ARTICLE AD BOX
துபாய்: இந்திய அணியில் தியாகி யார் எனக் கேட்டால் பலரும் கே.எல். ராகுல் தான் எனக் கூறுவார்கள். அந்த அளவுக்கு தியாக மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி சேசிங் செய்தபோது, சுப்மன் கில் சதம் அடிப்பதற்காக நிதானமாக விளையாடினார் கே.எல். ராகுல்.
இதை ரசிகர்கள் பலரும் சுட்டிக்காட்டி அவரது இடம் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், அவர் தனது ஆட்டத்தையும் பார்க்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் அரை சதம், சதம் அடிப்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். மாறாக, மற்றவர்களுக்கு உதவுகிறேன் என்ற பெயரில் தனது இடத்தை இழந்து விடக்கூடாது எனக் கூறி உள்ளனர்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்ற நிலை வந்தால், முதலில் கே.எல். ராகுலைத்தான் இந்திய அணி நிர்வாகம் அந்த இடத்தில் விளையாட வைக்கும். அந்த வகையில், துவக்க வீரர் என்ற இடத்தில் இருந்து ஏழாம் வரிசை வீரர் என்ற இடம் வரை பேட்டிங்கில் அத்தனை இடங்களிலும் இறங்கி இருக்கிறார் கே.எல். ராகுல்.
அதேபோல, ஒருநாள் அணி, டெஸ்ட் அணி, டி20 அணி என மூன்று அணிகளிலும் இதுபோல தனது பேட்டிங் வரிசையை அணியின் நலனுக்காக மாற்றிக் கொண்டு இருக்கிறார். இது மட்டுமின்றி, போட்டிகளின்போது ஏதேனும் ஒரு வீரர் சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தால், அவர்களின் வேகத்திற்கு ஏற்ப தனது பேட்டிங்கையும் நிதானமாக்கிக் கொண்டு அவர்கள் சதம் அடிக்க உதவுவார்.
IND vs PAK: பாகிஸ்தான் மேட்ச்சில் 14000 ரன்கள் ரெக்கார்டு.. விராட் கோலி இன்னும் 14 ரன்கள் எடுக்கணும்
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின்போது, அக்சர் ஆட்டம் இழந்து சென்றபோது இந்திய அணி 144 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு 85 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது சுப்மன் கில் 56 ரன்கள் எடுத்திருந்தால், அடுத்து வந்து கே.எல். ராகுல் அவருடன் இணைந்து விளையாடினார்.
ஒரு கட்டத்தில் சுப்மன் கில் 90-ஐ எட்டியவுடன், அவர் சதம் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கே.எல். ராகுல் சற்று நிதானமாக ரன் சேர்க்கத் துவங்கினார். அப்போது கில்
போர், சிக்ஸ் என அடித்து தனது ஸ்கோரை உயர்த்திக் கொண்டார். சரியாக வெற்றிக்கு அருகே செல்லும்போது, சுப்மன் கில் சதத்தை நிறைவு செய்தார்.
மறுபுறம், கே.எல். ராகுல் 47 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்தார். அவர் நினைத்திருந்தால் இடையே சில பவுண்டரிகளை அடித்து அரை சதத்தை அடித்திருக்க முடியும். ஆனால், கே.எல். ராகுல் அதை செய்யவில்லை. இதைத்தான் பல ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இதற்கு முன், 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையின்போது விராட் கோலி சதம் அடிப்பதற்காக கே.எல். ராகுல் நிதானமாக விளையாடி இருப்பார். தற்போது இந்திய அணியில் ரிஷப் பண்டை விக்கெட் கீப்பராக ஆட வைக்க வேண்டும் என்ற ஒரு விவாதம் நடந்து வருகிறது. ஆனால், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ராகுல் தான் விளையாட வேண்டும் என உறுதியாக இருக்கிறார்.
அந்த காரணத்தால் மட்டுமே தற்போது கே.எல். ராகுலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், அவர் தனது ஆட்டத்தையும் கவனிக்க வேண்டும். அடுத்து நடக்க உள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கே.எல். ராகுல் அரை சதம் அல்லது சதம் அடிக்கிறாரா என்று பார்க்கலாம்.