இசைஞானி இளையராஜா, வேலியண்ட் என்ற சிம்பொனி இசையை உருவாக்கியுள்ளார். அதை வெளியிடுவதற்காக இன்று லண்டன் புறப்பட்டுச் சென்ற அவர், அதற்கு முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இன்கிரெடிபிள் இந்தியா மாதிரி நான் இன்கிரெடிபிள் இளையராஜா என்று கூறி அசத்தினார்.

வேலியண்ட் சிம்பொனி இசை

இசைஞானி என்று இசை ரசிகர்களால் அழைக்கப்படும் இளையராஜா, தனது முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசையான ‘வேலியண்ட்‘-ஐ உருவாக்கியுள்ளார். இந்த சிம்பொனி ராயல் ஸ்காட்டிஷ் தேசிய இசைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ‘வேலியண்ட்‘ உருவான விதம் குறித்த மேக்கிங் வீடியோ வெளியானது. அந்த வீடியோவில், இளையராஜா ராயல் ஸ்காட்டிஷ் தேசிய இசைக்குழுவில் உள்ள இசைக்கலைஞர்களுடன் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட இளையராஜா, இசை ஒரு உணர்ச்சி, வேலியண்ட் உங்கள் அனைவருக்கும் எனது அஞ்சலி என கூறியிருந்தார்.

"Incredible இந்தியா மாதிரி நான் Incredible இளையராஜா" - பேட்டி

இந்த வேலியண்ட் சிம்பொனி இசையை, லண்டனில் உள்ள ஈவென்டிசம் அப்பல்லோவில், வரும் 8-ம் தேதி நேரடியாக இசைத்து வெளியிட உள்ளார் இளையராஜா. ராயல் ஃபில்ஹார்மோனிக் இசைக்குழு இசைக்கும் இந்த நிகழ்ச்சி, இசையமைப்பாளர் மைக்கேல் டாம்ஸின் தலைமையில் இசைக்கப்பட உள்ளது. இதற்காக இன்று(06.03.25) லண்டன் புறப்பட்டுச் சென்றார் இளையராஜா. அதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்க அவர் பேட்டியளித்தார்.

அப்போது, வரும் 8-ம் தேதி, அப்பல்லோ அரங்கில், லண்டனில் உள்ள உலகிலேயே தலைசிறந்த இசைக்குழுவான ராயல் ஃபில்ஹாமோனிக் ஆர்க்கெஸ்ட்ரா நேரடியாக இசைத்து வெளியிடப்பட இருக்கும் தனது வேலியண்ட் சிம்பொனி இசை, ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறினார்.

மேலும், இது என்னுடைய பெருமை அல்ல, நாட்டின் பெருமை என்று கூறிய அவர், Incredible இந்தியா மாதிரி நான் Incredible இளையராஜா என கூறினார். மேலும், நீங்கள் எல்லாம் சேர்ந்ததுநான் என்றும், உங்களுடைய பெருமையை தான் நான் அங்கு நடத்தப்போகிறேன் என்றும் கூறி விடைபெற்றார் இளையராஜா.