ARTICLE AD BOX
சென்னை: ஐ.பி.எல் 2025 சீசன் நெருங்கி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவின் பங்கு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஐந்து முறை சாம்பியனான சி.எஸ்.கே அணி, ரச்சினை ஐ.பி.எல் 2025 ஏலத்தில் ரூ.4 கோடிக்கு மீண்டும் தக்கவைத்தது. இது அவரது திறமை மற்றும் அணியின் எதிர்கால திட்டங்களில் அவரது மதிப்பை எடுத்துக்காட்டுகிறது.
ரச்சின் ரவீந்திரா, தனது அதிரடியான இடது கை பேட்டிங் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சு மூலம் பிரபலமானார். 2024 ஐ.பி.எல் சீசனில் சி.எஸ்.கே அணிக்காக அறிமுகமான அவர், 10 போட்டிகளில் 222 ரன்கள் குவித்தார், இதில் ஒரு அரைசதம் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 160.87 ஆக இருந்தது, இது அவரது அதிரடி ஆட்டத்தை காட்டுகிறது.

குறிப்பாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 37 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தார்.ரச்சினின் ஆல்ரவுண்டர் திறமை அவரை சி.எஸ்.கே அணியின் முக்கிய உறுப்பினராக மாற்றுகிறது. தொடக்க ஆட்டக்காரராகவோ அல்லது மிடில் ஆர்டரிலோ விளையாடும் திறன், மிகவும் பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது.
மேலும், அவரது சுழற்பந்து வீச்சு, சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தின் சுழலுக்கு உகந்த பிட்சுகளில் கூடுதல் பலத்தை சேர்க்கும்.2023 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்காக 578 ரன்கள் குவித்து தனது திறமையை நிரூபித்த ரச்சின், சமீபத்தில் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சிறப்பான ஃபார்ம், சி.எஸ்.கே அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான அணிக்கு பெரிய நம்பிக்கையை அளிக்கிறது.
2024 சீசனில் டெவோன் கான்வே காயம் காரணமாக விலகியபோது, ரச்சின் தொடக்க வீரராக பொறுப்பேற்று அணியை வலுப்படுத்தினார். 2025 சீசனில், கான்வே திரும்பியிருந்தாலும், ரச்சினின் தற்போதைய ஃபார்ம் மற்றும் இந்திய சுழல் பிட்சுகளை எதிர்கொள்ளும் திறன் அவரை முன்னிலைப்படுத்துகிறது.
சி.எஸ்.கே அணியில் எம்.எஸ். தோனியின் பங்கு குறைந்து வரும் சூழலில், அணி ஒரு புதிய அத்தியாயத்தை எதிர் நோக்கி நகர்கிறது. ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மதீஷா பதிரனா ஆகியோருடன் ரச்சின் இணைவது மூலம், சிஎஸ்கே அணியின் இளம் தலைமுறைக்கு வலு சேர்க்கிறது. அவரது ஆல்-ரவுண்ட் திறமை, சி.எஸ்.கே-யின் பேலன்ஸை மேம்படுத்தி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுரேஷ் ரெய்னாவுக்கு பிறகு பல வீரர்கள் நம்பர் 3வது இடத்திற்கு வந்துசிறப்பாக செயல்பட்டாலும், அது வெறும் ஒரு, இரு சீசனுடன் நின்றுவிடுகிறது. இதனால் சின்ன தல ரெய்னாவின் இடத்தை ரச்சின் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரச்சின் மட்டும் இம்முறை கிளிக் ஆனால், சிஎஸ்கே அணி சரவெடி தான்.