ARTICLE AD BOX
HBD Reba Monica John: தமிழில் பிகில் படத்தில் அனிதா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர், ரெபா மோனிகா ஜான். பின் விஷ்ணு விஷாலுடன் எஃப்ஐஆர் மற்றும் அவள் பெயர் ரஜினி உள்ளிட்ட சில படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கொள்ளைகொண்டவர்.
யார் இந்த ரெபா மோனிகா ஜான்? 1994ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி, கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர், ரெபா மோனிகா ஜான். 2016ஆம் ஆண்டு முதல் சினிமாக்களில் நடித்து வருகிறார். 2022ஆம் ஆண்டு, ரெபா மோனிகா, ஜோமோன் ஜோஷப் என்னும் நபரைத் திருமணம் செய்துகொண்டார். இருப்பினும், நடிப்பு மீது கொண்ட ஆசை காரணமாக விளம்பரம் மற்றும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மாடலிங் மற்றும் நடிப்புத்துறையில் ரெபா மோனிகா ஜான்:
சிறுவயது முதலே மாடலிங் மற்றும் நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்த ரெபா மோனிகா ஜான், சினிமாவில் கால் பதிப்பதற்கு முன்பு, சிறு சிறு விளம்பரங்களில் நடித்து வந்தார். அவர் நடித்ததில் தாத்திரி ஹேர் ஆயில் விளம்பரம், இவரது முகத்தை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. மலையாள டிவி சேனலான ’மழவில் மனோரமா’ நடத்திய ‘மிடுக்கி’ என்னும் ரியாலிட்டி தொடரில், 2013ஆம் ஆண்டு பங்கெடுத்த ரெபா, இரண்டாவது பரிசை தட்டிச்சென்றார். அதன் மூலம் மலையாள வெகுஜன மக்களின் ஆதரவை வென்றார்.
இதன்மூலம் கிடைத்த புகழ் இவரை வினித் சீனிவாசனிடம் கொண்டுபோய் விட்டது. அதன் பரிசாக வினீத் சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடித்து வெளிவந்த ‘ஜேக்கப்பின்டே சொர்க்கராஜ்யம்’திரைப்படத்தில், நிவின் பாலியின் காதலியாக சிப்பி என்னும் கதாபாத்திரம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார். பின் 2017ஆம் ஆண்டு ’பைப்பின் சுவட்டிலே பிரணயம்’ என்னும் படத்தில் கதாநாயகியாக அபிநயத்தார்.
தமிழில் நல்ல திருப்புமுனை தந்த படம்:
இது தந்த நல்லபெயர், ’ஜருகண்டி’ என்னும் தமிழ்ப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகம் ஆனார்.
பின் இவருக்குப் பெரிய அளவில் தமிழில் பிரேக் கொடுத்த படம் என்றால், ’பிகில்’ படத்தைச் சொல்லலாம். பிகில் படத்தில் அனிதா என்னும் கதாபாத்திரத்தில் பட்டையைக் கிளப்பியிருப்பார், ரெபா மோனிகா ஜான். பின், தனுசு ராசி நேயர்களே என்னும் தமிழ்ப்படத்தில் நடித்தார். அதனைத்தொடர்ந்து, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான எஃப்ஐஆர் படத்திலும் அர்ச்சனா கிருஷ்ணமூர்த்தி என்னும் கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார். தற்போது கூலி படத்திலும் ரஜினிகாந்துடன் முக்கியமான காட்சியில் நடித்து வருகிறார்.
முன்பு, மலையாளத்தில் ஃபாரின்ஷிக் என்னும் படத்தில் நடித்த அவர் 2022ஆம் ஆண்டு தெலுங்கில் ’சாமஜாவாரகமனா’ என்னும் படத்தின் மூலம் டோலிவுட்டிலும் நுழைந்தார். அதேபோல், ரத்தன் பிரபஞ்சா என்னும் கன்னட படத்தின் மூலம், சாண்டல்வுட்டில் அறிமுகம் ஆனார். இப்படி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமா இண்டஸ்டிரியில் கால் பதித்து தொடர்ந்து இயங்கி வருகிறார், ரெபா மோனிகா ஜான்.
முன்னதாக, அதேபோல், 2021ஆம் ஆண்டு சந்தோஷ் உதயநிதி இசையில், அ.ப. ராஜாவின் வரிகளில் வெளியான குட்டி பட்டாஸ் என்னும் ஆல்பம் பாடலில், அஸ்வினுடன் சேர்ந்து ரெபா ஜான் நடனமாடி வெளியான வீடியோ 180 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ஹிட்டடித்தது.
இப்படி தென்னிந்திய ரசிகர்களைத் தொடர்ந்து தனது கட்டுக்குள் வைத்திருக்கும் ரெபா மோனிகா ஜானுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்