வியாபாரிகள் செயற்கை முறையில் பழுக்க வைப்பது கண்டறியப்பட்டால், பழங்கள் பறிமுதல் செய்யப்படும். அவர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின்படியும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைப்பது கண்டறிந்தால் பொது மக்கள் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.</p>