Idly Kadai: தனுஷுடன் அருண் விஜய் - பரபர தனுஷ் பட அப்டேட்ஸ்!

2 hours ago
ARTICLE AD BOX
தனுஷ் இயக்கத்தில் உருவாகி வருகிற `இட்லி கடை' திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகிறது.

அதே நாளில் அஜித் நடித்துள்ள `குட் பேட் அக்லி' திரைப்படமும் வெளியாகவிருக்கிறது. நடிப்பை தாண்டி இயக்கத்தில் தனுஷ் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். இளைஞர்கள் பட்டாளத்தை வைத்து இவர் இயக்கியிருக்கும் `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' இம்மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜென் - சி-களின் காதலைப் பற்றி பேசும் திரைப்படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் பவிஷ், அனிகா சுரேந்தரன், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். துள்ளலான இசையையும் இப்படத்திற்குப் போட்டுக் கொடுத்திருக்கிறார் ஜி.வி. ஏற்கெனவே வெளியான இத்திரைப்படத்தின் இரண்டு பாடல்களும் பரவலாகப் பேசப்பட்டது. இப்படத்தை முடித்த கையோடு `இட்லி கடை' படத்திற்கான டைரக்‌ஷன் பணியை தொடங்கிவிட்டார் தனுஷ். இப்படத்தில் தனுஷுடன் நித்யா மேனன், ராஜ்கிரண் ஆகியோர் நடித்து வருவதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்தது. தற்போது படத்தில் அருண் விஜய் இணைந்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

இதற்கு முன்பு அஜித்துக்கு வில்லனாக `என்னை அறிந்தால்' திரைப்படத்தில் அருண் விஜய் நடித்திருந்தது பெரிதும் பேசப்பட்டது. இந்தப் படத்தில் குத்துச் சண்டை வீரராக நடிக்கிறார் என்பதை அறிவிப்பு போஸ்டரில் காட்சிப்படுத்தியுள்ளனர். இப்படத்திற்கு ஃபோல்க் வடிவத்தில் இசையமைத்திருப்பதாக சமீபத்திய விகடன் பேட்டியில் ஜி.வி தெரிவித்திருந்தார்.

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அருண் விஜய், ``உங்களுடைய கடின உழைப்பையும் அர்பணிப்பையும் `இட்லி கடை' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பார்த்து வியந்தேன். உங்களுடன் இந்த ஹை - வோல்டேஜ் என்டர்டெயினர் திரைப்படத்தில் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி." எனப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் இயக்கும் படங்களை தாண்டி சேகர் கமுகா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் `குபேரா' திரைப்படமும் இந்தாண்டு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மற்றொரு பக்கம், `ராஞ்சானா' , `அட்ராங்கி ரே' போன்ற திரைப்படங்களை தொடர்ந்து பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல். ராயுடன் தனுஷ் மீண்டும் கைகோர்க்கும் திரைப்படமான `தேரே இஷ்க் மெயின்' படமும் இந்தாண்டு நவம்பர் மாதம் 25-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.
Read Entire Article