ARTICLE AD BOX
தங்க நகை புழக்கம் என்பது தமிழர்கள் வாழ்வியலில் ஒன்றாக காணப்படுகிறது. நகைகள் அணிவதோடு மட்டுமல்லாமல் எந்த ஒரு அவசர & எதிர்கால தேவைக்கும் நகைகளை அடகு வைப்பதே பிரதானமாக பார்க்க முடிகிறது. தென்னிந்தியர்களின் பிரதான முதலீடாகவும் தங்க நகைகளே இருந்து வருகின்றன. தனியார் வட்டிக்கடைகள் போன்று அல்லாமல் வங்கிகளில் இருக்கும் பாதுகாப்புத் தன்மைக்காகவும் வெளிப்படைத் தன்மைக்காகவுமே பெரும்பான்மை மக்கள் தங்கள் தேவைகளுக்கு நகைகளை அடகு வைக்க வங்கிகளையே நாடுகின்றனர். இந்த சூழலில் ஆர்பிஐ வைத்த திடீர் கட்டுப்பாட்டின் காரணமாக வங்கிகளும் கடன் வைத்த பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
ஆர்பிஐ சொல்வதென்ன ?
வங்கிகள் நகையை வைத்து அளிக்கும் கடன்களுக்கு பொதுவாக ஒரு வருட கால அவகாசம் கொடுக்கும். ஒரு வருடத்திற்குள்ளாக நகையை மீட்டோ அல்லது மறுஈடோ செய்து கொள்ள வேண்டும். தங்களிடம் பணம் இருந்து நகையை மீட்க நினைப்பவர்கள் கடனுக்கான அசல் தொகையையும் வட்டியையும் செலுத்தி நகையை மீட்பார்கள். பணம் இல்லாத பட்சத்தில் கடனுக்கான வட்டியை மட்டும் செலுத்தி அடுத்த ஒரு வருடத்திற்கு அதே நகையை மறுஈடு வைத்துக் கொள்ளலாம். இதுவே இதுவரை இருந்த நடைமுறை. தற்போது ஆர்பிஐ இதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்திருப்பதாக வங்கி வட்டாரங்களிலிருந்து தகவல் வெளிவந்திருக்கின்றன. அதாவது, ஓராண்டு முடிந்து நகையை மறுஈடு வைக்க விரும்பினால் கடனுக்கான வட்டி தொகையை மட்டும் செலுத்தினால் போதாது எனவும் முழு அசல் தொகையையும் சேர்த்து செலுத்த வேண்டும் எனவும் ஆர்பிஐ கூறியிருக்கிறது.
மேலும் படிக்க | KYC புதுப்பித்தல் என்றால் என்ன? வங்கிகள் சொல்லும் விதிகள்!
இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். "எங்ககிட்ட அசல் பணம் இருந்தா நாங்க நகையே திருப்பி விடுவோமே ! திரும்ப ஏன் அடகு வைக்கப் போறோம் ?" என்பதே பெரும்பாலான வாடிக்கையாளர்களின் விவாத கூற்றாக இருக்கிறது. "எந்த காசும் இல்லாம கடைசியா நகையை நம்பி தான் வைக்கிறோம்.. இப்ப இதுலயும் கைய வச்சா எப்படி ? " என்று வைக்கும் அவரது விமர்சனங்களிலும் நியாயம் இருக்கிறது.
வங்கி அதிகாரிகளுக்கும் இது சவால் நிறைந்த சூழலாக இருக்கிறது. ஆர்பிஐ நடத்தும் வருடாந்திர ஆய்வு ஒரு புறம் வாடிக்கையாளர்களின் தொடர் விமர்சனம் என தினம் தினம் சிக்கல்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர். முழு அசலையும் செலுத்த முடியாத பட்சத்தில் வாடிக்கையாளர்களிடம் ‘அதே வங்கிக் கிளையில் இருக்கும் தங்களின் நெருங்கிய உறவினர்களின் பேரிலே அல்லது தங்களின் நம்பகத்தன்மை உள்ளவர்களின் பெயரிலே (18 வயதிற்கு மேற்பட்ட) அந்த நகையை மாற்றி வைத்தால் அசல் பணத்தை செலுத்த தேவையில்லை’ என எடுத்துக்கூறி வேறு வழியில்லாத வாடிக்கையாளர்களை அந்த நிர்பந்தத்திற்கு உள்ளாக்குகிறது. ஆனால், கடன் வாங்கிய வாடிக்கையாளரும் தற்போது பெயர் மாற்ற இருக்கும் வாடிக்கையாளரும் வங்கிக்குள் வந்து கையெழுத்திட வேண்டும். வங்கி கிளைகளுக்குள் காணும் கூட்டத்தை கணக்கிட்டோமானால் இது இருவருக்குமே நேர விரயத்தை ஏற்படுத்துவதாகும்.
நெருங்கிய உறவினராகவோ தெரிந்த நபராகவோ இருப்பினும் தங்களுடைய நகைகள் வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றுவது சிக்கல்களை ஏற்படுத்தும் என அஞ்சி கந்து வட்டிக்காரர்களிடம் சென்று அசல் தொகைக்கான பணத்தை அதிக வட்டியுடன் கடன் வாங்கும் சூழல் ஏற்படுகிறது. ஒரு கடனை அடைக்க கூடுதல் வட்டியுடன் கூடிய மற்றொரு கடனை வாங்குவதா என்ன புலம்பலும் அவர்களின் உள்ளக் கணக்கில் தோன்றுகிறது. இது மறைமுகமாக கந்து வட்டியை ஊக்குவிப்பதாக இருப்பதாக கருதப்படுகிறது.
கந்து வட்டியை ஒழிக்கவே ஒழுங்கமைக்கப்பட்ட வங்கிகள் தோன்றின. அந்த வங்கிகளை ஒழுங்கமைக்க ஆர்பிஐ தோன்றியது. தற்போது ஆர்பிஐ மூலமாகவே பொதுமக்களை கந்துவட்டி காரர்களிடம் சிக்க வைக்கிறது.

டாபிக்ஸ்