Rohit Sharma Hat-Trick in IPL: 18வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. சுமார் 2 மாத காலம் நடக்கும் இந்த டி20 திருவிழாவில் கோப்பையை வெல்லப்போவது யார்? என்பதற்காக 10 அணிகள் மல்லுகட்டுகின்றன.

மும்பைக்கு எதிராக ரோகித்:

ஐபிஎல் கிரிக்கெட் பல சுவாரஸ்யமான மற்றும் அசாத்தியமான நிகழ்வுகளை வரலாறுகளாக கொண்டுள்ளது. அந்த வகையில், மும்பை அணிக்காக கேப்டனாக இருந்து 5 முறை சாம்பியன் பட்டம் பெற்றுத் தந்த ரோகித் சர்மா, தனது மாயாஜால பந்துவீச்சால் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து மும்பை அணியையே தோற்கடித்த சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கிறதா?

மும்பை அணியின் ராஜாவாக உலா வரும் ரோகித் சர்மா மும்பை அணிக்கு முன்னதாக டெக்கான் சார்ஜர்ஸ் ஐதரபாத் அணிக்காக ஆடினார். 2009ம் ஆண்டு மும்பை அணிக்கு எதிராக மே 6ம் தேதி நடந்தது. சச்சின் தலைமையிலான மும்பை அணியும், கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் செஞ்சுரியனில் மோதின.

7வது பந்துவீச்சாளர் ரோகித் சர்மா:

இந்த போட்டியில் முதலில் ஆடிய டெக்கான் சார்ஜர்ஸ் ரோகித் சர்மாவின் 38 ரன்கள் உதவியுடன் 145 ரன்கள் எடுத்தது. 146 ரன்கள் இலக்குடன் ஆடிய மும்பை அணிக்கு ஜெயசூர்யா - சச்சின் ஒற்றை இலக்கில் அவுட்டாக, பினால் ஷா - ஜேபி டுமினி ஜோடி அபாரமாக ஆடியது.

பினால் ஷா 29 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ப்ராவோ 13 ரன்னில் அவுட்டானார். 97 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த மும்பையின் வசம் இருந்த வெற்றியை ரோகித் சர்மா தட்டிப்பறித்தார். ரியான் ஹாரிஸ், ஆர்பி சிங், ஹர்மித் சிங், ஸ்மித், ஷோயிப் அகமத், சுமன் ஆகிய 6 பந்துவீச்சாளர்களுக்குப் பிறகு 7வது பந்துவீச்சாளராக ரோகித் சர்மாவை கில்கிறிஸ்ட் பயன்படுத்தினர்.

ஹாட்ரிக் எப்படி?

ரோகித் சர்மா தனது முதல் ஓவராக 16வது ஓவரை வீசினார். அதற்கு தக்க பலன் கிடைத்தது. அந்த ஓவரின் 5வது பந்தில் அபிஷேக் நாயர் 1 ரன்னிலும், அடுத்து வந்த ஹர்பஜன்சிங் டக் அவுட்டும் அடுத்தடுத்து ஆனார்கள். இதையடுத்து, மீண்டும் 18வது ஓவரை ரோகித் சர்மா வீசினார்.

அந்த ஓவரின் முதல் பந்திலே டெக்கான் சார்ஜர்சை அச்சுறுத்திய ஜேபி டுமினியை ரோகித் சர்மா அவுட்டாக்கினார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் தனது முதல் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார். மேலும், அவரது அதே ஓவரில் செளரப் திவாரியும் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

டெக்கான் சார்ஜர்ஸ் வெற்றி:

இதனால், அந்த போட்டியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த சீசனின் டைட்டில் வின்னர் பட்டத்தையும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியே கைப்பற்றியது. பின்னாளில் ரோகித் சர்மா மும்பை அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று 5 முறை சாம்பியன் பட்டம் பெற்றுத் தந்தார்.