ARTICLE AD BOX
மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் பி. உன்னிகிருஷ்ணன். சிறந்த திரைக்கதைக்கான கேரள அரசின் விருதை வென்ற இவர், பொது இடத்தில் வைத்து தன்னை அவமதித்ததாக மலையாள சினிமா தயாரிப்பாளரும், நடிகையுமான சாண்ட்ரா தாமஸ் குற்ச்சாட்டை முன் வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளார்
சினிமாவை விட்டு ஓரங்கட்ட முயற்சி
சினிமா துறையில் இருந்து ஓரங்கட்டும் முயற்சியில் தனக்கு எதிராக தண்டனை நடவடிக்கைகளை இயக்குநர் பி. உன்னிகிருஷ்ணன் எடுத்ததாக தனது புகாரில் நடிகை குறிப்பிட்டுள்ளார். மலையாள திரைப்பட துறையில் பெண்களின் பணி நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தும் ஹேமா கமிட்டியின் முன் நடிகை சாண்ட்ரா தாமஸ் அளித்துள்ளாராம். இந்த சம்பவத்தையும் தனது புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த புகாரில் இரண்டாவது குற்றவாளியாக இயக்குநர் ஆண்டோ ஜோசப்பும் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக, இயக்குநர் பி. உன்னிகிருஷ்னன் குறித்து கருத்து தெரிவித்ததற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக எனது சினிமா வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இயக்குநர் செயல்பட்டதாக நடிகை தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
நடிகை சாண்ட்ரா தாமஸ் புகார் அடுத்து இயக்குநர் பி. உன்னிகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மலையாள திரையுலகில் பாலின பாகுபாடு மற்றும் பெண்கள் நடத்தப்படும் விதம் தொடர்பான தொடர்ச்சியாக உலா வரும் விமர்சனங்களுக்கு மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொருளாளர் பதவி ராஜினாமா
பிரபல இயக்குநர் மீதான நடிகையின் இந்த குற்றச்சாட்டும், புகாரும் கேரள திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய மார்கோ படத்தில் நடித்த மலையாள நடிகர் உன்னி முகுந்தன், மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கமான அம்மா (AMMA) பொருளாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்த விலகல் தொடர்பாக உன்னி முகுந்தன் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த பதிவில், "இந்தப் பதவியில் எனது நேரத்தை உண்மையில் ரசித்து பணிபுரிந்தேன். இது ஒரு உற்சாகமான மற்றும் பலன் அளிக்கும் அனுபவமாகவும் இருந்தது. இருப்பினும், சமீபத்திய மாதங்களில், குறிப்பாக மார்கோ மற்றும் பிற கமிட்மெண்ட்கள் அதிகரித்திருப்பது எனது மனநல ஆரோக்கியத்தை பெரிதும் பாதித்துள்ளன.
அதிகரித்து வரும் சினிமா பணி சார்ந்த அழுத்தங்கள் காரணமாக இனி இந்தப் பதவியில் திறம்பட பணியாற்ற முடியாது என கருதுகிறேன். தனிப்பட்ட மற்றும் குடும்பத்தினரின் நலனில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளேன். எனவே இந்த பதவிக்கான அடுத்த நபர் நியமிக்கப்பட்டு சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வது வரை பதவியில் நீடிப்பேன்" என குறிப்பிட்டுள்ளார்.
ஹேமா கமிட்டி அறிக்கை
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை, திரையுலகில் பெண்கள் நடத்தப்படும் விதம் தொடர்பாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி புயலை கிளப்பியது. இந்த அறிக்கை வெளியானதை தொடர்ந்து பல்வேறு முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரத்தில் மலையாள சினிமா திரைப்படக் கலைஞர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான AMMA செயல்பாடு குறித்து விமர்சனங்களும் எழுந்தன. அம்மா அமைப்பு பற்றி தொடர் சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உன்னி முகுந்தன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்திருப்பது பேசு பொருளாகியுள்ளது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்