Mushfiqur Rahim: முஷ்பிகுர் ரஹீம் சுமார் 20 ஆண்டுகளாக வங்கதேச அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

ஓய்வை அறிவித்த முஷ்பிகுர் ரஹீம்:

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக, வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் தனது சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளார். அதில், ” சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற முடிவு செய்துள்ளேன். உலக அளவில் நமது சாதனைகள் குறைவானது தான் என்றாலும், ஒன்று நிச்சயம்: நான் என் நாட்டிற்காக களத்தில் இறங்கும்போதெல்லாம், அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையை 100% க்கும் அதிகமாகக் கொடுத்தேன். கடந்த சில வாரங்கள் எனக்கு மிகவும் சவாலனதாக இருந்தது. இதுதான் எனது முடிவு என்பதை நான் உணர்ந்தேன். குரானில் சொல்லப்பட்டு இருப்பது போல, யாரை கவுரவிக்க வேண்டுமோ அவரை இறைவன் கவுரவிப்பார். 19 ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்த எனது குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

சாம்பியன்ஸ் ட்ராபியில் அவுட்:

அண்மையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியிலும் வங்கதேச அணி களமிறங்கியது. ஆனால், ஒரு வெற்றியை கூட பெற முடியாமல் அந்த அணி போட்டியிலிருந்து வெளியேறியது. இந்நிலையில் தான் அந்த அணியின் மூத்த வீரரான ரஹிம் தனது ஓய்வை அறிவித்துள்ளார். முஷ்பிகுர் 2005 ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளில் வங்கதேச அணி சார்பில் அறிமுகமானார். இங்கிலாந்து அணிக்கு எதிரான அவரது முதல் போட்டியின்போது, ரஹீமின் வயது வெறும் 18 ஆண்டுகள் மற்றும் 17 நாட்களே ஆகும். தொடர்ந்து அடுத்த ஓராண்டு இடைவெளியிலேயே அதாவது 2006ம் ஆண்டிலேயே ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் களம்கண்டார். தற்போது அவருக்கு வயது 37 என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: IND Vs NZ Final 2025: பொளந்து கட்டுமா இந்தியா? பொட்டலம் கட்டுமா நியூசிலாந்து? ரோகித் Vs சாண்ட்னர் - ஃபைனல் ஆபத்துகள்

இந்தியாவிற்கு எதிரான இன்னிங்ஸ்

ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாக ஓராண்டே ஆன நிலையில், 2007ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அபாரமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார். 56 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து, இந்தியாவை வீழ்த்த வங்கதேச அணியில் முக்கிய பங்கு வகித்தார். இதன் மூலம், அந்த போட்டியிலிருந்தே இந்திய அணி வெளியேறியது குறிப்பிடத்தக்கது. அந்த தோல்வியை இந்திய ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

கேப்டனாகவும் அசத்தல்:

முஷ்பிகுர் ஒருநாள் போட்டிகளில் பல ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். மேலும் தனது அணியை கேப்டனாகவும் வழிநடத்தியுள்ளார். அவர் தனது 274 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஒன்பது சதங்கள் மற்றும் 49 அரைசதங்களுடன் 7795 ஒருநாள் ரன்களை எடுத்துள்ளார். 37 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 11 வெற்றிகளையும் பெற்று தந்துள்ளார்.