ARTICLE AD BOX
சுயாதீன இசை துறையில் அடுத்தடுத்து பலர் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்
இதோ அந்த வரிசையில் அடுத்ததாக உருவெடுத்திருக்கிறார் கெளுத்தி! 19 வயதான இந்த இளைஞர் சுயாதீன இசையில் அட்டிக்கல்சருடன் இணைந்துப் பாடல்களைக் கொடுத்து கவனம் ஈர்த்து வருகிறார். ஹிப் ஹாப் ஆதி சமீபத்திய பேட்டியில் இவரைக் குறிப்பிட்டு பேசிய விஷயமும் இவருக்கு அடையாளத்தை தேடிக் கொடுத்தது. சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் `டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் முதல் பாடலான `கிஸ்ஸா 47' என்ற பாடலையும் எழுதியதும் கெளுத்திதான். சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கும் அவருக்கு வாழ்த்துக்களைச் சொல்லிப் பேசினோம்.
அவர், `` வணக்கம் அய்யா, பாட்டு ரிலீஸாகியிருக்கு. நிறைய பேர் பாடலை ஷேர் பண்றாங்க. இந்த ஃபீல் நல்லா இருக்கு. " என்றவாரு பேச தொடங்கி தனது பெயருக்கான காரணத்தையும் விளக்க தொடங்கினார். அவர், ``நான் மீனவ கிராமத்துல இருக்கேன். இங்க எல்லோரும் என்னை கெளுத்தினுதான் கூப்பிடுவாங்க. நான் மீன் பிடிக்கப் போகும்போது எனக்கு எப்போதும் கெளுத்தி மீன்தான் மாட்டும். அதை வச்சு எல்லோரும் என்னை கெளுத்தினு கூப்பிடுவாங்க. சரி, அதையே நம்ம பெயரா வச்சிடுவோம்னு இந்தப் பெயரை வச்சுட்டேன்." என்றார்.

``கொரோனா சமயத்துல டிஸ்கார்ட்னு ஒரு செயலி நல்ல பிரபலமாக இருந்துச்சு. அப்போ ஆஃப்ரோ, அசல் கோலாறுனு அட்டிகல்சர்ல இருந்தவங்க அந்த டிஸ்கார்ட்ல பேசுவாங்க. அப்போ நானும் அந்த டிஸ்கார்ட்ல இணைஞ்சு அவங்க பேசுறதை கேட்டுட்டு இருப்பேன். ஒரு நாள் அந்த டிஸ்கார்ட்ல எல்லோரிடமும் அவங்களோட பாடல் அனுப்பச் சொல்லிக் கேட்டாங்க. நானும் அப்போ பண்ணி வச்சிருந்த என்னுடைய பாடலை அனுப்பினேன். அதுக்கப்புறம் ஆஃப்ரோ என்னைக் கூப்பிட்டு பேசினாரு. அப்படிதான் அட்டிக்கல்சரோட என்னோட பயணம் தொடங்குச்சு. " என்றவர், `` வீடு - ஸ்கூல் - கோவில்...இதுதான் சின்ன வயசுல என்னோட தினசரியாக இருந்தது. எங்க தாத்தா ஒரு சிவன் கோவில் வச்சிருந்தாரு. அங்கப் போய் நான் திருவாசகம், திருப்புகழ்னு சாமி புத்தகங்கள் நிறையப் படிப்பேன். அப்படிதான் என்னோட இசை பயணம் தொடங்குச்சு. கொஞ்ச வருஷம் நான் கர்னாடிக் இசையும் படிச்சேன்.
`டிடி நெக்ஸ்ட் லெவல்'அதுக்கப்புறம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில கலந்துக்கலாம்னு ட்ரைப் பண்ணினேன். ஆனால், அங்க என்னை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. தொண்டைக்குள்ள அழுகையை கட்டுப்படுத்திட்டு அந்த இடத்துல இருந்து வெளில வந்துட்டேன். இதுக்கெல்லாம் பிறகு ஹிப் ஹாப் ஆதி அண்ணாவோட `மீசையை முறுக்கு' திரைப்படமும் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தது. இங்க இருக்கிற எல்லா குடும்பத்துக்கும் என் பாடல் போகணும்னு நான் ஆசைப்பட்டேன். அதுனால, எல்லோருடைய குடும்பங்கள்ல இருக்கிற வார்த்தைகள்ல இருந்து வார்த்தைகளை எடுத்து பாடல்கள் எழுதலாம்னு நான் யோசிச்சேன். நான் என் வீட்டுல நடக்குற விஷயங்களை கவனிக்கும்போது, நண்பர்களோட பேசும்போது சில விஷயங்கள் ஐடியாவாக வரும். அதை வச்சுதான் நான் பாடல்களை எழுதுவேன்.

இப்போ `டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தோட வாய்ப்பு ஆஃப்ரோ மூலமாகதான் கிடைச்சது. சந்தானம் சார் படத்துக்கு பாடல் எழுதப்போறோம்னு சொன்னதும் எனக்கு ரொம்பவே ஹாப்பி ஆகிடுச்சு. இந்த வாய்ப்புக்காக அவங்களுக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன். இந்தப் பாடலை எழுதும்போதும் சந்தானம் சாரும்கூடவேதான் இருந்தாரு. பாடல் வரிகள் எழுதும்போது எல்லா விஷயங்களையும் கவனிச்சிட்டேதான் இருந்தாரு." என்றார்.
மேலும் பேசிய அவர், `` `மீசையை முறுக்கு' திரைப்படம் எனக்கு இன்ஸ்பிரேஷன்னு சொல்லியிருந்தேன்ல...ஹிப் ஹாப் ஆதி அண்ணாவும் என்னை சமீபத்துல ஒரு பேட்டியில குறிப்பிட்டு சொல்லியிருந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது. நான் சின்ன வயசுல இருந்து அவரைப் பார்த்து வளர்ந்திருக்கேன். அவரைப் பார்த்து வியந்திருக்கேன். அவரே என்னைக் கூப்பிட்டு பாராட்டும்போது நம்ம சரியான விஷயத்தை பண்ணீட்டு இருக்கோம்னு நம்பிக்கையைக் கொடுத்தது.

என்னுடைய `ஒலலாய்' பாடல் வெளியானப்போ அதுல ஹிப் ஹாப் ஆதி அண்ணா `Kelithee is the future'னு ஒரு கமென்ட் போட்டிருந்தாரு. அந்த கமென்ட் என்னை புல்லரிக்க வச்சிடுச்சு. ஒரு நாள் அவரைப் போய் சந்திச்சும் பேசினேன். `ராப் பண்றதை தாண்டி நீ நார்மலா பண்ற விஷயம்தான் பெஸ்ட்னு' அப்போ சொன்னாரு. அவர் இந்த மாதிரி அடையாளப்படுத்துற விஷயங்களைப் பண்ணனும்னு அவசியமே கிடையாது.
ஆனா, திறமைகளை அடையாளம் கண்டு தொடர்ந்துப் பேசுறாரு. என்னை மட்டுமல்ல, என்னை மாதிரி இருக்கிற நிறையப் பேரை அவர் அடையாளப்படுத்தி பேசியிருக்காரு. அதே மாதிரி ஆஃப்ரோ அவர்கள் இப்போ பண்றது சாதாரணமான விஷயமே கிடையாது. என்னை மாதிரி இன்னும் சிலரை அவர் அறிமுகப்படுத்தியிருக்காரு. அவராலதான் நான் இன்னைக்கு இங்க இருக்கேன்.

அசல் கோளாறு....எனக்கு அவர் அசல் அண்ணன். ஒரு ப்ரேக்டவுன்ல இருக்கும்போது எங்களுக்கு வீடு எடுத்துக் கொடுத்து சாப்பாடுலாம் வாங்கிக் கொடுத்து பார்த்துக்கிட்டாரு. இப்போ ரெண்டுப் பேரும் பயங்கரமான வேலைகள் பண்ணீட்டு இருக்காங்க. " என்றவர், `` இப்போ டீனேஜ் முடியப்போகுது. டீன் முடியுறதுக்குள்ள எதாவது ஒரு வெளிநாட்டுக்கு போயிடணும்னு ஆசை இருக்கு! கடவுள் நடத்தி வைப்பார்னு நினைக்கிறேன்'' எனக் கூறி முடித்துக் கொண்டார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
