ARTICLE AD BOX
மும்பை: ஐபிஎல் தொடருடன் பாகிஸ்தான் சூப்பர் லீக் நேரடியாக மோதி வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் வீரருக்கு எதிராக சட்டரீதியாக விளக்கம் கேட்டிருந்தது பாகிஸ்தான் சூப்பர் லீக். அதற்கு மும்பை இந்தியன்ஸ் வீரர் கார்பின் போஷ் நெத்தியடியாக பதில் அளித்துள்ளார். அதாவது, ஒட்டுமொத்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை விட மும்பை இந்தியன்ஸ் என்ற ஒரு அணி மிகவும் பெரியது என்பதை சூசகமாக சுட்டிக் காட்டியுள்ளார்.
2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இருந்து விலகியுள்ளார் தென்னாப்பிரிக்க வீரர் கார்பின் பாஷ். 2025 ஐபிஎல் தொடர் நடைபெறும் அதே வேளையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரும் நடைபெற உள்ளது. ஏப்ரல் 11 முதல் இந்த ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் துவங்குகிறது. மறுபுறம் ஐபிஎல் தொடர் மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெற உள்ளது.

முதலில் ஐபிஎல் தொடரில் இடம் பெறாத கார்பின், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பெஷாவர் சால்மி அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி அவரை மாற்று வீரராக தேர்வு செய்தது. அதனால், அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை விடுத்து ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து இருக்கிறார்.
அதற்கு பாகிஸ்தான் சூப்பர் லீக் விளக்கம் கேட்டு சட்ட ரீதியான கடிதம் அனுப்பி இருந்தது. அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில் தான் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை அவமதிக்கவில்லை என்றும், ஆனால் தனது எதிர்காலத்திற்காக சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது என்றும் கூறியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் பலமான அணி மட்டுமல்ல, அவர்கள் உலகின் பல்வேறு டி20 லீக் தொடர்களில் பல அணிகளை வைத்துள்ளனர். இது தனது கிரிக்கெட் வாழ்வுக்கு மிகப்பெரிய அளவில் உதவும் என அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் என்ற ஒரு அணியின் அளவுக்கு கூட பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் இல்லை என்பதை அவர் சூசகமாக உணர்த்தி பதிலடி கொடுத்து இருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரை தவிர்த்து தென்னாப்பிரிக்காவின் எஸ்ஏ20 லீக், அமெரிக்காவின் எம்எல்சி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஐஎல்டி20 மற்றும் இங்கிலாந்தின் ஹண்ட்ரட் தொடரில் ஓவல் என பல்வேறு டி20 அணிகளை வைத்துள்ளது. மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியில் இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் உள்ளனர்.
தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல்லில் எப்படி ஒரு வீரர் ஒரு அணியில் தேர்வு செய்யப்பட்ட பின்னர் விலகினால் அவருக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு விளையாட தடை விதிக்கப்படுகிறதோ, அது போன்ற ஒரு தடையை கார்பின் போஷ் மீது விதிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான டாப் 7 நடுவர்களின் தவறான முடிவுகள்.. கோப்பையை இழந்த சிஎஸ்கே
ஆனால், இதனால் அவருக்கு பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. மேலும், தங்கள் அணியின் வீரர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்றால் மும்பை இந்தியன்ஸ் அவருக்கு உதவும். அந்த அடிப்படையில் கார்பினுக்கு மற்ற டி20 அணிகளிலும் வாய்ப்பு அளிக்கக்கூடும். எனவே, இது அவருக்கு சாதகமான சூழ்நிலையாகவே மாறி இருக்கிறது.