ARTICLE AD BOX
2025 சாம்பியன்ஸ் டிராபியை தலைமையேற்று நடத்திய பாகிஸ்தான் அணி, தொடரிலிருந்து முதல் அணியாக பரிதாபமாக வெளியேறியது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி முடித்த கையோடு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி, 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
91 ரன்னுக்கு சுருண்ட பாகிஸ்தான்..
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் அணியை சல்மான் ஆஹாவும், நியூசிலாந்து அணியை மைக்கேல் பிரேஸ்வெல்லும் கேப்டன்களாக வழிநடத்தினர்.
டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய பாகிஸ்தானின் முகமது ஹரிஸ் மற்றும் ஹசன் நவாஸ் இருவரும் 0 ரன்னில் அவுட்டாகி வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் சல்மான் ஆஹா 18 ரன்னில் வெளியேற, தொடர்ந்து வந்த இர்ஃபான் கான், சதாப் கான், அப்துல் சமாத், ஷாஹீன் அப்ரிடி என அனைவரும் ஓரிலக்க ரன்னில் நடையை கட்டினர்.
தனியாளாக போராடிய குஷ்தில் 3 சிக்சர்களுடன் 30 ரன்கள் அடிக்க 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் 91 ரன்னில் சுருண்டது.
92 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய நியூசிலாந்து அணி 10.1 ஓவர் முடிவில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது. அதிகபட்சமாக டிம் சீஃபெர்ட் 44 ரன்கள் அடித்தார். ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய கைல் ஜேமிசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.