ARTICLE AD BOX
டெல்லி: 2025 ஐபிஎல் தொடரில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் பதவி கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட இருந்தது. ஆனால், அதனை அவர் மறுத்துவிட்டார். இதன் காரணமாக, தற்போது அந்த அணியின் கேப்டனாக யார் வரப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மறுபுறம், கே.எல்.ராகுல் ஏன் கேப்டன் பதவியை மறுத்தார் என்பது குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. 2024 ஐபிஎல் தொடரில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டார். அவரது தலைமையில் அந்த அணி சராசரியாகவே செயல்பட்டது.

இதனிடையே, ரிஷப் பண்ட் 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் மீண்டும் ஏலத்தில் பங்கேற்றார். 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில், மிக அதிக தொகைக்கு ரிஷப் பண்ட் வாங்கப்பட்டார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அவரை 27 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை விட்டு சென்றுவிட்ட நிலையில், அடுத்த கேப்டனாக யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்தது.
அந்த ஏலத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கே.எல்.ராகுலை வாங்கி இருந்தது. எனவே, அவர்தான் டெல்லி அணியின் கேப்டன் ஆவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மேலும், டெல்லி அணியில் ஏற்கனவே அக்சர் பட்டேல் இருக்கிறார். அவருக்கும் சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ளது. 2024 டி20 உலக கோப்பை வென்ற அணியிலும் அவர் முக்கிய வீரராக இருந்தார் அக்சர் பட்டேல்.
இவர்கள் இருவரைத் தவிர்த்து, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டூ பிளேசிஸ் இருக்கிறார். அவர் அதிக அனுபவம் உடையவர். அதிக வயது ஆனாலும், அவரது அனுபவம் மிகவும் ஆழமானது. இந்த மூவரில் யாரை கேப்டனாக்குவது என்ற விவாதம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகத்தில் நடைபெற்றது.
கே.எல்.ராகுலே அந்த அணியின் முதல் கேப்டன் தேர்வாக இருந்தார். ஆனால், அவர் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தான் ஒரு வீரராக மட்டுமே ஆட விரும்புவதாக அவர் தெளிவாக தெரிவித்து இருக்கிறார். இதற்கு முன், கே.எல்.ராகுல் பல அணிகளில் விளையாடியிருக்கிறார்.
லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் கேப்டனாகவும் கே எல் ராகுல் மூன்று ஆண்டுகள் செயல்பட்டார். ஆனால், அதனால் அவர் மீது பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. அதனால், அந்த அணியை விட்டு விலகி, தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கிறார்.
இனி தனக்கு கேப்டன் பதவியே வேண்டாம் என்ற மனநிலையில் கே எல் ராகுல் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் தனது தனிப்பட்ட ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்து இருக்கிறார். ஏனெனில், கே எல் ராகுல் சிறப்பாக விளையாடி வந்தாலும், இந்திய டி20 அணியில் அவருக்கு இடம் மறுக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல, டெஸ்ட் அணியிலும், ஒரு நாள் அணியிலும் அவரை நீக்க வேண்டும் என அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு அடுத்து சிறந்த வீரராக கே.எல்.ராகுல் இருக்கிறார். ஆனாலும், அவர் மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில், ஒரு பேட்ஸ்மேனாக தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இருப்பதை கே எல் ராகுல் உணர்ந்து இருக்கிறார். கேப்டன் பதவி சுமையாக இருப்பதோடு, அதனால் தேவையற்ற விமர்சனங்கள் எழுகின்றன. மேலும், அவரது தனிப்பட்ட கிரிக்கெட் வாழ்வுக்கும் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என அவர் கருதுகிறார். அதனால் ஏன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் பதவியை அவர் மறுத்து இருக்கிறார்.
இதையடுத்து, அக்சர் பட்டேல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. அவர் இதற்கு முன் எந்த ஐபிஎல் அணியையும் வழிநடத்தியது இல்லை. ஆனாலும் சமீபத்தில், இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, அவர் சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் பெற்று வருவதால், டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.
“பெரிய இதயம் கொண்டவன் கே எல் ராகுல்”.. சந்தோசத்தில் திக்குமுக்காடிய சிறுவன்.. நெகிழ்ந்த ரசிகர்கள்
டெல்லி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமிக்கப்பட்டு இருக்கிறார். எனவே, அவருடன் ஒத்துழைத்து அணியை வழிநடத்திச் செல்லும் ஒருவராக புதிதாக நியமிக்கப்பட உள்ள கேப்டன் இருக்க வேண்டும்.