ARTICLE AD BOX
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி ஒரு வியத்தகு சாதனையும் ஒரு மோசமான சாதனையும் சேர்த்து செய்திருக்கிறார். கேட்ச் பிடிப்பதில் முக்கிய சாதனை ஒன்றை செய்து இருக்கும் கோலி, குறிப்பிட்ட வகையான பந்துவீச்சாளர்களிடம் அதிக முறை விக்கெட்டை பறிகொடுத்து சோதனையை எதிர்கொண்டு இருக்கிறார்.
இந்தப் போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது விராட் கோலி 43வது ஓவரில் ஷமியின் பந்துவீச்சில் ஜாக்கர் அலி கொடுத்த கேட்சை பிடித்தார். அது ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலியின் 156ஆவது கேட்ச் ஆகும். இதன் மூலம் இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் முகமது அசாருதீனுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார் கோலி.

அப்போதைய காலகட்டத்தில் இந்திய அணியின் சிறந்த ஸ்லிப் ஃபீல்டர்களில் ஒருவராக இருந்தார் முகமது அசாருதீன். அவருடன் விராட் கோலி முதலிடத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 140 கேட்சுகளுடனும், அடுத்த வரிசையில் ராகுல் டிராவிட் 124 கேட்சுகளுடனும், சுரேஷ் ரெய்னா 120 கேட்சுகளுடனும் உள்ளனர்.
மேலும் சர்வதேச அளவில் விராட் கோலி மற்றும் முகமது அசாருதீன் மூன்றாவது இடத்தில் உள்ளனர். இலங்கையின் மஹிளா ஜெயவர்தனே ஒரு நாள் போட்டிகளில் 218 கேட்சுகளை பிடித்து இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 160 கேட்சுகளை பிடித்து இருக்கிறார்.
இந்த வியத்தகு சாதனையை செய்த விராட் கோலி அடுத்து பேட்டிங் செய்தபோது 22 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேச அணியின் லெக் ஸ்பின்னர் ரிஷாத் ஹொசைன் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் 23 முறை லெக் ஸ்பின்னர்களிடம் விராட் கோலி ஆட்டம் இழந்து இருக்கிறார். கடந்த 2024ஆம் ஆண்டில் இருந்து மட்டும் ஐந்து முறை லெக் ஸ்பின்னர்களின் பந்துவீச்சில் விராட் கோலி ஆட்டம் இழந்து இருக்கிறார். இதுவே உலக அளவில் அதிகமாகும்.
உலக அளவில் ஒரு நாள் போட்டிகளில் லெக் ஸ்பின்னர்களிடம் அதிக முறை விக்கெட்டை பறிகொடுத்த வீரர்களின் பட்டியல்:
விராட் கோலி - 23 முறை
முஷ்பிகுர் ரஹீம், கேன் வில்லியம்சன் - 22 முறை
சகிப் அல் ஹசன் - 20 முறை
குசல் மெண்டிஸ், சிக்கந்தர் ராசா - 18 முறை
IND vs BAN: படுமோசமாக சிக்கிய கோலி.. வீக்னஸ்-ஐ வைத்து வீழ்த்திய வங்கதேசம்.. என்ன நடந்தது?
விராட் கோலியின் இந்த இரண்டு சாதனைகளும் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்கவை. ஒன்று அவரது ஃபீல்டிங் திறமையை எடுத்துக்காட்டுகிறது, மற்றொன்று அவரது பேட்டிங் பலவீனத்தை சுட்டிக்காட்டுகிறது.