கடந்த ஜனவரி மாதம் முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி, காசா மீது இஸ்ரேல் திடீர் வான்வெளித் தாக்குதல் நடத்தியதில், குழந்தைகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம்

கடந்த 2003-ம் ஆண்டு முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிலவிவரும் சூழலில், கடந்த ஜனவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பிறகு, இரு தரப்பிலும் ஆபடிப்படியாக பிணைக் கைதிகள் ஒப்படைக்கப்பட்டு வந்தனர். ஆனால், பிப்ரவரி மாதம் விடுவிக்க வேண்டிய பிணைக் கைதிகளை விடுவிக்காமல், இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக ஹமாஸ் குற்றம்சாட்டி வந்தது. அதனால், இரு தரப்பையும் சமாதானப் படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.

காசா மீது இன்று திடீர் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

இந்த நிலையில், காசா மீது இன்று அதிகாலை திடீர் வான்வெளித் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல். காசா நகரம், டெய்ர் அல்-பலா, கான் யூனிஸ், ரஃபா உள்ளிட்ட பல இடங்களில், புலம்பெயர்ந்தோர் இருந்த இடங்களில் இஸ்ரேல் படைகள் குண்டு மழை பொழிந்ததில், குழந்தைகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பலியானதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், சிரியா, லெபனானிலும் பல பகுதிகளில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. பிணைக் கைதிகளை ஒப்படைப்பதில் ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாலேயே தாக்குதல் நடத்தப்படுவதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே, காசாவிற்கு உணவு, மருந்துகள், எரிபொருள் உள்ளிட்டவைகள் கிடைப்பதை தடுத்து வைத்திருந்தது இஸ்ரேல்.

அமெரிக்காவின் ஒப்புதலுடன் தாக்குதலா.?

இன்று காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, ட்ரம்ப் நிர்வாகத்துடன் இஸ்ரேல் கலந்தாலோசித்ததாக தகவல் வெளியானது. இந்த தகவலை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் உறுதிப்படுத்தியுள்ளார். ஹமாஸ், ஹுதிகள், ஈரான் போன்று, இஸ்ரேலை மட்டுமல்லாமல் அமெரிக்காவையும் தீவிரவாதத்தால் பயமுறுத்த முயல்பவர்கள் நரகத்திற்கான விலையை கொடுப்பார்கள் என்று அதிபர் ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளதாக, ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.