ARTICLE AD BOX
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பை வெல்வதை விட இந்திய அணிக்கு எதிராக வெல்வது முக்கியம் என அந்நாட்டின் பிரதமர் பேசியிருந்தார். அப்படி ஒட்டுமொத்த பாகிஸ்தான் ஆடும் இந்தியா அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி வெற்றி பெறுமா? என எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி இந்தியா அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. மேலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் மிக மோசமாக விளையாடி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து அரை இறுதி வாய்ப்பையும் இழந்து இருக்கிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் குழு மீது அந்நாட்டின் கிரிக்கெட் அமைப்பு அதிருப்தியில் உள்ளது. தற்போது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஆக்கிப் ஜாவித் இருக்கிறார். இவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு சில மாதங்களே ஆகின்றன.
கடந்த ஆண்டில் மட்டும் மூன்று வெவ்வேறு பயிற்சியாளர்களை பாகிஸ்தான் அணி மாற்றி இருக்கிறது. இந்த நிலையில் சில மாதங்களே பயிற்சியாளராக இருந்த ஆக்கிப் ஜாவித்தையும், அவருடன் இருக்கும் உதவி பயிற்சியாளர்களையும் ஒட்டுமொத்தமாக அணியிலிருந்து நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இப்போது மற்றொரு சிக்கலும் உள்ளது. சமீபத்தில் தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பியும், ஒரு நாள் மற்றும் டி20 அணியின் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டனும் நியமிக்கப்பட்டு, அவர்கள் சில மாதங்களிலேயே அடுத்தடுத்து பதவி விலகினர். இப்படி உலகின் சிறந்த பயிற்சியாளர்களை அழைத்து வந்து அவர்களை அலைக்கழித்து, வெளியேறச் செய்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வேறு எந்த பயிற்சியாளரும் பதவியை ஏற்க ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
தற்போது உள்ள சூழ்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் யாரையேனும் பயிற்சியாளராக நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பில் பல்வேறு அரசியல்கள் உள்ளன. முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள் என பலரும் இந்த அரசியலுக்குள் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர். தற்போது அவசர கதியில் பயிற்சியாளரை மாற்றினால் மட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னேறி விடுமா? என கிரிக்கெட் ஆர்வலர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.