ARTICLE AD BOX
கொல்கத்தா: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் இன்று முதல் கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்குகிறது. ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை நிரூபித்து இந்திய அணிக்குள் வந்திருக்கிறார்கள். சமீபத்தில் வருண் சக்கரவர்த்தி கூட ஐபிஎல் தொடர் மூலம் தான் தற்போது இந்திய அணியில் தவிர்க்க முடியாத சுழற்பந்துவீச்சாளராக விளங்கி வருகிறார்.
இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் சுழற் பந்துவீச்சாளர்கள் ஒரு மிகப்பெரிய தவறு செய்வதாக ஹர்பஜன் சிங் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "நான் இதை சொல்வதற்கு வருந்துகிறேன். டி20 போட்டிகளாக இருக்கட்டும். ஐபிஎல் போட்டிகளாக இருக்கட்டும்."

"தற்போது சுழற் பந்துவீச்சாளர்கள் அனைவரும் வேகப்பந்துவீச்சாளர்கள் போல் பந்து வீசுகிறார்கள். பந்தை அவர்கள் சுழற்றுவதே கிடையாது. ஸ்பின்னர்கள் பேட்ஸ்மேன்களை தங்களது பந்து வீச்சு மூலம் தாக்குவது கிடையாது. விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்ற நோக்கமே அவர்களிடம் இல்லை."
"சுழற் பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் தைரியமாக இருக்க வேண்டும். வாய்ப்பை எடுத்துக்கொண்டு பந்தை வீசுங்கள். பந்தை நன்றாக ஸ்பின் செய்யுங்கள். பந்தை கொஞ்சம் தூக்கி வீசுங்கள். அப்போதுதான் உங்களுக்கு வாய்ப்புகள் ஏற்படும். விக்கெட்டுகளும் கிடைக்கும்" என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் பந்தில் எச்சில் தடவும் முறைக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு ஹர்பஜன்சிங் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், "இது நிச்சயம் பவுலர்களுக்கு நல்ல விஷயம்தான். ஐபிஎல் தற்போது ஆரம்பிக்கப்பட்டு விட்டதால் சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்த நடைமுறை வரும் என எதிர்பார்க்கின்றேன். ஏனென்றால் எச்சிலை வைத்து தான் பந்தை பளபளவென மாற்றமுடியும். இதன் மூலம் பந்து நன்றாக ஸ்விங் ஆகும்."
"சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் ஐபிஎல் தொடர் மூலம் பல இளைஞர்களின் திறமை வெளிச்சத்திற்கு வருகின்றது. தற்போது என்னுடைய பார்மை ரியான் பராக்கிடம் இருக்கின்றது. அவர் கேப்டனாக அசாம் அணிக்கு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். தற்போது ராஜஸ்தான் அணியின் தற்காலிக கேப்டனாக செயல்பட போகிறார். அதை நான் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றேன்" என்று ஹர்பஜன்சிங் கூறியுள்ளார்.