ARTICLE AD BOX
கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. மறுபுறம் தோல்வி மட்டுமல்லாமல் ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெரிய அடி வாங்கி உள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி அதிரடியாக ரன் சேர்த்து வந்தது. 200 ரன்களை சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர் க்ருனால் பாண்டியா அபாரமாக பந்து வீசி 4 ஓவர்களில் 29 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து சேஸிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிரடியாக ஆடியது. பிலிப்ஸ் சால்ட் 31 பந்துகளில் 56 ரன்களும், விராட் கோலி 36 பந்துகளில் 59 ரன்களும் எடுத்தனர். அந்த அணி 16.3 ஓவர்களில் எல்லாம் வெற்றிக்கான இலக்கை எட்டியது. 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
இதன் மூலம் 2025 ஐபிஎல் தொடரின் லீக் சுற்று புள்ளி பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் இடத்தை பிடித்திருக்கிறது. மேலும் அந்த அணியின் நெட் ரன் ரேட் +2.137 என்பதாக உள்ளது. தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டு புள்ளிகளை பெற்றுள்ளது.
எந்த வீரரும் செய்யாத பிரம்மாண்ட ஐபிஎல் சாதனையை செய்த விராட் கோலி.. மிரள வைக்கும் ரெக்கார்டு
இந்த போட்டியில் தோல்வி அடைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிகள் ஏதும் பெறவில்லை. அந்த அணியின் நெட் ரன் ரேட் -2.137 என்பதாக உள்ளது. இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த ஆண்டு தொடரின் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று புள்ளி பட்டியல் முதல் இடத்தை பிடித்து இருப்பது அந்த அணியின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.