ARTICLE AD BOX
வதோரா: சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் மீண்டும் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வீரர்கள் அபாரமாக விளையாடி தற்போது இறுதிப் போட்டிக்கு அணி தகுதி பெற்று இருக்கிறது.
இதனால் விராட் கோலி, ரோஹித் சர்மா ரசிகர்கள் தங்களது வீரர்கள் தான் பெஸ்ட் என்று சமூக வலைத்தளத்தில் பேசி வந்தனர். ஆனால் உண்மையான பெஸ்ட் கிரிக்கெட் வீரர் யார் என்பதை சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் சச்சின் நிரூபித்தார்.

ஏற்கனவே சச்சின் தன்னுடைய பழைய அதிரடி ஆட்டத்தை காட்டிய நிலையில் இன்று மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பட்டையை கிளப்பி இருக்கிறார். 270 ரன்கள் என்ற ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த ஸ்கோரை சச்சின் டெண்டுல்கர் தனது அனுபவ பேட்டிங் மூலம் அதிரடியாக எதிர் கொண்டார்.
ஒரு பக்கத்தில் விக்கெட்டுகள் சரிய தொடங்கினாலும் சச்சின் டெண்டுல்கர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். ஏழு பவுண்டரி, நான்கு சிக்ஸர் என 33 பந்துகளில் சச்சின் டெண்டுல்கர் 64 ரன்கள் குவித்தார். சச்சின் ஆட்டம் இழந்த போது இந்திய மாஸ்டர்ஸ் அணி 100 ரன்கள் தான் எடுத்திருந்தது. அதில் 51 வயதான சச்சின் டெண்டுல்கர் மட்டுமே 64 ரன்கள் சேர்த்து இருந்தார்.
இதனால், சச்சினின் ஆட்டத்தை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யூசுப் பதான் 25 ரன்களில் வெளியேற இந்திய மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 174 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. முன்னதாக ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணியில் முன்னாள் சிஎஸ்கே வீரர் வாட்சன் தனது பங்கிற்கு வாண வேடிக்கையை ரசிகர்களுக்கு காட்டினார்.
12 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 211 என்ற அளவில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் இருந்தது. இதன் மூலம் 52 பந்துகளில் 110 ரன்கள் குவித்தார். இதேபோன்று ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட்டில் பெரிய அதிரடி வீரராக அறியப்பட்ட பென் டங் இந்திய பவுலர்களுக்கு சுளுக்கெடுத்தார். 53 பந்துகளை எதிர்கொண்ட அவர் 132 ரன்களை சேர்த்தார்.இதில் 10 சிக்சர்கள்,12 பவுண்டரிகள் என அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 249 என்ற அளவில் இருந்தது.
இந்த தொடரில் சச்சின் தலைமையிலான இந்திய அணி தற்போது முதல் தோல்வியை தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் புள்ளி பட்டியலில் இந்திய மாஸ்டர்ஸ் அணி முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. அடுத்ததாக மார்ச் எட்டாம் தேதி இந்திய மாஸ்டர் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இரவு 7:30 மணிக்கு நடைபெறுகிறது. ஜியோ ஹாட்ஸ்டார் இல் இலவசமாக போட்டியை பார்க்கலாம்.