ARTICLE AD BOX
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே ரசிகர்களுக்கு ஒரு தனி உற்சாகம். இது ஒரு வெறும் கிரிக்கெட் போட்டி மட்டுமல்ல, தென்னிந்திய ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஈகோ பிரச்சினை.
சிஎஸ்கே தலைமையில் தோனியும், ஆர்சிபியை விராட் கோலியும் வழிநடத்திய இந்தப் போட்டிகள் எப்போதும் பரபரப்பையும், நினைவில் நிற்கும் தருணங்களையும் தந்துள்ளன. இந்த நிலையில், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இடையேயான நேருக்கு நேர் புள்ளிவிவரம், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச ஸ்கோர் தொடர்பான தகவல்களை தற்போது பார்ப்போம்.

நேருக்கு நேர் மோதல் புள்ளிவிவரம்:
2025 ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன் வரை, சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் 33 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சிஎஸ்கே 21 வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்துகிறது, ஆர்சிபி 11 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, மேலும் ஒரு போட்டி முடிவு இல்லாமல் முடிந்தது. இந்தப் புள்ளிவிவரம் சிஎஸ்கேயின் ஆதிக்கத்தை தெளிவாகக் காட்டுகிறது.
சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டிகளில் சிஎஸ்கே 8 முறையும், ஆர்சிபி ஒரே ஒரு முறையும் 2008 வெற்றி பெற்றுள்ளது. பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் சிஎஸ்கே 5 முறையும், ஆர்சிபி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
சிஎஸ்கே vs ஆர்சிபி அதிகபட்ச ஸ்கோர்:
சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இடையே நடந்த போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோரை சிஎஸ்கே பதிவு செய்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி பெங்களூருவில் நடந்த போட்டியில், சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்தது.ஆர்சிபி பதிலுக்கு 218 ரன்கள் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இது இரு அணிகளுக்கும் இடையேயான அதிக ரன்கள் நிறைந்த போட்டிகளில் ஒன்று.
சிஎஸ்கே vs ஆர்சிபி: குறைந்தபட்ச ஸ்கோர்:
இரு அணிகளும் ஒருவருக்கொருவர் எதிராக மிகக் குறைந்த ஸ்கோர்களையும் பதிவு செய்துள்ளன. சிஎஸ்கேயின் குறைந்தபட்ச ஸ்கோர் 2013 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி பெங்களூருவில் நிகழ்ந்தது.
ஆர்சிபி முதலில் 106 ரன்கள் எடுத்த நிலையில், சிஎஸ்கே பதிலுக்கு விளையாடி 17.4 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆர்சிபியின் குறைந்தபட்ச ஸ்கோர் 2019 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி சென்னையில் பதிவானது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 70 ரன்களில் ஆட்டமிழக்க, சிஎஸ்கே அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.