ARTICLE AD BOX
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இதற்கு முன் இவ்விரு அணிகளும் 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மோதியிருந்தன. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அன்றைய தினம் ஒரு நோ பால் இந்திய அணியின் மொத்த ஆட்டத்தையும் தலைகீழாக மாற்றியது.
அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஃபகர் ஜமான் பும்ரா வீசிய நான்காவது ஓவரின் முதல் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால், அந்த பந்தை பும்ரா நோபால் ஆக வீசியதால் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டது. அதுதான் அந்த போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனையாகவும், இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.

அதன் பின் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் அசார் அலி மற்றும் ஃபகர் ஜமான் முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்தனர். ஃபகர் ஜமான் 114 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். முதலிலேயே அதிக விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதால் பாகிஸ்தான் அணி கடைசி ஓவர்களில் அதிரடியாக ரன் சேர்த்தது. அனுபவ வீரர் முகமது ஹஃபீஸ் 37 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தார். அதன் மூலம் பாகிஸ்தான் அணி 338 ரன்கள் சேர்த்தது.
ஒருவேளை ஃபகர் ஜமான் நான்காவது ஓவரிலேயே ஆட்டம் இழந்திருந்தால், நிச்சயமாக பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து சில விக்கெட்டுகளை இழந்து அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கும். ஆனால், அந்த ஒரு நோ பால் காரணமாக பாகிஸ்தான் அணி தன்னம்பிக்கையை பெற்றது.
ஒருவேளை அன்று பாகிஸ்தான் அணி 300 ரன்கள் எடுக்காமல் இருந்திருந்தால், இந்திய அணி அதிக தன்னம்பிக்கையுடன் சேசிங் செய்திருக்க வாய்ப்பிருந்தது. ஆனால், பாகிஸ்தான் அணி இப்படி விளையாடும் என எதிர்பார்க்காததாலும், இந்திய அணியில் பும்ரா, அஸ்வின், ஜடேஜா போன்ற சிறந்த பந்து வீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததாலும் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது.
339 ரன்களை சேஸிங் செய்த போது ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அடுத்து விராட் கோலி 5 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஷிகர் தவான் 21 ரன்கள் எடுத்தும், யுவராஜ் சிங் 22 ரன்கள் எடுத்தும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். தோனி ஐந்தாம் வரிசையில் இறங்கி 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
கேதர் ஜாதவ் 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி 72 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. அப்போதே இந்திய அணியின் தோல்வி முடிவாகிவிட்டது. முன்னணி பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தது இந்திய அணியின் தன்னம்பிக்கையை முற்றிலுமாக குலைத்து விட்டது.
அந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தனி ஆளாக நின்று 43 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார். அது மட்டுமே இந்திய அணிக்கு ஒரே ஆறுதலாக அமைந்தது. மேலும், அன்றைய தினம் நிச்சயமாக பாகிஸ்தானுக்கு அதிர்ஷ்டமான நாள் என்றுதான் சொல்ல வேண்டும். பாகிஸ்தானுக்கு கிடைத்த பல பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் பேட்ஸ்மேன்களால் திட்டமிடப்பட்டு அடிக்கப்பட்டவை அல்ல.
சில சமயம் எட்ஜ் ஆகியும், சில சமயம் ஹெல்மெட் மற்றும் கிளவுஸில் பட்டும் பவுண்டரிகள் கிடைத்தன. இதை பாகிஸ்தான் அணி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. எனினும், எல்லா நாளும் பாகிஸ்தானுக்கு அதிர்ஷ்டம் கிடைக்காது என்பதை அடுத்து அந்த அணி பல தொடர்களில் தோல்விகளை சந்தித்தபோது நாம் உணர்ந்திருக்கலாம். பழைய கசப்பான சம்பவத்திற்கு இந்த முறை இந்திய அணி 2025 சாம்பியன்ஸ் டிராபி குரூப் சுற்றுப் போட்டியில் பதிலடி கொடுக்குமா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.