ARTICLE AD BOX
உலகின் பணக்கார கிரிக்கெட் லீக்காக இருந்துவரும் ஐபிஎல் தொடர் 2008 முதல் விளையாடப்பட்டு வருகிறது. 17 வெற்றிகரமான சீசன்களை கடந்து 18வது சீசனாக 2025 ஐபிஎல் தொடர் தடம்பதித்துள்ளது.
இதில் மிகவும் வெற்றிகரமான அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பை வென்று சாதனை படைத்துள்ளன. அந்த அணிகளை தொடர்ந்து 3 கோப்பைகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3வது இடத்தில் நீடிக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத், குஜராத் டைட்டன்ஸ் முதலிய அணிகள் தலா 1 முறை கோப்பை வென்று அசத்தியுள்ளன.
ஆனால் 9 முறை அரையிறுதிவரையிலும், 3 முறை இறுதிப்போட்டிவரையிலும் தகுதிபெற்ற ஆர்சிபி அணி 2009, 2011 மற்றும் 2016 என மூன்று ஐபிஎல் இறுதிப்போட்டிகளில் தோல்வியை கண்டு சோகமுகத்துடன் வெளியேறியது.
2009-ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராகவும், 2011 ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராகவும், 2016 ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் தோல்விற்று இன்றுவரை கோப்பை வெல்லாத அணியாக இருந்துவரும் ஆர்சிபிக்கு 18வது ஐபிஎல் சீசனிலாவது கோப்பை கனவு நிறைவேறுமா என்ற ஆவலுடன் ஆர்சிபி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ரஹானே அதிரடியால் 174 ரன்கள் சேர்த்த KKR!
இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது ஆர்சிபி. கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடக்க போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசியது. முதல் ஓவரிலேயே கேகேஆர் அணியின் தொடக்க வீரர் டி-காக்கை வெளியேற்றிய ஹசல்வுட், ஆர்சிபிக்கு சிறந்த தொடக்கத்தை கொடுத்தார். ஆனால் 3 ஓவருக்கு 9 ரன்கள் என சோகமான நிலையில் இருந்த கேகேஆர் அணி, கேப்டன் அஜிங்கியா ரஹானேவின் அசுரத்தனமான பேட்டிங்கால் 10 ஓவரில் 100 ரன்களை கடந்து அசத்தியது.
6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என நாலாபுறமும் பந்துகளை சிதறடித்த ரஹானே 56 ரன்களும், 5 பவுண்டரிகள் 3 சிச்கர்கள் என துவம்சம் செய்த சுனில் நரைன் 44 ரன்களும் அடித்து அசத்த 10.3 ஓவரில் 109 ரன்களை எட்டியது கொல்கத்தா அணி. எப்படியும் 230 ரன்களாவது கேகேஆர் அடிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தபோது, சுழற்பந்துவீச்சில் ஒரு மாயாஜாலம் நிகழ்த்திய க்ருணால் பாண்டியா ரஹானாவை வெளியேற்றியது மட்டுமில்லாமல், 23 கோடிக்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் ரிங்கு சிங் என அனைவரையும் அடுத்தடுத்து வெளியேற்றி கலக்கிப்போட்டார். 4 ஓவரில் 29 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய க்ருணால் பாண்டியா, ஆட்டத்தை ஆர்சிபி அணியின் பக்கம் திருப்பிவிட்டார்.
அடுத்தவந்த அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸலை சுயாஷ் ஷர்மா போல்டாக்கி வெளியேற்ற 20 ஓவர் முடிவில் 174 ரன்கள் மட்டுமே சேர்த்தது கொல்கத்தா அணி.
நம்ம விராட் கோலியா இது?
175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய ஆர்சிபி அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தொடக்கம் முதலே சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்ட பிலிப் சால்ட் கேகேஆர் அணியின் முக்கிய பவுலரான வருண் சக்கரவர்த்திக்கு எதிராக ஒரே ஓவரில் 21 ரன்கள் அடித்தார். அதனைத்தொடர்ந்து பந்துவீசிய ஸ்பென்சர் ஜான்சன் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை அனுப்பி வானவேடிக்கை காட்டிய விராட் கோலி, வருண் சக்கரவர்த்திக்கு எதிராக ஸ்வீப் ஷாட்டில் சிக்சரை பறக்கவிட்டு மிரட்டிவிட்டார். 9 பந்தில் 25 ரன்களை கடக்க, நம்ம விராட் கோலியா என பல ரசிகர்களும் ஆச்சரியப்படவே செய்தனர்.
9 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசிய சால்ட் 56 ரன்கள் அடித்து வெளியேற, 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விரட்டிய சேஸ்மாஸ்டர் விராட்கோலி ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். இறுதியில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய கேப்டன் பட்டிதார் 16 பந்தில் 34 ரன்கள் அடித்து அசத்தினார், உடன் லியாம் லிவிங்ஸ்டன் 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட 16.2 ஓவரிலேயே இலக்கை எட்டிய ஆர்சிபி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது. ஆட்டநாயகனாக க்ருணால் பாண்டியா தேர்வுசெய்யப்பட்டார்.
கேகேஆர் அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்த விராட் கோலி, ஐபிஎல் கிரிக்கெட்டில் சிஎஸ்கே, டெல்லி, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் என 4 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக 1000 ரன்களை அடித்த ஒரே வீரராக மாறி மீண்டும் ஒரு மகுடத்தை சூட்டிக்கொண்டார்.
முதல் போட்டியிலேயே எழுந்த சர்ச்சை..
ஏற்றம், இறக்கம் என சென்ற போட்டியில் இரண்டு அணிகளுமே நிறைய தவறுகளை செய்தன. இந்த சூழலில் போட்டியின் 8வது ஓவரில் சுனில் நரைனின் பேட்டானது ஸ்டம்பை தாக்கி பெய்ல் கீழே விழுந்தபோதும் அவுட் கொடுக்கப்படவில்லை.
முதலில் ஆர்சிபி வீரர்கள் கவனிக்க தவறினாலும், பின்னர் பெய்ல் விழுந்ததை பார்த்து விக்கெட்டுக்கு அப்பீல் செய்யப்பட்டது. ஆனால் பந்து கீப்பரின் கையில் சென்றபிறகே பேட் ஸ்டம்ப்பில் பட்டதால் அவுட் கொடுக்கப்படவில்லை. அந்த பந்து டெட் பாலாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அது அவுட்தான் என ஆர்சிபி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு விரக்தியை வெளிப்படுத்தினர். போட்டியில் நடைபெற்ற இந்த சர்ச்சைக்குரிய சம்பவம் பேசுபொருளாக மாறியது.
நாளை நடைபெறவிருக்கும் இரண்டு போட்டிகளில் ஹைத்ராபாத் அணி ராஜஸ்தானையும், சென்னை அணி மும்பையையும் எதிர்கொள்ளவிருக்கின்றன.