ARTICLE AD BOX
India vs Australia, ICC Champions Trophy 2025 : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

India vs Australia, ICC Champions Trophy 2025 : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் முதல் அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்களும், மார்னஷ் லபுஷேன் 61 ரன்களும் எடுத்தனர்.

துபாய் மைதானத்தைப் பொறுத்த வரையில் இந்த ஸ்கோரை சேஸ் செய்வது என்பது கடினம். எனினும், இந்திய அணி கடின இலக்கை துரத்தியது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதில் கில் 8 ரன்களில் ஆட்டமிழக்க ரோகித் சர்மா 28 ரன்னில் வெளியேறினார். பின்னர் விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டிற்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு தான் அக்ஷர் படேல் வந்தார். அவர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி அரைசதம் கடந்தார். இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 84 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கேஎல் ராகுல் அடித்து ஆடும் போது கோலியும் அடித்து ஆட முயற்சித்து ஆடம் ஜாம்பாவிடம் 5ஆவது முறையாக ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் கோலி 2 கேட்ச் பிடித்த நிலையில் ஒருநாள் போட்டியில் 161 கேட்சுகள் பிடித்து அதிக கேட்சுகள் பிடித்த 2ஆவது வீரராக சாதனை படைத்தார்.

பின்னர் கேஎல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்தனர். இதில் பாண்டியா ஒரே ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். கடைசியில் அவரும் 28 ரன்களில் ஆட்டமிழக்க கேஎல் ராகுல் கடைசியில் வின்னிங்ஷாட்டாக சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார்.

இறுதியாக இந்தியா 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 267 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதற்கு முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்விக்கு இப்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பதிலடி கொடுத்துள்ளது.

ஆஸி அணியைப் பொறுத்த வரையில் ஆடம் ஜாம்பா மற்றும் நாதன் எல்லீஸ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பென் த்வார்ஷூய்ஸ் மற்றும் கூப்பர் கான்லி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

வரும் 9ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில், தென் ஆப்பிரிக்கா அல்லது நியூசிலாந்து எந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.