ARTICLE AD BOX
International Women's Day 2025: எனக்கு வலிமை இருக்கும் வரை.. இந்தியாவின் கவிக்குயில் சரோஜினி நாயுடு
International Women's Day 2025: மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நன்னாளை முன்னிட்டு இந்தியாவில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட காரணமாக இருக்கும் ஒரு பெண்மணி குறித்து தெரிந்து கொள்வோம்.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி இந்தியாவில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் கவிக்குயில் என அழைக்கப்படும் சரோஜினி நாயுடு அவர்களின் பிறந்தநாளை ஒட்டி தான் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

கவிஞர், எழுத்தாளர், அரசியல் தலைவர், பெண் உரிமை போராளி என பன்முகம் கொண்டவர் சரோஜினி நாயுடு. 1879 ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி ஐதராபாத்தில் பிறந்தார். பெண்களின் மேம்பாட்டுக்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் சரோஜினி நாயுடு ஆற்றிய பங்களிப்பை போற்றும் வகையில் அவருடைய பிறந்த தினமானது தேசிய மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இவருடைய தந்தை சட்டோபாத்யாய் ஒரு கல்வியாளர் மற்றும் அறிவியல் விஞ்ஞானி. அவர் சிறுவயதிலிருந்து தன்னுடைய மகளையும் படிக்க வேண்டும் என ஊக்குவித்து வந்தாராம். இதனால் சரோஜினி நாயுடுக்கு சிறுவயதிலிருந்தே படிப்பின் மீது ஆர்வம் அதிகம். அதை விட கவிதை எழுதுவது என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு ஊடகமாக கவிதையை பயன்படுத்தி கொண்டார் சரோஜினி நாயுடு.
சரோஜினி நாயுடுவின் படைப்புகளால் கவரப்பட்ட ஐதராபாத் நிஜாம், வெளிநாடு சென்று படிக்க அவருக்கு உதவித்தொகை வழங்கினார் . இதன் மூலம் லண்டன் கிங்ஸ் மற்றும் கேம்பிரிட்ஜ் கல்லூரியில் பயின்றார். பின்னர் 1905-ல் இந்திய தேசிய இயக்கத்தில் இணைந்தார். இந்தியப் பெண்கள் சமையலறையை விட்டு வெளியே வந்து நாட்டின் உரிமைக்காகப் போராட வேண்டும் என குரல் எழுப்பினார்.
இந்தியாவை மையமாக கொண்டு 'தி கோல்டன் த்ரஷோல்ட்', 'தி பேர்ட் ஆஃப் டைம்', 'தி ப்ரோக்கன் விங்' உள்ளிட்ட ஆங்கில கவிதைகளை எழுதியுள்ளார். சரோஜினி நாயுடுவின் கவிதை திறனை பார்த்து மகாத்மா காந்தி தான் அவருக்கு நைட்டிங்கேல் ஆஃப் இந்தியா அதாவது இந்தியாவின் கவிக்குயில் என்ற பட்டத்தை வழங்கினார்.
சரோஜினி நாயுடுவை பொறுத்தவரை இந்திய விடுதலைக்கு பங்காற்றிய முக்கிய பெண் தலைவராவார். ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம் என நாட்டின் விடுதலைக்கான பல்வேறு முக்கிய இயக்கங்களிலும் பங்கு கொண்டவர் சரோஜினி நாயுடு. ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையும் இவரையே சாரும். இந்தியாவின் கலாச்சாரம் ,விடுதலைக்காக மக்கள் எதிர்கொண்ட போராட்டம் மற்றும் பெண்கள் உரிமை குறித்து தன்னுடைய கவிதைகளில் மிக அழகாக எடுத்துரைத்திருக்கிறார் சரோஜினி நாயுடு. இந்தியாவில் பெண்களின் உரிமைக்காக போராடிய இந்திய பெண்கள் கூட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.
1930 ஆம் ஆண்டு அகில இந்திய பெண்கள் மாநாட்டில் நான்காவது தலைவராக பதவி வகித்தார். பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என தொடர்ந்து போராடி அதனைப் பெற்றுத் தந்த பெருமை இவரையே சாரும். இவர் எனக்கு வேலை செய்வதற்கான வலிமை இருக்கும் வரை மக்களுக்காக சேவை செய்வேன் என்றார். தன்னுடைய இந்த கூற்றை நிரூபிக்கும் வகையில் இறுதி மூச்சு வரை தன்னுடைய சமூக பணிகளை தொடர்ந்தார்.