ARTICLE AD BOX
இன்றைய தேதிக்கு இந்திய சினிமாவின் ஹாட் டாப்பிக் நடிகர் மோகன்பாபுதான். நிலதகராறு பிரச்சினையில், செளந்தர்யாவின் விமான விபத்தை திட்டுமிட்டு நடத்தியது மோகன்பாபுதான் என்று சமூக ஆர்வலர் ஒருவர் இவர் மீது புகார் கொடுக்க, அது தற்போது பரபரப்பின் உச்சத்தை தொட்டு இருக்கிறது.
ஆனால், இதனை செளந்தர்யாவின் கணவர் முழுமையாக மறுத்திருக்கிறார். பலரும், வெறும் 6 ஏக்கர் நிலத்திற்காக மோகன் பாபு இப்படி செய்திருப்பாரா என்று புருவம் உயர்த்தி வரும் நிலையில் இந்த மோகன் பாபு யார்? உடற்கல்வி ஆசிரியராக இருந்த இவர் 500 கோடிக்கு அதிபதியானது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
பிறப்பு
1944 ம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று திருப்பதியில் பிறந்தவர் மஞ்சு பக்தவச்சலம் நாயுடு. அப்பா மஞ்சு நாராயணசுவாமி நாயுடு, அம்மா மஞ்சு லக்ஷியம்மா. மெட்ராஸ் திரைப்பட கல்லூரி மாணவராக இருந்த மஞ்சு, பின்னர் ஒய் எம் சி ஏ கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தார்.
அப்போதுதான் பிரபல திரைக்கதை எழுத்தாளர் தசரி நாராயண ராவின் அறிமுகம் அவருக்கு கிடைக்கிறது. அந்த சந்திப்புதான் மோகன்பாபுவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அவர் மூலம் திரைத்துறைக்கு வந்த மோகன்பாபுவுக்கு, 1975ம் ஆண்டு தசரி நாராயண ராவ் இயக்கத்தில் வெளியான சொர்க்கம் நரகம் படத்தில் கிடைத்த வில்லன் கதாபாத்திரம், பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.
மோகன்பாபு மாறினார்
அதன் பின்னர்தான் பக்தவச்சலம் நாயுடு மோகன்பாபுவாக மாறினார். தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லனாக நடித்த மோகன்பாபு, கைதி காளிதாசு, கேதுகாடு, க்ருஹ பிரவேசம், அசம்பளி ரவுடி, அல்லரி மொகுடு உள்ளிட்ட திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். சிவாஜி கணேசன் நடித்த சில திரைப்படங்களில் மோகன்பாபு நடித்திருக்கிறார்.
1978ம் ஆண்டு வெளியான சிவரஞ்சினி திரைப்படம் இவரின் அக்மார்க் மேனரிசங்களை வெளியே கொண்டு வந்தது. அதன் பின்னர் பல வெற்றிப்படங்களில் நடித்த மோகன்பாபு, முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்து கொண்டார்.
சன் ஆஃப் இந்தியா திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எழுத்தாளராகவும் தன்னை காண்பித்துக்கொண்ட அவர், அந்தப்படத்தை இயக்குநர் டைமண்ட் ரத்னபாபுவை வைத்து இயக்க வைத்தார். 48 வருட சினிமா கெரியரில் 30க்கும் மேற்பட்ட படங்களையும் தயாரித்திருக்கிறார். இவரது திரைவாழ்கையை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது. அண்மையில் இவர் தயாரிப்பில், அவரது மகன் விஷ்ணு மஞ்சு கதை திரைக்கதை எழுதிய கண்ணப்பா டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
குடும்பம்
72 வயதாகும் மோகன்பாபுவின் முதல் மனைவி வித்யா தேவி. இவர்களுக்கு லக்ஷூமி மற்றும் விஷ்ணு ஆகிய இரு குழந்தைகள் உள்ளன. வித்யா தேவி இறந்த பின்னர் அவரது சகோதரியான நிர்மலா தேவி மஞ்சுவை திருமணம் செய்து கொண்டார் மோகன்பாபு.
லட்சுமி நடிப்பு கெரியரை கையிலெடுத்து, கணவருடன் மும்பையில் செட்டில் ஆகி விட்டார். விஷ்ணு தன்னுடைய மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் துபாயில் வசிக்கிறார். நிர்மலா தேவிக்கு பிற மஞ்சு மனோஜ் தனது மனைவியுடன் மோகன் பாபுவுடன் வசிக்கிறார். விஷ்ணுவுக்கும் மோகன்பாபுவுக்கும் இடையே உருவான சொத்து பிரச்சினைதான், அண்மையில் பூதாகரமாக வெடித்தது.
இது மட்டுமல்ல 1993 ம் ஆண்டு ஸ்ரீ வித்யாநிகேதன் கல்வி அறக்கட்டளையை நிறுவிய மோகன் பாபு, தற்போது அதன் கீழ் ஸ்ரீ வித்யாநிகேதன் பொறியல் கல்லூரி, மருந்தியல் கல்லூரி, நர்சிங் கல்லூரி, மேலாண்மை படிப்புகளுக்கான கல்லூரி உள்ளிட்டவற்றை கட்டி எழுப்பி இருக்கிறார்.கடந்த 2022 ம் ஆண்டு மோகன்பாபு தன்னுடைய பல்கலைகழகத்தை நிறுவினார். அரசியலில் கால் பதித்த மோகன்பாபு அங்கு தன்னுடைய தடத்தை பதித்துச் சென்று இருக்கிறார்.

டாபிக்ஸ்