ARTICLE AD BOX
கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரில் பிசிசிஐ 4 புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. மேலும், கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் வகையில் சம்பளத்துக்கு மேல் வருமானம் அளிக்கும் புதிய விதிமுறையையும் அமல்படுத்தியுள்ளது பிசிசிஐ. அவற்றைப் பற்றி பார்க்கலாம்.
முதல் விதி: 2025 ஐபிஎல் தொடரில் இனி பந்துவீச்சாளர்கள் பந்தின் மீது எச்சிலைப் பயன்படுத்தி அதைத் தேய்க்கலாம். அதன் மூலம் பந்து ஸ்விங் ஆவதற்குத் தேவையான உதவியை அவர்கள் பெறலாம்.

இரண்டாவது விதி: ஐபிஎல் தொடர் இரவு நேரத்தில் நடைபெறுவதால், இரண்டாம் இன்னிங்ஸில் பந்து காற்றில் உள்ள ஈரப்பதத்தால் நனைந்து விட வாய்ப்புள்ளது. அதைத் தவிர்க்க, 11 வது ஓவர் முதல் இரண்டாவது புதிய பந்தை பெற்றுக்கொள்ளலாம். பந்து வீசும் அணியின் கேப்டன் அம்பயரிடம் இரண்டாவது பந்து வேண்டும் என்று முறையிட்டால், அம்பயர் நிச்சயமாக முதல் 10 ஓவர்களில் பயன்படுத்தப்பட்ட பந்து எந்த நிலையில் இருந்ததோ, அதற்கு இணையான ஒரு பந்தை தேர்வு செய்து கொடுக்கலாம்.
காற்றில் ஈரப்பதம் இருக்கிறதோ இல்லையோ, பந்து வீசும் அணியின் கேப்டன் புதிய பந்தை கேட்டால் அம்பயர் நிச்சயமாக அதை கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது விதி: அடுத்து, இனி கேப்டன்களுக்கு ஸ்லோ ஓவர் ரேட்டுக்காக தடை விதிக்கப்படாது. அதற்கு பதிலாக அவர்களுக்கு டிமெரிட் புள்ளிகளும், போட்டி சம்பளத்தில் 25% முதல் 75% வரை அபராதம் விதிக்கப்படும்.
நான்காவது விதி: இனி ஐபிஎல் போட்டிகளில் வைடு மற்றும் நோபாலை ரிவ்யூ செய்யும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஹாக் ஐ மற்றும் பால் ட்ராக்கிங் தொழில்நுட்பம் மூலம் இனி அம்பயர்கள் அல்லது வீரர்கள் நோபால் மற்றும் ஆஃப்சைட் வைடு பந்துகளை ரிவ்யூ செய்து கொள்ளலாம். இந்த நான்கு புதிய விதிகளை பிசிசிஐ 2025 ஐபிஎல் தொடர் முதல் அமல்படுத்தியுள்ளது.
சம்பளம் மட்டுமல்ல..: இது தவிர்த்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு அவர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள சம்பளத்தை தாண்டி, ஒவ்வொரு போட்டியில் விளையாடுவதற்கும் ரூபாய் 7.5 லட்சம் வழங்கப்படும்.
ஒரு வீரர் லீக் சுற்றின் 14 போட்டிகளில் விளையாடினால் அதன் மூலம் சுமார் 1.05 கோடி ரூபாய் வருமானம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விதிகள் அனைத்துமே கிரிக்கெட் அணிகளுக்கும் வீரர்களுக்கும் சாதகமாக இருப்பதால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
IPL 2025: 74 ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ள தேதி, நேரம்.. 2025 ஐபிஎல் 65 நாட்களின் முழு அட்டவணை
செய்தி சுருக்கம்:
- 2025 ஐபிஎல் தொடரில் 4 புதிய விதிகளை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
- பந்துவீச்சாளர்கள் இனி பந்தை எச்சில் கொண்டு தேய்க்கலாம்.
- 11வது ஓவரிலிருந்து புதிய பந்து பயன்படுத்த கேப்டன் கோரலாம்.
- ஸ்லோ ஓவர் ரேட்டுக்கு கேப்டன்களுக்கு தடை இல்லை, டீமெரிட் புள்ளி மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
- வைடு மற்றும் நோபால் ஆகியவற்றை ரிவ்யூ செய்யும் முறை அறிமுகம்.
- ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 7.5 லட்சம் வழங்கப்படும்.
- புதிய விதிகள் வீரர்கள் மற்றும் அணிகளுக்கு சாதகமாக இருப்பதாக கருதப்படுகிறது.