ARTICLE AD BOX
கொல்கத்தா: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் இன்று முதல் கோலாகலமாக தொடங்குகிறது. வரும் மே 18ஆம் தேதி வரை 70 லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து மே 20ஆம் தேதி முதல் பிளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெறுகிறது. மே 25ஆம் தேதி கொல்கத்தாவில் இறுதி போட்டி நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆன கொல்கத்தா அணி ஆர் சி பி அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மாலை ஏழு முப்பது மணிக்கு தொடங்குகிறது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் ரன்குவிப்புக்கு சாதகமாக இருக்கும். கடந்த முறை இதே மைதானத்தில் தான் 262 ரன்கள் என்ற இலக்கை கொல்கத்தா அணிக்கு எதிராக பஞ்சாப் அணி எட்டு பந்துகள் மிஞ்சிய நிலையில் வெற்றிகரமாக எட்டியது. தற்போது இந்த மைதானத்தில் தான் தொடக்கப் போட்டி நடைபெறுகிறது என்பதால் ரசிகர்களுக்கு நிச்சயம் வான வேடிக்கை இருக்கும்.
ஆனால் இன்று கொல்கத்தாவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. புதிய கேப்டன் தலைமையில் இரு அணிகளும் களமிறங்குகிறது. கேகேஆர் அணிக்காக ஏற்கனவே விளையாடிய பில் சால்ட் தற்போது ஆர்சிபி அணிக்காக களம் இறங்குகிறார்.
கடந்த சீசனில் பில் சால்ட் 435 ரன்கள் குவித்து இருந்த நிலையில், தற்போது அதேபோல் ஒரு ஆட்டத்தை இம்முறை ஆர் சி பி அணிக்காக அவர் வெளிப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்துள்ளது. எனினும் கொல்கத்தா அணியில் உள்ள வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் ஆகியோர் ஆர் சி பி யின் பேட்டிங் வரிசைக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.
எனினும் ஆர்சிபி அணியிலும் புவனேஸ்வர் குமார், ஹெசல்வுட் யாஷ் தயால், குர்ணல் பாண்டியா போன்ற பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆர் சி பி அணியின் புதிய கேப்டனான ரஜத் பட்டிதாரும், கே கே ஆர் அணியின் புதிய கேப்டனான ரகானேவும் வெற்றியுடன் தொடரை தொடங்குவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் பார்க்கலாம்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் இந்த போட்டிகளை பார்க்க முடியும். ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.299 உங்களுடைய நம்பருக்கு ரீசார்ஜ் செய்தால் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஐ இலவசமாக பார்க்கும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. இல்லை என்றால் குறைந்த பட்சம் 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் டிஸ்னி ஹாட் ஸ்டார் பார்க்கும் வசதி கிடைக்கும். கடந்த முறை எந்த சிம் கார்டு வைத்திருந்தாலும் இலவசமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.