Kanchipuram Vandavasi Road Project: காஞ்சிபுரம்- வந்தவாசி சாலை தரம் உயர்த்தப்பட உள்ள நிலையில், முதற்கட்டமாக 9 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் பழமையான நகரங்களில் ஒன்றாக இருந்து வரும் நிலையில், வேகமாக வளர்ந்து வரும் நகரமாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக பல்வேறு தேவைக்காக நாள்தோறும் பல ஆயிரக்கணக்கானோர் காஞ்சிபுரத்திற்கு படையெடுக்கின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரத்திற்கு வருவதற்கு, மிக முக்கிய சாலையாக காஞ்சிபுரம்- வந்தவாசி சாலை இருந்து வருகிறது.

காஞ்சிபுரம்- வந்தவாசி சாலை - Kanchipuram Vandavasi Road

காஞ்சிபுரத்திலிருந்து திண்டிவனம், சேத்பட், போளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்கு காஞ்சிபுரம்- வந்தவாசி சாலை பிரதான சாலையாக இருந்து வருகிறது. இதே சாலையில் தான் செய்யார் சிப்காட் அமைந்துள்ளது. இதேபோன்று காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உள்ள மேல்மா பகுதியில், புதியதாக செய்யார் சிப்காட் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் காஞ்சிபுரத்தை சுற்றுவட்டார பகுதியில் கொண்டு வரப்பட உள்ளது. குறிப்பாக நாள்தோறும் இந்த சாலையில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. அதேபோன்று 3000-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. தொடர்ந்து மக்கள் தொகை அதிகரித்து வருவதால், காஞ்சிபுரம் வழியாக ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்களும் இந்த சாலையை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரம் சாலையில் மாங்கால் கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள, செய்யாறு சிப்காட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதேபோன்று மாங்கால் கூட்ரோடு முதல் காஞ்சிபுரம் வரை அதிக வாகனங்கள் செல்வதால், எப்போதுமே அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. சுமார் 40 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த சாலையில், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் பகுதிக்கு செல்லும் கம்பெனி பேருந்துகளும் அதிகரித்து வருகிறது.

காஞ்சிபுரம் - வந்தவாசி நான்கு வழிச்சாலை திட்டம் Kanchipuram Vandavasi 4 Way Road

இச்சாலையில் அதிக விபத்துக்கள் நடைபெற்று வருவதாலும், எதிர்காலப் போக்குவரத்தை கருத்தில் கொண்டு இரு வழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. பல்வேறு கட்டமாக இந்த சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற உள்ளன.

முதற்கட்டமாக மாங்கால் கூட்டுச்சாலை முதல் மானாமதி கூட்டுச்சாலை வரை உள்ள சுமார் ஒன்பது கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை மாற்றப்பட உள்ளது. இதற்காக முதற்கட்டமாக 78 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாங்கால் கூட்டுச்சாலை முதல் மானாமதி வரை மொத்தம் 7 பாலங்கள் விரிவு படுத்தப்பட உள்ளன. புதிதாக ஆறு சிறு பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. அதேபோன்று நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளதால் தேவையான இடங்களில் மழைநீர் வடிகால்வாயும் அமைக்கப்பட உள்ளன.

சிறப்பம்சங்கள் என்னென்ன? Kanchipuram-Vandavasi Road (SH116) Key Features

இந்த சாலை முழுமையாக நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டால், பெரும் அளவு போக்குவரத்து நெரிசல் குறையும். தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து உற்பத்தியாக்கிய பொருட்களை கொண்டு செல்வதற்கு, இந்த சாலை வரப் பிரசாதமாக அமையும்.

தினமும் பணி நிமித்தமாக இந்த சாலையை பயன்படுத்துபவர்களுக்கும் வரப்பிரசாதமாக அமைய உள்ளது. ஆன்மீக நகரமாக இருக்கும் காஞ்சிபுரத்திற்கு, செல்ல உள்ள பக்தர்களுக்கும் இந்த சாலை பயனுள்ளதாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை. குறிப்பாக இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால், காஞ்சிபுரம் முதல் வந்தவாசி வரை 45 நிமிடத்தில் செல்ல முடியும்.