ARTICLE AD BOX
துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ரமலான் நோன்பை கடைபிடிக்காமல் இருப்பதற்காக கடும் விமர்சனங்கள் எழுந்து இருந்த நிலையில், அவருக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சையத் கிர்மானி முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கி இருக்கிறார்.
"ரமலான் மாதத்தின் அனைத்து நாட்களிலும் பகல் நேரத்தில் இஸ்லாமியர்கள் உண்ணாவிரதம் இருந்து நோன்பு இருக்க வேண்டும். ஆனால், முகமது ஷமி அதை கடைபிடிக்கவில்லை" என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் போது தண்ணீர் அருந்தினார் என சிலர் அதை விமர்சித்து இருந்தனர்.

இது குறித்து பேசி இருக்கும் சையத் கிர்மானி, "நீங்கள் நாட்டுக்காக ஆடுகிறீர்கள். இது ரமலான் மாதம்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நிறைய விமர்சனங்கள் எழுந்து உள்ளது. நாம் நமது நாட்டுக்காக வாழ்க்கையை கொடுக்கிறோம், நாட்டின் கொடியை உயர்த்திப் பிடிப்பதற்காக விளையாடுகிறோம்."
"மக்கள் என்ன சொன்னாலும் அவர்கள் சொல்லிவிட்டு போகட்டும். ஒவ்வொருவர் மீதும் இங்கு நிறைய விமர்சனங்கள் உள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப அதை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். முற்றிலும் இதெல்லாம் ஒன்றுமே இல்லை. ஒரு காதில் இதை வாங்கி, மற்றொரு காதில் இதை வெளியே விட்டு விடுங்கள். இந்த விமர்சனங்களை நீங்கள் காதில் வாங்கினால் உங்களுக்கு நிறைய அழுத்தம் ஏற்படும். என்ன எழுதினாலும், யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். உங்களது கட்டுப்பாட்டில் இருங்கள். நாட்டுக்காக விளையாடுங்கள்" என்று கூறி இருக்கிறார் சையத் கிர்மானி
.
முகமது ஷமியின் உறவினரான மும்தாஜ் என்பவரும் ஷமிக்கு ஆதரவாகப் பேசி இருக்கிறார். "ஷமி நாட்டுக்காக ஆடுகிறார். நிறைய பாகிஸ்தான் வீரர்கள் நோன்பு கடைப்பிடிக்காமல் போட்டிகளில் விளையாடுகிறார்கள். இது எதுவும் புதிய விஷயம் அல்ல. ஆனால் முகமது ஷமி பற்றி இப்படி பேசுவது அவமானமாக உள்ளது. முகமது ஷமி இதைப் பற்றி எல்லாம் நிச்சயமாக சிந்திக்காமல், மார்ச் 9 இறுதிப் போட்டிக்காக தயாராகுமாறு நாங்கள் சொல்வோம்" என்றார்.