ARTICLE AD BOX
துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விராட் கோலி சதம் அடிக்க வேண்டி அக்சர் பட்டேல் செய்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. அக்சர் வேறு மாதிரி யோசித்து ஆடி இருந்தால் விராட் கோலி சதம் அடித்து இருக்க முடியாது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்திய அணி சேஸ் செய்தபோது விராட் கோலி நங்கூரமிட்டு கடைசி வரை ஆடினார். ஒரு கட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்குத் தேவையான ரன்களுக்கும், விராட் கோலியின் சதத்திற்குத் தேவையான ரன்களுக்கும் இடையிலான வித்தியாசம் மிகக் குறைவாக இருந்தது.

42வது ஓவருக்கு முன்னதாக விராட் கோலியின் சதத்திற்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அக்சர் பட்டேல் களத்தில் இருந்தார். அவர் விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என சில விஷயங்களைச் செய்தார். அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் அக்சர் பட்டேல் ஒரு ரன்னும், விராட் கோலி ஒரு ரன்னும் ஓடினர்.
இரண்டாவது பந்தில் விராட் கோலி ரன் ஓடாமல் நின்று அதன் பின் சில பவுண்டரிகளை அடித்து தனது சதத்தை நிறைவு செய்திருக்கலாம். ஆனால், விராட் கோலி இந்த முறை சதம் அடிக்க வேண்டும் என்பதை நோக்கி விளையாடவில்லை. அதனால் இரண்டாவது பந்திலும் ஒரு ரன் ஓடினார். அதன் பிறகு மூன்றாவது பந்தை ஷஹீன் ஷா அப்ரிடி வைடாக வீசினார்.
IND vs PAK: பாகிஸ்தான் என்றாலே நம்ம ஆளை கையில பிடிக்க முடியாது.. ஹர்திக் பாண்டியா பவுலிங் சாதனை
அப்போது அக்சர் பட்டேல் ஒரு ரன் மட்டும் ஓடினார். அப்போது இரண்டாவது ரன் ஓடுவதற்கான அவகாசம் இருந்தது. விராட் கோலி இரண்டாவது ரன் ஓடி வருமாறு அக்சர் பட்டேலைப் பார்த்து அழைத்தார். ஆனால், அக்சர் பட்டேல் ஒரு சிறிய புன்னகையை மட்டும் செய்துவிட்டு ஓடி வர மறுத்துவிட்டார்.
அதாவது, 'தான் இரண்டாவது ரன்னை ஓடி வந்தால் அந்த ஓவரில் தான் அதிக பந்துகளை சந்திக்க வேண்டி இருக்கும். அதனால் தான் அதிக ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அதே சமயம் விராட் கோலி அடுத்த மூன்று பந்துகளை சந்தித்தால் அவர் சதம் அடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது' என்பதால் அக்சர் பட்டேல் இவ்வாறு நடந்து கொண்டார்.
அவரது இந்தச் செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. விராட் கோலி ரசிகர்கள் பலரும் அக்சர் பட்டேலுக்கு நன்றி கூறி வருகின்றனர். அந்த சம்பவத்திற்குப் பிறகும் ஷஹீன் ஷா அப்ரிடி பல யார்க்கர்களை வீசினார். ஆனாலும், விராட் கோலி அந்த ஓவரில் 8 ரன்கள் எடுத்ததோடு அடுத்த ஓவரில் ஒரு சிங்கிள் ரன் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து தனது சதத்தை நிறைவு செய்தார்.
அக்சர் பட்டேல் நினைத்திருந்தால் விராட் கோலியின் சதத்தை புறக்கணித்து விட்டு தானே கூடுதல் ரன்களைச் சேர்த்திருக்க முடியும். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. அவரது செயலால் விராட் கோலி தனது 51வது ஒரு நாள் போட்டி சதத்தை நிறைவு செய்தார்.