ARTICLE AD BOX
மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் குறைந்த தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட, ஆனால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம். 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் ஆகியோருக்கு 25 கோடிக்கு அதிகமான ஏலத் தொகை கிடைத்தது.
ஆனால், மிட்செல் ஸ்டார்க், கே.எல். ராகுல் போன்ற நட்சத்திர வீரர்களுக்கு எதிர்பார்த்ததை விட குறைவான தொகையே ஏலத்தில் கிடைத்தது. ஸ்டார்க் 2024 ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் முக்கிய பந்துவீச்சாளராக இருந்தார். அவர் 13 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அவருக்கு இந்த முறை ஏலத்தில் 11.75 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக கிடைத்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி அவரை வாங்கி உள்ளது.

அடுத்து இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை குஜராத் டைட்டன்ஸ் அணி 3.2 கோடிக்கு வாங்கியது. இது நிச்சயம் அந்த அணிக்கு லாபகரமான ஒரு ஏலத் தேர்வாக பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் சுந்தர் பவர் பிளே ஓவர்களிலும் பந்து வீசும் ஆற்றல் உடையவர். சர்வதேச டி20 போட்டிகளில் 52 போட்டிகளில் 47 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 6.87 என்ற எகானமி வைத்துள்ளார்.
அடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அனுபவ வீரரான ஃபாஃப் டு பிளெஸிஸ்-ஐ வெறும் 2 கோடிக்கு வாங்கியது. அவருக்கு 40 வயதாகிவிட்டது என்பதாலேயே அவருக்கான ஏலத் தொகை மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது. ஆனால், அவர் இன்னமும் அதிரடியாக பேட்டிங் ஆடி வருகிறார். அந்த வகையில் அவரது அனுபவம் மற்றும் பேட்டிங் ஃபார்ம் ஆகியவற்றை டெல்லி கேப்பிட்டல்ஸ் நிச்சயமாக பயன்படுத்திக் கொள்ளும்.
இந்திய அணியின் முக்கிய வீரரான கே.எல். ராகுலை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெறும் 14 கோடி ரூபாய்க்கு வாங்கியது. முன்னதாக ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் ஆகியோருக்கு மற்ற அணிகள் அதிக பணத்தை செலவிட்டு விட்டதால் ஏலத்தில் கே.எல். ராகுலின் பெயர் வந்தபோது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அவரை 14 கோடிக்கு மலிவாக வாங்கியது. ராகுல் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் அனுபவ வீரராக இருக்கிறார். எனவே, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு நிச்சயம் பெரிய அளவில் கை கொடுப்பார்.
IPL 2025: ஐபிஎல் தொடரின் முதல் போட்டி எப்போது? இலவசமாக பார்க்க முடியுமா? KKR vs RCB மேட்ச்
தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குவின்டன் டி காக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3.6 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். துவக்க வீரராகவும் மிகச் சிறப்பாக ஆடக்கூடியவர். அவர் 171 டி20 போட்டிகளில் 3157 ரன்கள் எடுத்து இருக்கிறார். அவர் அதிரடியாக ஆடுவார் என்பதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அவர் சிறப்பாக பொருந்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த ஐந்து வீரர்களும் மிகக் குறைவான ஏலத் தொகைக்கு வாங்கப்பட்டதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். தங்களது சம்பளத்தை விட அதிக தாக்கத்தை போட்டிகளில் ஏற்படுத்தும் வீரர்களாக இவர்கள் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
செய்தி சுருக்கம்:
- 2025 ஐபிஎல் ஏலத்தில் குறைந்த தொகைக்கு வாங்கப்பட்டும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்கள் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- மிட்செல் ஸ்டார்க் (11.75 கோடி, டெல்லி கேப்பிடல்ஸ்), வாஷிங்டன் சுந்தர் (3.2 கோடி, குஜராத் டைட்டன்ஸ்), ஃபாஃப் டு பிளெஸிஸ் (2 கோடி, டெல்லி கேப்பிடல்ஸ்), கே.எல். ராகுல் (14 கோடி, டெல்லி கேப்பிடல்ஸ்), குவின்டன் டி காக் (3.6 கோடி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ஆகியோர் குறைந்த ஏலத்தில் வாங்கப்பட்ட முக்கிய வீரர்கள்.
- இந்த வீரர்கள் அனைவரும் தங்களது அணிகளுக்கு குறைந்த விலையில் அதிக பலனைத் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.