ARTICLE AD BOX
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி சேஸிங் செய்தபோது, சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ஜெய் ஷா, நியூசிலாந்து வீரர் ஜேமிசன் கேட்ச்சை நழுவ விட்டதை பார்த்து துள்ளிக் குதித்து அதை கொண்டாடினார்.
சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருக்கும் ஜெய் ஷா இப்படி நியூசிலாந்து அணியின் சொதப்பலை கொண்டாடலாமா? என பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்ததும் உள்ளனர்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 251 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 252 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது. இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் பேட்டிங் செய்து வந்தனர். அப்போது ஒரு பந்துக்கு ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது இந்திய அணி.
அழுத்தமான சூழ்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சிக்ஸ் அடித்தார். அடுத்த பந்திலேயே மீண்டும் பந்தை தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் பந்து அதிக தூரம் செல்லவில்லை. அப்போது கிடைத்த கேட்ச் வாய்ப்பை நியூசிலாந்து வீரர் ஜேமிசன் தவறவிட்டார். அதை பார்த்து ஜெய் ஷா மகிழ்ச்சியில் கொண்டாடினார். பார்வையாளர்கள் பகுதியில் இருந்த ஜெய் ஷா எழுந்து நின்று அருகில் இருந்தவர்களிடம் சொல்லி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
உண்மையான சாம்பியன்.. ஆஸ்திரேலியாவால் நினைத்துக் கூட பார்க்க முடியாததை செய்து காட்டிய இந்திய அணி
இது நேரலையில் ஒளிபரப்பானது. பலரும் இதை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். பாகிஸ்தான் ரசிகர்கள் இதை சர்ச்சையாக்கி உள்ளனர். சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருப்பவர், நியூசிலாந்து வீரர் செய்த தவறை கொண்டாடலாமா? என கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதற்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஜெய் ஷா முதலில் இந்தியர், அதன் பிறகுதான் சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவர், பிசிசிஐ அமைப்பின் சார்பில் தான் அவர் ஐசிசி தலைவராக இருக்கிறார் என சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இதற்கு முன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின்போதும் ஜெய் ஷா இதேபோல ஹர்திக் பாண்டியா சிக்ஸ் அடித்ததற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். அப்போதும் பாகிஸ்தான் ரசிகர்கள் இதே குற்றச்சாட்டை சுமத்தினர். தற்போது மீண்டும் ஜெய் ஷாவை குற்றம் சுமத்தி உள்ளனர்.
இந்த முறை பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தினாலும், இந்த தொடரின் ஒரு அரையிறுதி போட்டி மட்டுமே பாகிஸ்தானில் நடத்தப்பட்டது. இறுதிப் போட்டியும் பாகிஸ்தானில் நடக்காமல் துபாயில்தான் நடத்தப்பட்டது. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், பாகிஸ்தான் இறுதிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை இழந்தது. இதன் பின்னணியில்தான் பாகிஸ்தான் ரசிகர்கள் ஜெய் ஷாவை குறிவைத்து விமர்சனம் செய்து வருகின்றனர்.