தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று நடக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா விறுவிறுப்பாக செங்கல்பட்டு பூஞ்சேரியில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யுடன் இணைந்து தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றுள்ளார்.

விஜய்யுடன் மேடையில் பிரசாந்த் கிஷோர்:

தவெக தலைவர் விஜய்யுடன் இணைந்து மேடைக்கு வந்தது மட்டுமின்றி விஜய்க்கு மிக அருகில் மேடையிலே அமர்ந்துள்ளார் பிரசாந்த் கிஷோர். 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் செயல்படுகிறார்.

யார் இந்த பிரசாந்த் கிஷோர்?

பிரசாந்த் கிஷோர் பீகாரில் உள்ள ரோடாஸ் மாவட்டத்தில் உள்ள சாசரமில் உள்ள கோனார் கிராமத்தில் பிறந்தவர். பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவர் 2011ம் ஆண்டு வரை ஐநா-வில் பணியாற்றினார். சிறு வயது முதலே அரசியலில் ஆர்வம் கொண்ட பிரசாந்த் கிஷோர் 2011ம் ஆண்டு குஜராத்தில் நரேந்திர மோடி மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட தன்னுடைய முதல் அரசியல் பிரச்சார வியூகத்தை வகுத்தார்.

அதன்மூலம் மோடியிடம் நெருக்கமான அவர் அப்போது இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்த சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் மோடியை பிரபலம் அடைய வைத்து அவரை முன்னிறுத்தி 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைச் சந்தித்தது பா.ஜ.க. அந்த தேர்தலில் காங்கிரஸ் மீது இருந்த அதிருப்தியை பயன்படுத்தி நாடு முழுவதும் மோடியின் செல்வாக்கை அதிகரிக்க முக்கிய பங்காற்றியவர் பிரசாந்த் கிஷோர். இவரது ஆலோசனையின் கீழ் 2014ம் ஆண்டு இயங்கிய பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

தேர்தல் பணிகள்:

அதன்பின்பு, நாடு முழுவதும் பிரசாந்த் கிஷோர் பிரபலமானார். இவரது தேர்தல் வியூக செயல்பாடுகளை கவனித்த பிற அரசியல் கட்சிகள் தங்களுக்கும் பணியாற்ற அவரை அழைக்கத் தொடங்கின. பீகாரில் நிதிஷ்குமாரின் ஜனதாதளம், டெல்லியில் ஆம் ஆத்மி, ராஜஸ்தானில் காங்கிரஸ், ஆந்திராவில் ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு பணியாற்றினார். இந்த நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக-விற்கு பணியாற்றினார்.

இவர் பணியாற்றிய தேர்தல் களங்களில் இவருக்கு வெற்றியே வசமானது. இதன் காரணமாக தேசிய அளவில் எந்த மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தாலும் பிரசாந்த் கிஷோரின் பிரச்சார வியூகங்களை கேட்க அரசியல் கட்சிகள் முன்வந்தது. இந்த சூழலில், தமிழக அரசியலில் முக்கியமான கட்சியாக உருவெடுக்க கடந்தாண்டு உருவாகியது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.

தமிழக வெற்றிக் கழகம் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த அந்த கட்சியின் தலைவர் விஜய் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். அதன் ஒரு அங்கமே அவர் பிரசாந்த் கிஷோரை தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக ஆலோசகராக அவரை ஒப்பந்தம் செய்திருப்பது.

பிரசாந்த் கிஷோர் முன் உள்ள சவால்?

பிரசாந்த் கிஷோர் இதுவரை தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றிய மாநிலங்களில் அவர் பணியாற்றிய கட்சியில் மோடி, அர்விந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், மு.க.ஸ்டாலின் என்று வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த கட்சிகளுக்கும், தலைவர்களுக்குமே அவர் பணியாற்றி உள்ளார்.

ஆனால், தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தல் அரசியல் கட்சிகளுக்கே மிகவும் சவாலானதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டை கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கு மத்தியில் தமிழ் திரையுலகம் தந்த கோடிக்கணக்கான ரசிகர்களை நம்பி அரசியல் களத்தில் புகுந்துள்ளார் விஜய்.

திரையில் கோடிக்கணக்கான ரசிகர்களால் வெற்றி நாயகனாக உலா வந்த விஜய், அவர்களின் வாக்குகளை தேர்தலில் பெறுவாரா? என்பது மிகப்பெரிய சவால் ஆகும். மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனுபவமிக்க தி.மு.க., எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர்கள் கொண்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆகிய கட்சிகளின் வலுவான வாக்கு சதவீதத்தை எப்படி விஜய் வீழ்த்தப் போகிறார்? என்பது உள்ளிட்ட முக்கிய சவால்கள் பிரசாந்த கிஷோர் முன் உள்ளது.