ARTICLE AD BOX
துபாய்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த போட்டியில் அவரே இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்தார். இதுவே அவரது முதல் சாம்பியன்ஸ் டிராபி போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை டி20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தி வந்த வருண் சக்கரவர்த்தி, தற்போது ஒருநாள் அணியில் இடம் பெற்று தனது இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில், தனது முதல் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இந்தப் போட்டிக்கு முந்தைய தினம் இரவு அணி நிர்வாகத்திடம் இருந்து வந்த மெசேஜ் பற்றியும் கூறினார்.

இது பற்றி வருண் சக்கரவர்த்தி போட்டி முடிந்தவுடன் ஆட்டநாயகன் விருதை வாங்கிய பின் பேசினார். "முதலில் எனக்கு பதற்றமாக இருந்தது. நான் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக முறை ஆடியது இல்லை. ஆட்டம் செல்ல, செல்ல நான் சற்று நிதானமடைந்தேன். விராட் கோலி, ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹர்திக் பாண்டியா அவ்வப்போது என்னுடன் பேசினர். அது எனக்கு உதவியது."
"எனக்கு நேற்று இரவு தான், நான் விளையாடுகிறேன் என்பது தெரியும். அப்போது தான் எனக்கு மெசேஜ் வந்தது. நான் நாட்டுக்காக விளையாடுவேன் என்று முன்பே எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், மற்றொருபுறம் எனக்கு அது பதற்றமாகவும் இருந்தது."
"என்னையா டீம்ல எடுக்கக் கூடாதுன்னு சொன்னீங்க".. நியூசிலாந்தை கதிகலங்க வைத்த வருண்.. 5 விக்கெட்
"இது முற்றிலும் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் இல்லை. ஆனால், சரியான இடங்களில் நாம் பந்தை வீசினால் அது நமக்கு உதவும். குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பந்து வீசிய விதமும், வேகப்பந்துவீச்சாளர்கள் பந்து வீசியதும் சிறப்பாக இருந்தது. இது ஒட்டுமொத்த அணியின் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி தான்" என்றார் வருண் சக்கரவர்த்தி.
அவர் இந்த போட்டியில் பத்து ஓவர்களில் 42 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 249 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.