ARTICLE AD BOX
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவின் கேப்டனாக சுப்மன் கில் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது தசைப்பிடிப்பு ஏற்பட்டது.
அதன் காரணமாக அவர் தற்போது பயிற்சியில் ஈடுபடாமல் இருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான அடுத்த போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. அதற்கு முன் ரோஹித் சர்மாவால் முழு உடல் தகுதியைப் பெற முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை நடந்த வலைப் பயிற்சியின்போது ரோஹித் சர்மா மட்டுமே இந்திய அணியில் ஒரு முறை கூட பயிற்சி செய்யாத வீரர். மேலும், ரோஹித் சர்மா த்ரோடவுன் பயிற்சியைக் கூட செய்யவில்லை. பொதுவாக த்ரோடவுன் பயிற்சியில் காயம் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்பதால் சில பேட்ஸ்மேன்கள் காயம் அல்லது வலி இருந்தால் பந்துவீச்சாளர்களை தவிர்த்து விட்டு, த்ரோடவுன் நிபுணர்களை வைத்து பேட்டிங் பயிற்சி செய்வார்கள். அதையும் ரோஹித் செய்யவில்லை.
இந்திய அணியின் வலைப் பயிற்சி நடந்தபோது பயிற்சியாளர் கவுதம் கம்பீருடன், ரோஹித் சர்மா ஆலோசனை செய்தார். ஆனால், பயிற்சி செய்யவில்லை. இதன் மூலம், அவரது தசைப்பிடிப்பு இன்னும் சரியாகவில்லை என தெரிய வந்துள்ளது.
ஒருவேளை, ரோஹித் சர்மாவால் நியூசிலாந்து போட்டியில் (மார்ச் 2) ஆட முடிந்தாலும், அடுத்த இரண்டாவது நாள் (மார்ச் 4) இந்திய அணி அரையிறுதியில் விளையாட வேண்டிய அவசியம் உள்ளது. ஒருவேளை, ரோஹித் சர்மாவை நியூசிலாந்து போட்டியில் விளையாட வைத்து அவரது தசைப்பிடிப்பு மேலும் சிக்கலானதாக மாறிவிட்டால், அரையிறுதியில் ரோஹித் பங்கேற்பதில் சிரமம் ஏற்படும்.
அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் கூட ரோஹித் சர்மாவை நியூசிலாந்து போட்டியில் விளையாட வைக்க வேண்டாம் என இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டு இருக்கலாம் என்ற மற்றொரு கோணமும் கூறப்படுகிறது. அதனால், தற்காலிகமாக இந்தியா - நியூசிலாந்து மோதும் போட்டியில் சுப்மன் கில் கேப்டன் பதவியை ஏற்பார் எனக் கூறப்படுகிறது.
IND vs NZ: கேப்டன் ரோஹித், துணை கேப்டன் கில் உடல்நிலையில் சிக்கல்.. பயிற்சி செய்யவே வரவில்லை!
சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் எனக் கூறப்படுகிறது. ரோஹித் சர்மாவுக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக இருக்கும் ரிஷப் பண்ட் இந்திய அணியில் இடம் பெறுவார் எனவும் கூறப்படுகிறது. ரிஷப் பண்ட் துவக்க வீரராக விளையாட வாய்ப்பில்லை எனும் நிலையில், ரோஹித் சர்மாவின் இடத்தில் வேறு எந்த வீரர் துவக்க வீரராக இறங்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.