ARTICLE AD BOX
மும்பை : ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவி என்பது எப்போதும் எளிதானது அல்ல. கடும் நெருக்கடியில் துணிச்சலான முடிவுகள் மற்றும் அழுத்தத்தில் சிறப்பாக செயல்படும் திறன் ஆகியவை ஒரு கேப்டனை தனித்து நிற்க வைக்கின்றன. ஐபிஎல் வரலாற்றில் சில கேப்டன்கள் தங்கள் தைரியமான அணுகுமுறையால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளனர். அவர்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
ஷேன் வார்ன்
ஐபிஎல் கோப்பையை முதன்முதலில் வென்ற கேப்டனான ஷேன் வார்ன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அனுபவமற்ற வீரர்களால் நிரம்பிய அணியை வைத்து, ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவானான வார்ன் அவர்களை வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றார். ரவீந்திர ஜடேஜா, யூசுப் பதான் போன்ற வைரங்களை கண்டறிந்து, அவர்களுக்கு வாய்ப்பளித்து பிரகாசிக்க வைத்தார். அவரது துணிச்சலான முடிவுகள் மற்றும் அச்சமற்ற அணுகுமுறை, பிற ஐபிஎல் கேப்டன்களுக்கு ஒரு ரோல் மாடலாக அமைந்தது.

எம்.எஸ். தோனி
இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற எம்.எஸ். தோனி, அழுத்தத்தில் அமைதியாக இருப்பதற்கும், முக்கியமான தருணங்களில் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பதற்கும் பெயர் பெற்றவர். அவரது சாமர்த்தியமும், அணியின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையும் அவரை ஒரு துணிச்சலான தலைவராக உருவாக்கியுள்ளது.
பேட்ஸ்மேன்களை தோற்கடிக்கும் வகையில் பீல்டிங் அமைப்புகளையும், எதிரணி கணிக்க முடியாத பேட்டிங் வரிசையையும் தேர்ந்தெடுத்து, போட்டியின் போக்கையே மாற்றியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐந்து முறை சாம்பியனாக்கிய தோனி, ஓரங்கட்பட்ட வீரர்களுக்கு வாய்ப்பளித்து உற்சாகப்படுத்தினார். இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு 2018 ஆம் ஆண்டு திரும்பிய சிஎஸ்கே அணியை "டாட்ஸ் ஆர்மி" என்று கேலி செய்யப்பட்ட போதும் வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீரின் தலைமை, மன உறுதி மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கைக்காக நினைவுகூரப்படுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சாம்பியன்ஷிப் வெல்லும் அணியாக மாற்றிய அவர், எல்லைகள் இல்லாத அணுகுமுறையை வெளிப்படுத்தினார். அவரது கேப்டன்ஷி காலத்தில் கேகேஆர் இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றது. தோல்வியை ஏற்காத அவரது போராட்ட குணம் அணியை உயர்த்தியது.
ரோஹித் ஷர்மா
மும்பை இந்தியன்ஸ் அணியை பல ஐபிஎல் கோப்பைகளுக்கு வழிநடத்திய அவர், கணக்கிடப்பட்ட ரிஸ்க்குகளை எடுக்கும் திறனை வெளிப்படுத்தியுள்ளார். தனது ஆக்ரோஷமான பேட்டிங் அணுகுமுறையுடன், மைதானத்தில் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்து முன்னின்று வழிநடத்துகிறார்.இந்திய அணியின் இந்த அனுபவ வீரர், எம்ஐ அணியை ஐந்து முறை சாம்பியனாக்கியதுடன், சர்வதேச அரங்கில் இந்தியாவை டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி வெல்ல வைத்து, நீண்ட கால ஐசிசி கோப்பை தாகத்தை தீர்த்தார்.
பாட் கம்மின்ஸ்
ஐபிஎல் தலைமையில் புதியவராக இருந்தாலும், உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய கேப்டனான பாட் கம்மின்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 2024 ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்று தனது திறமையை வெளிப்படுத்தினார். அவரது ஆக்ரோஷமான மற்றும் அச்சமற்ற அணுகுமுறை, அணியை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது.