உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரக்யாராஜில் கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கும்பமேளா வரும் என்பதால் இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் பிரக்யாராஜில் தொடர்ந்து குவியத் தொடங்கினர்.

மகா கும்பமேளா நிறைவு:

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல மாநில முதலமைச்சர்கள், தொழில் மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரில் சென்று வணங்கி இந்த கும்பமேளாவில் சாமி தரிசனம் செய்து புனித நீராடினார். தினசரி லட்சக்கணக்கில் மக்கள் குவிந்த இந்த கும்பமேளா மகா சிவராத்திரியான நேற்றுடன் நிறைவு பெற்றது.

63.36 கோடி பக்தர்கள்

மகா சிவராத்திரியான நேற்றுடன் நிறைவு பெற்ற இந்த கும்பமேளாவில் 63.36 கோடி பக்தர்கள் பங்கேற்று புனித நீராடியுள்ளதாக உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதிவிட்டுள்ளனர். மேலும், கடந்த திங்கள்கிழமை மட்டும் 1.3 கோடி மக்கள் இந்த மகா கும்பமேளாவில் பங்கேற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மகா கும்பமேளா நிறைவு நாளான சிவராத்திரி இரவான நேற்று கண்கவர் வானவேடிக்கைகளுடன், வண்ண கலைநிகழ்ச்சிகளுடன் மகா கும்பமேளா நிறைவு பெற்றது.

7 ஆயிரத்து 500 கோடி செலவு

இந்த கும்பமேளாவிற்காக 7 ஆயிரத்து 500 கோடியை அரசு செலவு செய்துள்ளது. இந்த மகா கும்பமேளாவில் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் கோடி வரை வர்த்தகம் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கோடிக்கணக்கான பயணிகள் ரயில்களிலும், லட்சக்கணக்கான பக்தர்கள் விமானங்கள் மூலமாகவும் மகா கும்பமேளாவில் பங்கேற்றனர்.

பக்தர்களின் வசதிக்காக 4 லட்சம் கூடாரங்களும், 1.5 கழிவறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்களின் உடல்நலம் கருதி 43 மருத்துவமனைகள் தயார் நிலையில் இருந்தது. அங்கு 6 லட்சம் பக்தர்களுக்கு மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டது. 4 லட்சம் குப்பைத் தொட்டிகளும். 15 ஆயிரம் தூய்மைப் பணியாளர்களும் பணியாற்றினர்.

மகா கும்பமேளா:

பொதுவாக கும்பமேளாவானது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயக்ராஜ். ஹரித்வார், நாசிக் மற்றும் உஜ்ஜையினில் கும்பமேளா கொண்டாடப்படுவது வழக்கம். சில இடங்களில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுவது கும்பமேளா ஆகும். 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் கும்பமேளா அர்த் கும்பமேளா என்று அழைக்கப்படும்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் கும்பமேளா பூர்ண கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுவது மகா கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது. தற்போது பிரயக்ராஜில் கொண்டாடப்பட்டிருப்பது மகா கும்பமேளா ஆகும்.

இதன் காரணமாகவே, இந்த மகா கும்பமேளாவில் பங்கேற்க தினசரி லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். மகா கும்பமேளா காரணமாக ரயில்வே ஏராளமான சிறப்பு ரயில்களை இயக்கியது. ஆனாலும், பக்தர்கள் போதிய ரயில்கள் இல்லாத காரணத்தால் ஆத்திரத்தில் ரயில் கண்ணாடிகளை உடைத்து உள்ளே ஏறிய அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறியது.