Rohit Sharma: `கோப்பைகளோடு அரியணை ஏறும் ரோஹித்' - வாய்ப்புக்காக ஏங்கியிருந்தவன் உலகை வென்ற கதை

7 hours ago
ARTICLE AD BOX

'தோனியின் அரியணையில் ரோஹித்!'

சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தைத் தோற்கடித்து இந்திய அணி வென்றிருக்கிறது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெல்லும் இரண்டாவது ஐ.சி.சி கோப்பை இது. இதற்கு முன் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக தோனி மட்டுமே ஒன்றுக்கும் மேற்பட்ட ஐ.சி.சி கோப்பைகளை வென்றிருந்தார். இப்போது அந்த வரிசையில் ரோஹித்தும் இணைந்திருக்கிறார். ஆனால், ரோஹித் இந்த சாதனையை செய்ய அவரின் கையில் குறைவான வாய்ப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய புள்ளி.

ரோஹித்

'தோனி - கோலி!'

2007 காலக்கட்டத்தில் இந்திய அணியின் கேப்டனான தோனி 2014 முடிகிற வரைக்கும் ரெட் பால் அணியின் கேப்டனாக இருந்தார். 2017 ஆம் ஆண்டு வரைக்கும் ஒயிட் பால் அணியின் கேப்டனாக கிட்டத்தட்ட ஒரு பத்து ஆண்டுகளுக்கு இந்திய ஒயிட்பால் அணியை முழுமையாக வழிநடத்தியிருக்கிறார். இந்த 10 ஆண்டுகளில் 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஓடிஐ உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐ.சி.சி கோப்பைகளை இந்திய அணிக்காக வென்று கொடுத்தார். அதற்கு முன் எந்த இந்திய கேப்டனும் செய்யாத சாதனை இது. கபில் தேவ் 1983 உலகக்கோப்பையை மட்டும் வென்றுகொடுத்திருந்தார். கங்குலி ஒரு சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்திருந்தார். 2003 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியில் அவர் தலைமையில் நெருங்கி வந்து இந்திய அணி தோற்றிருக்கும். அதேமாதிரி, தோனிக்கு பிறகு கேப்டனான விராட் கோலிக்கும் ஒன்றுக்கும் அதிகமான ஐ.சி.சி கோப்பைகளை வெல்லும் வாய்ப்பு இருந்தது.

'ரோஹித் கேப்டன் ஆன கதை!'

கோலி தலைமையில் 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றது. அதேமாதிரி, 2019 ஓடிஐ உலகக்கோப்பை அரையிறுதி, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என முக்கியமான தொடர்களின் இறுதிக்கட்டம் வரை அவர் தலைமையில் இந்திய அணி நகர்ந்தது. ஆனாலும் கோப்பைகளை வெல்ல முடியவில்லை.

இந்தியாவின் ஐ.சி.சி கோப்பை ஏக்கத்தைத் தீர்த்து வைத்ததே ரோஹித் சர்மாதான். 2013 க்குப் பிறகு இந்திய அணி எந்த ஐ.சி.சி தொடரையும் வெல்லாமல் இருந்தது. முன்னெப்போதையும் விட பிசிசிஐ மீது அதிக விமர்சனங்கள் எழத் தொடங்கின. அதிக செல்வாக்குமிக்க கிரிக்கெட் போர்டாக கிரிக்கெட்டின் சூப்பர் பவராக இருந்துகொண்டு 2013 க்குப் பிறகு ஒரு ஐ.சி.சி கோப்பையைக்கூட வெல்ல முடியவில்லையே என்கிற விமர்சனம் பிசிசிஐ மீது கடுமையாக முன்வைக்கப்பட்டது. அந்த சமயத்தில் பிசிசிஐ சில கடினமான முடிவுகளை எடுத்தது.

ரோஹித்

கோப்பைகளை வெல்லாத விராட் கோலியை வம்படியாக கேப்டன் பதவியிலிருந்து கீழிறக்கியது. இத்தனைக்கும் கோலி பிசிசிஐ மத்தியில் பெரும் செல்வாக்கோடு இருந்தார். கோலிக்காக அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவையே தூக்கியெறிய பிசிசிஐ தயாராக இருந்த காலமெல்லாம் உண்டு. அப்படி செல்வாக்கோடு இருந்தவரை ஐ.சி.சி கோப்பையை வெல்ல முடியவில்லை என்கிற ஒரே காரணத்துக்காக பிசிசிஐ கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது. ரோஹித் கேப்டன் ஆக்கப்பட்டார். சீக்கிரமாக ஒரு ஐ.சி.சி கோப்பையையாவது கட்டாயம் வெல்ல வேண்டும் என்பதற்காகத்தான் ரோஹித் கேப்டனே ஆக்கப்பட்டார்.

'ஐ.சி.சி கோப்பைகளின் நாயகன்!'

மற்ற கேப்டன்களை விட மிகக்குறைந்த காலக்கட்டத்தையே கோப்பைகளை வெல்ல ரோஹித் எடுத்துக் கொண்டார். தோனி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக இருந்து 3 கோப்பைகளை வென்று கொடுத்தார். கோலி கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். ஆனால், ரோஹித்தோ 2022 தொடக்கத்தில்தான் இந்திய அணியின் கேப்டன் ஆகிறார். 2022 டி20 உலகக்கோப்பையில் அரையிறுதி வரை அணியை அழைத்துச் சென்றார். 2023 உலகக்கோப்பையில் எந்தப் போட்டியிலும் தோற்காமல் இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார். அந்த இறுதிப்போட்டி தோல்வி ரோஹித்துக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்தது. கேப்டன்சியை மாற்றலாமா எனும் பேச்சையெல்லாம் பிசிசிஐ எடுத்தது. ஆனால், அடுத்த 6 மாதத்திலேயே வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்தார். 2013 க்குப் பிறகு உலகக்கோப்பையை வெல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த இந்திய அணியை மீண்டும் உலகின் உச்சத்தில் அமர வைத்தார். ஆனாலும் மீண்டும் சோதனைகள் தொடர்ந்தது. இலங்கையில் ஓடிஐ தொடரில் ஒயிட் வாஷ், உள்ளூரில் நியூசிலாந்து தொடரில் ஒயிட் வாஷ், பார்டர் கவாஸ்கர் டிராபி தோல்வி என தோல்விகள் துரத்தியது. கோலி மீது எடுத்த கடுமையான முடிவுகளை ரோஹித்தின் மீதும் எடுக்க பிசிசிஐ தயாரானது. சாம்பியன்ஸ் டிராபி அவர் முன் வைக்கப்பட்ட கடைசி வாய்ப்பு.

ரோஹித்

'ரோஹித்தின் ஆரம்பக்கட்டம்!'

இந்த இடத்தில் ரோஹித்தின் கரியரை கொஞ்சம் பின்னோக்கி பார்த்தே ஆக வேண்டும். ஒரு கட்டத்தில் இந்திய அணியில் நிலையான இடத்தையே பிடிக்க முடியாமல் திணறி வந்தார். 2011 உலகக்கோப்பையில் ரோஹித்துக்கு பதில் பியூஸ் சாவ்லாவை தோனி அணியில் எடுத்திருந்தார். அந்த உலகக்கோப்பையில் இடம் கிடைக்காமல் துவண்டு போய் ரோஹித் இட்ட ட்வீட் இன்னமும் இணையத்தை சுற்றி வந்துகொண்டிருக்கிறது. வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருந்தார். 2011 உலகக்கோப்பைக்குப் பிறகு சீனியர்களையெல்லாம் வெளியேற்றிவிட்டு புதிய அணியை தோனி கட்டமைத்த போதுதான் ரோஹித்துக்கு ஒரு ஓப்பனராக அணிக்குள் நிலையான இடம் கிடைக்கிறது. அதன்பிறகு இரட்டைச் சதங்களாக அடித்துக் குவித்து தன்னுடைய இடத்தை நிலைப்படுத்திக் கொள்கிறார். 2019 உலகக்கோப்பையில் மட்டும் 5 சதங்களை அடித்துக் கொடுத்திருப்பார். அப்போதே ஒரு கேப்டனுக்கான பக்குவம் அவரிடம் இருக்கும். ஏனெனில், அப்போதே அவர் ஐ.பி.எல் இல் மும்பை அணியின் கேப்டனாக பல கோப்பைகளை வென்று கொடுத்திருந்தார்.

'ரோஹித்தின் தலைமைத்துவம்!'

2019 காலக்கட்டத்தில் ரோஹித்தும் தவாணும் ஒப்பனிங் இறங்குவார்கள். தவாண் எடுத்த எடுப்பிலேயே அட்டாக்கிங்காக ஆடுவார். ரோஹித் நின்று ஆடுவார். இதுதான் அவர்களின் பாணி. ஒரு கட்டத்தில் தவாணுக்குக் காயம் ஏற்பட ராகுல் ஓப்பனராக அணிக்குள் வந்தார். ராகுல் புதிதாக உள்ளே வருகிறார் என்பதால் ரோஹித் ரிஸ்க் எடுத்து அட்டாக்கிங்காக ஆடி ராகுலுக்கு நின்று ஆடுவதற்கான நேரத்தை ஏற்படுத்திக் கொடுத்திருப்பார். அதுதான் ரோஹித். தனக்காக மட்டுமல்லாமல் அணியின் மற்ற வீரர்களுக்காகவும் அணியின் நலனுக்காகவும் யோசிப்பது அவரிடம் இயல்பாகவே இருக்கும். இப்போதும்கூட எடுத்துக்கொள்ளுங்கள். அவரால் நின்று நிதானமாக பெரிய இன்னிங்ஸை ஆட முடியும். ஆனாலும் அணிக்கு Fearless Cricket குணத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் ஒரு அதிரடி மொமன்ட்டமை கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் அவ்வளவு ரிஸ்க் எடுத்து அதிரடியாக ஆடுவார். அணியின் நலனை முன் நிறுத்தும் அந்த பக்குவமும் தலைமைப் பண்பும் அவரிடம் எப்போதுமே இருந்திருக்கிறது. அந்த பண்புதான் அவரை சரிவிலிருந்தும் மீட்டு வந்திருக்கிறது.

ரோஹித்

'கடைசி வாய்ப்பு!'

கடைசி வாய்ப்பாக சாம்பியன்ஸ் டிராபி முன்வைக்கப்பட்ட போதும் அழுத்தமின்றி அணியை சிறப்பாக வழிநடத்தி வெல்ல வைத்திருக்கிறார். ஒரு ஐ.சி.சி கோப்பையையாவது வெல்ல வேண்டும் என்கிற ஏக்கத்தோடுதான் பிசிசிஐ ரோஹித்தை கேப்டனாக்கியது. ரோஹித் ஒன்றல்ல இரண்டை வென்று கொடுத்துவிட்டார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோனி அமர்ந்திருக்கும் அரியணையைப் போலவே தானும் ஒரு அரியணையை உருவாக்கி அமர்ந்திருக்கிறார். அதுவும் மிகக் குறுகிய காலகட்டத்திலேயே அதை சாத்தியமாக்கியிருக்கிறார். வாழ்த்துகள் ரோஹித்!

Read Entire Article