ARTICLE AD BOX
நடிகர் ஆதி, நிக்கி கல்ராணி, முணீஷ்காந்த், ஆனந்த் ராஜ், டேனியல் ஆண்டனி, மைம் கோபி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற படம் மரகத நாணயம்.
2017-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், தமிழ் ஹாரர் காமெடி படங்களில் தனித்துவமாக நின்று, இன்றளவும் ரசிகர்களால் புகழப்பட்டு வருகிறது.
மரகத நாணயம் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே சரவன் நேற்றைய தினம் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்திய நடிகர் ஆதி, ஏ.ஆர்.கே சரவன், நிக்கி கல்ராணி உடனிருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, "மகிழ்ச்சி நிறைந்த வெற்றிகரமான சூப்பர் வருடமாக இந்த ஆண்டு அமையட்டும். மரகத நாணயம் 2 அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்" எனப் பதிவிட்டிருந்தார்.
கடந்த வாரத்தில் சப்தம் திரைப்பட நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதி, " 'மரகத நாணயம் 2' விரைவில் தொடங்கவுள்ளோம். அதற்கான பணிகள் மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கின்றன. முதல் கதை சிறியதாக இருந்தது, 2-ம் பாகத்தின் கதை பெரியதாக இருக்கும். முதல் பாகத்தைப் போல 2-ம் பாகத்திலும் பொறுப்புடன் பணிபுரியவுள்ளோம். கண்டிப்பாக நல்ல படமாக வரும் என நம்புகிறோம்" எனப் பேசியுள்ளார்.
ஏ.ஆர்.கே சரவன் மரகத நாணயம் படத்தைத் தொடர்ந்து ஹிப்ஹாப் தமிழா நடித்த வீரன் திரைப்படத்தை இயக்கினார். அவரது அடுத்த படமாக மரகத நாணயம் 2 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதி நடிப்பில் அறிவழகன் இயக்கிய சப்தம் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஆதியுடன் லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ். பாஸ்கர், ராஜீவ் மேனன், விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.
Ajithkumar: ஸ்பெயினில் ஏற்பட்ட விபத்து; அஜித்துக்கு என்ன நடந்தது?