ARTICLE AD BOX
துபாய் : சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வரும் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பல பரிட்சை நடத்துகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெறும் இந்த போட்டி பாகிஸ்தானுக்கு வாழ்வா?சாவா? என்ற போட்டியாக அமைந்திருக்கிறது.
இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி, நல்ல பார்மில் இருக்கிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் நடைபெறும் போட்டியில் இந்தியா தான் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "வெள்ளை நிற கிரிக்கெட் பந்து போட்டிகள் பொருத்தவரை இந்தியா தான் மிகவும் சக்தி வாய்ந்த அணியாக விளங்குகிறது. கடந்த 25 ஆண்டுகளில் இந்தியா ஒரே ஒரு முறை தான் பாகிஸ்தானிடம் ஐசிசி தொடர்களில் தோல்வியை தழுவி இருக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லப்போகும் அணியாக இந்தியா கருதப்படுகிறது".
"இதனால் பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவை எதிர்கொள்வது சுலபமாக இருக்காது. பாகிஸ்தான் அணிக்கு சுழற் பந்துவீச்சை விளையாடத் தெரியாது. இந்திய அணியில் அக்சர் பட்டேல், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் என மூன்று தலைசிறந்த ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். துபாய் ஆடுகளமும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக தான் இருக்கும்".
"இதனால் பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி ஏற்படும். விராட் கோலி சுழற் பந்துவீச்சுக்கு எதிராக இருக்கும் பிரச்சனையை சரி செய்வார் என நான் நம்புகிறேன். விராட் கோலி 81 சர்வதேச சதம் அடித்து இருக்கிறார். எனவே அவருக்கு லெக் ஸ்பின் எதிராக எப்படி ரன் சேர்க்க வேண்டும் என்று நன்றாகவே தெரியும்.வெள்ள நிற கிரிக்கெட் பந்தை பொறுத்த வரை இந்தியாவிடம் பல திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள்".
"இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா விளையாடுவதெல்லாம் நம்பவே முடியவில்லை. இதனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவராலும் விளையாட முடியும். தேர்வு குழுவினரும் பயிற்சியாளருக்கும் எப்படிப்பட்ட வீரர்களை வேண்டுமானாலும் தேர்வு செய்ய தற்போது சுதந்திரம் இருக்கிறது.
ஏனென்றால் அனைத்து வீரர்களுமே திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். இந்திய அணியில் 5 சுப்மன் கில் (போன்ற வீரர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் எந்த போட்டியிலும் சதம் அடித்து ஆட்டத்தை வெற்றி பெற வைப்பார்கள்" என்று கங்குலி கூறியுள்ளார்.