ARTICLE AD BOX
புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளில் சமைக்கப்படும் இந்த பஞ்ச்ஃபூரன் என்பது 5 மசாலாப் பொருட்களின் சுவையைக் கொண்டது. இதில் சோம்பு, சீரகம், கருஞ்சீரகள், கடுகு மற்றும் வெந்தயம் என 5 மசாலாப் பொருட்கள் உள்ளது. இது மேற்கு வங்கம் மற்றும் பீகாரிலும் சமைக்கப்படும் ஒரு உணவாகும். இதை செய்வது மிகவும் எளிது. இதை செய்வது எப்படி என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து செய்து சாப்பிட்டு பாருங்கள்.
தேவையான பொருட்கள்
• உருளைக்கிழங்கு – 3
• பன்னீர் – 150 கிராம்
• குடை மிளகாய் – 1
• சோம்பு – ஒரு ஸ்பூன்
• கடுகு – கால் ஸ்பூன்
• சீரகம் – கால் ஸ்பூன்
• கருஞ்சீரகம் – கால் ஸ்பூன்
• வெந்தயம் – கால் ஸ்பூன்
• எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
• தக்காளி – 2
• மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
• கஷ்மீரி மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
• மல்லித் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
• கரம் மசாலா – ஒரு ஸ்பூன்
• சீரகத் தூள் – கால் ஸ்பூன்
• மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
• பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
• இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்
• உப்பு – தேவையான அளவு
செய்முறை
1. உருளைக்கிழங்கின் தோலை உரித்து அதை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவேண்டும்.
2. ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்க வேண்டும். அதில் வெந்தயம், சோம்பு, சீரகம், கருஞ்சீரகம் மற்றும் கடுகு சேர்த்து தாளிக்கவேண்டும். இவையனைத்தும் பொரிந்தவுடன், அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து தாளித்து, பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.
3. அடுத்து இஞ்சி – பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவேண்டும்.
4. மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து வதக்கவேண்டும். இவையனைத்தையும் வதக்கி, தக்காளியை சேர்த்து நன்றாக மசித்துக்கொள்ளவேண்டும்.
5. தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். குறைவான தீயில் சில நிமிடங்கள் கொதித்த பின்னர், தக்காளி வெந்தவுடன், உருளைக்கிழங்கை சேர்த்து, சில நிமிடங்கள் அரை கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவேண்டும்.
6. மூடியிட்டு உருளைக்கிழங்கை வேகவிடவேண்டும். அடுத்து பொடியாக நறுக்கிய குடை மிளகாய் மற்றும் பன்னீர் சேர்த்துக்கொள்ளவேண்டும். கரம் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிவிட்டு, அடுப்பை அணைத்துவிட்டு, மூடிபோட்டு மூடி சில நிமிடங்கள் அப்படியே விடவேண்டும்.
7. மல்லித்தழை தூவி இறக்கினால், சூப்பர் சுவையான உருளைக்கிழங்கு பன்னீர் பஞ்ச்ஃபூரன் சாப்பிட தயார். இதை பராத்தா, ரொட்டி, சப்பாத்தி, பூரி நான் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை ஒருமுறை ருசித்தால் நீங்களே மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். அத்தனை சுவையானது. ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்