Pakistan: `இண்டண்ட் இல்லாத அணுகுமுறை; அப்டேட் இல்லாத நிர்வாகம்!' - எங்கேயெல்லாம் சறுக்குகிறது பாக்?

2 days ago
ARTICLE AD BOX
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியை சுற்றி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள்.

நிறைய விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தது. ஆனால், பில்டப் கொடுத்த அளவுக்கு போட்டியில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. இந்திய அணி ரொம்பவே சௌகரியமாக போட்டியை வென்றுவிட்டது. இந்தப் போட்டி என்றில்லை. சமீபமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் கொடுக்கப்படும் பில்டப்கள் அளவுக்கு அத்தனை சுவாரஸ்யமாக இருப்பதில்லை என்பதே உண்மை. காரணம், பாகிஸ்தான் அணியின் சறுக்கல்.

ஒரு காலத்தில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் சமபலத்திலான அணியாக இருந்தன. பாகிஸ்தான் அணியில் பௌலர்கள் வலுவாக இருந்தால் இந்திய அணியில் பேட்டர்கள் வலுவாக இருப்பார்கள். இதனால் சுவாரஸ்யமளிக்கும் வகையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் இருந்தன. சமீபத்தில் நெட்ப்ளிக்ஸில் The Greatest Rivalry India vs Pakistan என்ற சீரிஸ் வெளியாகியிருந்தது. 2004-05 காலக்கட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதை மையப்படுத்தி அந்த டாக்குமெண்ட்ரி சீரிஸ் உருவாக்கப்பட்டிருக்கும்.

மொத்தம் மூன்று எபிசோட்கள். அதுவே அத்தனை சுவாரஸ்யமாக இருக்கும். அந்த சீரிஸை லைவ்வில் பார்த்த கிரிக்கெட் ரசிகர்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் என நினைக்க வைக்கும். சமீபத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே அப்படியான போட்டிகளே அமையவில்லை என்பதுதான் பிரச்சனை. கடைசியாக 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டி சிறப்பாக இருந்தது. அதேபோல டி20 உலகக்கோப்பையில் கோலி ஒரு இன்னிங்ஸ் ஆடியிருப்பாரே. அந்த இரண்டு போட்டிகளையும் தவிர்த்து எல்லாமே ஒன் சைட் போட்டிகள்தான்.

IND VS PAK
PAK v IND: 'ஸ்பின்னர்களுக்கு எதிராக ரிஸ்க் எடுக்கக்கூடாது' - கேம் ப்ளான் பகிர்ந்த கோலி

பாகிஸ்தான் அணி இன்னமும் அப்டேட்டே ஆகாமல், 10-15 ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்ததோ அப்படியேத்தான் இருக்கிறது. இந்த சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. போட்டியை நடத்தும் நாடாக இருந்துகொண்டு அந்த அணியால் அரையிறுதியை கூட எட்டமுடியவில்லை என்பது வேதனையான விஷயம். நவீன கிரிக்கெட் சூழலுக்கு ஏற்ப அப்டேட்டே ஆகாமல் தேங்கி நிற்கிறார்கள் என்பதை அவர்கள் கவனிக்கவே இல்லை.

இந்த சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை 2 போட்டிகளில் ஆடியிருக்கிறார்கள். இரண்டு போட்டிகளிலும் அவர்களுடைய பேட்டர்கள் அட்டாக்கிங்காக ஆட முயற்சிக்கவே இல்லை. முழுக்க முழுக்க தற்காப்பாகத்தான் ஆடிக்கொண்டிருந்தனர். நியூசிலாந்துக்கு எதிராக மட்டும் 162 டாட்களை ஆடியிருந்தனர். நேற்று இந்தியாவுக்கு எதிராக 152 டாட்களை ஆடியிருந்தனர். அதாவது ஒரு இன்னிங்ஸில் 50% க்கும் அதிகமான பந்துகளை டாட் ஆடியிருக்கிறார்கள். 'Bazball' என பெயரிட்டு ஓடிஐ யை டி20 ஆக பாவித்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இங்கிலாந்து வைக்கும் 350+ டார்கெட்டை ஆஸ்திரேலியா சேஸ் செய்துகொண்டிருக்கிறது.

இந்தியாவின் எதிர்காலம்... மீண்டும் உதவுமா சாம்பியன்ஸ் டிராபி - 2025?

இப்படியொரு காலத்தில்தான் முதல் 40 ஓவர்களை பார்த்து ஆட வேண்டும். கடைசி 10 ஓவர்களில் அட்டாக் செய்ய வேண்டும் என்கிற பழைய அணுகுமுறையுடனே ஆடி வருகின்றனர். டாட்கள் ஆடுவது மட்டுமில்லை. இன்னும் அவர்களிடம் நிறைய பிரச்னைகள் இருக்கிறது. இப்போதும் பல கேட்ச்களை ட்ராப் செய்கிறார்கள். அநாயசமாக மிஸ் பீல்ட் செய்கிறார்கள். டைரக்ட் ஹிட்டுக்கெல்லாம் முயற்சிப்பதே இல்லை.

இந்திய அணியில் ஏன் 5 ஸ்பின் பௌலர்கள் என ஒருமுறை ரோஹித்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, 'அதில் இருவர்தான் முழுநேர ஸ்பின்னர்கள். மற்றவர்கள் ஆல்ரவுண்டர்கள், பேட்டிங்கிலும் பங்களிப்பு செய்வார்கள்.' என்றார்.

இந்திய அணியிடம் தேவைக்கும் அதிகமாக பௌலிங் ஆப்சன் இருந்தது. ஆனால், பாகிஸ்தானின் 5-வது பௌலரே முழுமையான பௌலர் இல்லை. பேட்டிங், பௌலிங் இரண்டிலும் ஏகப்பட்ட ஆப்சன்களை கொடுக்கும் வகையில் அணிகள் கட்டமைக்கப்படும் நிலையில் பாகிஸ்தான் அணி இன்னும் பௌலிங் ஆப்சன் இல்லாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதுவும் இப்போதைய சூழலில் ஆசிய நாடுகளில் பலவீனமான ஸ்பின் அட்டாக்கை வைத்திருக்கும் அணி பாகிஸ்தானே. எல்லாவிதத்திலும் அந்த அணி 15 ஆண்டுகளுக்கு முன்பே தேங்கி நிற்கிறது.

இஷ்டத்துக்கு கேப்டன்களையும் பயிற்சியாளர்களையும் மாற்றுவது, உள்ளூர் போட்டிகளை முறைப்படி நடத்தாது என பாகிஸ்தானின் வீழ்ச்சிக்கு அந்த அணியின் கிரிக்கெட் போர்டும் மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

கிரிக்கெட் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும், அதன் எல்லைகள் இன்னும் பரவ வேண்டுமெனில் பாகிஸ்தான் போன்ற ஒரு நாடு வலுவாக இருப்பதும் முக்கியம். அடிப்படையிலேயே இருக்கும் தவறுகளை திருத்திக் கொண்டால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் மீண்டெழ முடியும்.

INDvsPAK: 'எந்த ஏமாற்றமும் இல்லை; பாகிஸ்தானுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை' - அக்தர் காட்டம்

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article