ARTICLE AD BOX
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் தருவாயில் இருந்தும் ரசிகர்களுக்கு ஒரு இன்ப டென்ஷன் ஏற்பட்டது. ஆம் எப்படியோ வெற்றி பெற்று விடுவோம் என ரசிகர்களுக்கு தெரிந்தாலும், விராட் கோலி சதம் அடிப்பாரா மாட்டாரா என்பதில் தான் அந்த டென்ஷன் அமைந்தது.
ஏனென்றால் வெற்றிக்கு தேவையான ரன்கள் குறைவாக இருந்த நிலையில், விராட் கோலி சதம் அடிப்பாரா இல்லையா என்ற டென்ஷன் தான் அது. அதாவது வெற்றிக்கு நான்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் விராட் கோலி 95 ரன்கள் உடன் களத்தில் இருந்தார்.

அப்போது 43-வது ஓவரில் விராட் கோலி முதல் ரன்னை அடிக்க அக்சர் பட்டேல் இரண்டாவது பந்தில் சிங்கிள் ஓடினார். அப்போது விராட் கோலி 96 ரன்கள் உடன் மீண்டும் பேட்டிங்கிற்கு வந்தார். அப்போது வெற்றிக்கு வெறும் இரண்டு ரன்கள் தான் தேவைப்பட்டது. இந்த நிலையில் தான் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த ரோகித், விராட் கோலியை நோக்கி என்ன சிங்கிள்ஸ் ஓடுகிறாய்?
ஒரே அடியாய் சிக்ஸர் அடித்து சதத்தைக் கொண்டு வா என்று ரோகித் சர்மா சைகையில் காட்டி சிரித்தார். இதனை பார்த்த விராட் கோலி மூன்றாவது பந்தில் பவுண்டரி அடிக்க இந்திய அணியும் வெற்றிக் கோட்டை தாண்டியது. விராட் கோலியின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 51 வது சதத்தை பூர்த்தி செய்தார். விராட் கோலி சதம் அடித்தவுடன் ஒட்டுமொத்த ட்ரெஸ்ஸிங் ரூமும் எழுந்து நின்று கை தட்டியது.
ரோகித் சர்மா உற்சாகத்தில் கைதட்டி சிரித்தார். அப்போது ரோகித் சர்மாவை பார்த்து விராட் கோலி கையை காட்டி நான் இருக்கிறேன் என்று கூறினார். இதை அடுத்து, வீரர்கள் கைகுலுக்கும் போதும் ரோகித் சர்மா, விராட் கோலியை கட்டி அணைத்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
விராட் கோலியின் ரோகித் சர்மா ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சண்டை போட்டு வரும் நிலையில் இருவரும் ஒரு நல்ல நண்பர்களாகவும் அண்ணன் தம்பி போலவும் களத்தில் நடந்து கொண்டது காண்போரை நெகிழ வைத்தது. இது குறித்து பாராட்டியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் நவஜோத் சிங் சித்து, விராட் கோலியின் சதத்திற்காக ரோகித் சர்மா சந்தோஷப்படுவதில் தான் இந்திய அணியின் உண்மையான வெற்றி இருக்கிறது. இந்த ஒற்றுமை இருக்கும் வரை இந்திய அணி தொடர்ந்து வெல்லும் என்று பாராட்டியுள்ளார்.