ARTICLE AD BOX
சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது. தோனிக்கு தற்போது 43 வயது ஆகிவிட்டது. இதனால் தோனிக்கு இது கடைசி சீசன் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் ஐந்தாவது இடத்தில் மட்டுமே நிறைவு செய்தது.இதனால் இழந்த பெருமையை மீட்க இம்முறை கண்டிப்பாக பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் சிஎஸ்கே வீரர்கள் உள்ளனர்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி சிறப்பான முறையில் செயல்பட்டு தங்களிடம் இருந்த குறைகளை நிவர்த்தி செய்து இருக்கிறது. இந்த வகையில் சிஎஸ்கே அணி இந்த சீசனில் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். கடந்த முறை கேப்டன் ருதுராஜ் தொடக்க வீரர், மூன்றாவது வீரர் என மாறிமாறி களமிறங்கினார்.
இம்முறை ருதுராஜ் தொடக்க வீரராக களம் இறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று கடந்த சீசனில் விளையாடாத கான்வே இம்முறை அணிக்கு திரும்பி இருப்பது சிஎஸ்கே வின் பலத்தை அதிகரித்து இருக்கிறது. மூன்றாவது வீரராக நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா தான் இடம் பெறுவார்.
ரச்சின் ரவீந்திரா தற்போது பேட்டிங், பந்துவீச்சு என நல்ல பார்மில் இருக்கிறார். இந்த சூழலில் நான்காவது இடத்தில் ராகுல் திருப்பாதி விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது. இவர் சிஎஸ்கே அணிக்காக தற்போது முதல் முறையாக விளையாட போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்தாவது வீரராக சிவம் துபேவும், ஆறாவது வீரராக ஜடேஜாவும் ஏழாவது வீரராக தோனியும் விளையாட போகிறார்கள்.
இந்த சூழலில் எட்டாவது வீரராக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் இடம்பெறப் போகிறார்.ஒன்பதாவது வீரராக இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஷாம் கரன், பத்தாவது வீரராக இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பதிராணா விளையாட போகிறார்கள்.
11 வது வீரராக சிஎஸ்கே அணியின் இளம் வேகபந்துவீச்சாளரான அஞ்சுல் காம்போஜ் அல்லது கலில் அகமது ஆகியோர் விளையாட கூடும்.இந்த சூழலில் சிஎஸ்கே அணி 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய நூர் அகமதை இம்பேக்ட் வீரராக சிஎஸ்கே பயன்படுத்தக்கூடும்.