ARTICLE AD BOX
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுவது உறுதியாகியுள்ளது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை நியூசிலாந்து அணி வீழ்த்தியதைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில், இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு ஒரு முக்கிய சவாலாக நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மேட் ஹென்றியின் வருகை அமைய உள்ளது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் மேட் ஹென்றி காயம் காரணமாக விளையாடவில்லை.

ஆரம்பத்தில், அவர் இறுதிப் போட்டியில் விளையாட மாட்டார் என்று இந்திய ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால், நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் இது குறித்து விளக்கமளித்துள்ளார். மேட் ஹென்றி இறுதிப் போட்டிக்கு முன் தயாராகிவிடுவார் என்று அவர் கூறியிருப்பது இந்திய அணிக்குத் தலைவலியாக மாறியுள்ளது.
மேட் ஹென்றி இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். இதுவரை 11 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக விளையாடி இருக்கும் அவர், 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணிக்கு எதிராக அவரது பந்துவீச்சு சராசரி 21 ஆகவும், எக்கானமி 4.48 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 28 ஆகவும் உள்ளது. இது அவரது ஒட்டுமொத்த சிறந்த பந்துவீச்சு செயல்பாடுகளில் மூன்றாவதாக உள்ளது. நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு அடுத்து, மேட் ஹென்றி இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய குரூப் சுற்றுப் போட்டியிலும் மேட் ஹென்றி மிகச் சிறப்பாக பந்து வீசியிருந்தார். அந்தப் போட்டியில் அவர் 42 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார். இதுவே இந்தியாவுக்கு எதிராக அவரது சிறந்த பந்துவீச்சாகும்.
IND vs NZ: பந்துவீச்சில் 3 ஆண்டுகளாக விதிக்கப்பட்ட தடையை நீக்குங்கள்.. ஐசிசிக்கு முகமது ஷமி கோரிக்கை
துபாய் போன்ற மந்தமான ஆடுகளத்தில் கூட மேட் ஹென்றி வேகப்பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவராக இருக்கும் நிலையில், இந்திய அணி அவரை சமாளிப்பதற்குத் தனியாக திட்டமிட வேண்டும். மேலும், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, மேட் ஹென்றி பந்துவீச்சில் தொடர்ந்து ஆட்டம் இழந்து வருகிறார். இதுவும் இந்திய அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
எனவே, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள இறுதிப் போட்டியில் மேட் ஹென்றி முக்கியமான பந்துவீச்சாளராக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார். அவரை சமாளிக்க இந்திய அணி திட்டமிட வேண்டிய அவசியம் உள்ளது.