ARTICLE AD BOX
குள்ளநரிகள் தந்திரசாலிகளா..? டோரா புஜ்ஜி சொல்வதுபோல் குள்ளநரிகள் திருடுமா..?
குள்ளநரிகள் பட்டினியால் இறக்காது என்கிறது சங்க இலக்கியங்கள். அது உண்மையா?
குள்ளநரிகளின் காதல் வாழ்க்கையின் சுவாரஸ்யம்...
குள்ளநரிகளுக்கு குடும்ப மொழி இருக்கிறதா?
நரிக்கொம்பு அழகானப் பெண்களை வசியம் செய்யுமா?
நரி ஜல்லிக்கட்டுத் தெரியுமா உங்களுக்கு..?
96 சதவிகித குள்ளநரிகள் எப்படி அழிந்தன தெரியுமா?
இத்தனை கேள்விகளுக்கும் விளக்கமாக பதில் சொல்கிறார், எழுத்தாளர், காட்டுயிர் ஆர்வலர் மற்றும் 'குறுநரிகள் வாழ்ந்த காடு' என்ற தலைப்பில் குள்ளநரிகள் தொடர்பாக ஆராய்ந்து வருபவருமான கோவை சதாசிவம்.

''குள்ளநரிகளை சங்க இலக்கியம் குறுநரிகள் என்று அழகாக குறிப்பிடுகிறது. குள்ளநரிகள் குழிகளில் வாழும் என்பதால், குழிநரிகள் என்றும் அழைக்கப்படுகிறது. சில பகுதிகளில் குழிகளை வங்கு என்று குறிப்பிடுவதால், வங்கு நரிகள் என்றும் குறிப்பிடுகிறார்கள். குள்ளநரிகள் அடர்ந்த காடுகளுக்குள் வாழாது. குறுங்காடுகளில், அதாவது மேய்ச்சல் நிலங்களில் கிட்டத்தட்ட மக்களுக்கு அருகாமையில்தான் குள்ளநரிகள் வாழும். காட்டுக்கும் நாட்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் வாழ்கிற விலங்கு என்று குள்ளநரிகளை சொல்லலாம். இப்படி மக்களுக்கு வெகு அருகாமையில் வாழ்ந்த காரணத்தினால்தான் புராண கதைகளில் ஆரம்பித்து டோரா புஜ்ஜி கார்ட்டூன் வரை குள்ளநரி இடம் பிடித்திருக்கிறது. சரி, சிறுவர் கதைகளில் ஆரம்பித்து டோரா புஜ்ஜி வரை குள்ளநரி என்றாலே திருடும் என்று சொல்லப்படுகிறதே... அது உண்மையா என்று என்கிற கேள்வி எல்லோருக்கும் எழும். அது உண்மை கிடையாது. குள்ளநரிகள் என்றாலே ஏமாற்றும், வஞ்சிக்கும், துரோகம் செய்யும் என்று தன்னுடைய கெட்ட குணங்களை எல்லாம் குள்ளநரிகளுக்கு இருப்பதாக சொன்னது மனிதன்தான். அவையெல்லாம் நரிகளின் இயல்பு அல்ல. அவற்றுக்கு கதைகளில் வருவது போல ஏமாற்றவும் தெரியாது, டோரா புஜ்ஜி சொல்வது போல திருடவும் தெரியாது. குள்ளநரிகளுக்கு மனிதர்கள் சொல்வது போல தந்திரம் தெரிந்தால், அது ஏன் இந்தியாவில் 96 சதவீதம் அழிந்திருக்க போகிறது. சரி, மிச்சமுள்ள நான்கு சதவீத குள்ள நரிகள் இந்தியாவில் எங்கெல்லாம் இருக்கிறது என்று கேட்டீர்கள் என்றால் ராஜஸ்தானில் கொஞ்சம் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் வாழ்கின்றன, அங்கு அவை என்னென்ன கொடுமைகளை சந்தித்துக்கொண்டிருக்கின்றன என்பதை இந்தக் கட்டுரையின் இறுதியில் சொல்கிறேன்.
இயற்கை சூழலில் குள்ளநரிகளின் பங்களிப்பு என்ன?குள்ளநரிகள் இருக்கிற இடங்களில் முயல்கள், காடைகள் மற்றும் மயில்களின் இனப்பெருக்கம் கட்டுக்குள் இருக்கும். குள்ளநரிகள் அழிந்து போனதால்தான் மயில்கள் பெருத்து விட்டன. இதன் விளைவைத்தான் விவசாயிகள் இன்றைக்கு அனுபவித்து வருகிறார்கள்.

குள்ளநரிகள் குறுங்காடுகளில் வசிக்கும் என்று ஏற்கனவே சொன்னேன் அல்லவா... குறுங்காடுகளில் இலந்தை மரம், நெல்லி மரம், சூரிப்பழ மரம், காரப்பழ மரம் ஆகியவை இருக்கும். இந்தப் பழங்கள் எல்லாம் குள்ளநரிகளுக்கு மிகவும் பிடித்தமானவை. இந்தப் பழங்களுடைய விதைகளின் ஓடுகள் கடினமாக இருக்கும். இந்தப் பழங்களை சாப்பிடுகிற குள்ளநரிகள் இடுகிற எச்சம் வழியாக இந்த மரங்கள் குறுங்காடுகளில் பரவி வளரும். இந்தப் பழ மரங்களை மனிதர்கள் நட்டு வளர்த்ததில்லை. அந்த காலத்தில் குள்ளநரிகள் வழியாகத்தான் இந்த மரங்கள் குறுங்காடுகளில் பெருகி வளர்ந்தன. இந்த மரங்களுக்கு குறுங்காட்டு மரங்கள் என்றே பெயர்.
குறுங்காடுகளை சுத்தமாக வைத்திருப்பவை குள்ள நரிகள்தான். இறந்துபோன விலங்குகளை சாப்பிடுவது, இறந்து அழுகிப்போன விலங்குகளை சாப்பிடுவது, விலங்குகள் வேட்டையாடி பாதி தின்று மீதியை விட்டு சென்றுவிட்டால் அதை சாப்பிடுவது என குறுங்காட்டை குள்ளநரிகள் தூய்மையாக வைத்துக்கொள்ளும்.
குள்ளநரிகள் ஒருபோதும் பட்டினியால் இறப்பதில்லை..!குள்ளநரிகள் ஒருபோதும் பட்டினியால் இறக்காது. பழங்களைச் சாப்பிடும். அல்லது வேட்டையாடி சாப்பிடும். அல்லது இறந்துகிடப்பதை சாப்பிடும். அல்லது அழுகி கிடந்தாலும் சாப்பிடும். இடுகாடுகளில் மனிதர்களை புதைக்கும்போது, ‘ஆழமா குழி தோண்டி புதைங்க; இல்லைன்னா நாய், நரி இழுத்துட்டுப் போயிடும்’ என்று சொல்வார்கள். அது ஏன் தெரியுமா? அப்படி ஆழ குழித்தோண்டி புதைக்கவில்லை என்றால், மனித உடலையும் தோண்டி எடுத்து சாப்பிட்டு விடும் குள்ள நரிகள். அதனால்தான், குள்ளநரிகள் ஒருபோதும் பட்டினியால் இறப்பதில்லை என்று சொல்லி இருக்கின்றன சங்க இலக்கியங்கள். குள்ளநரிகளுக்கு பஞ்ச காலம் என்பதே கிடையாது. பசுமையான காலங்களில் காய்கறி, பழம், முயல், காடை, மயில் குஞ்சு என சாப்பிட்டு செழுமையாக இருக்கும். பஞ்ச காலங்களிலோ இறந்த விலங்குகளைச் சாப்பிட்டு செழுமையாக இருக்கும்.

குள்ளநரிகள் நுட்பமான வேட்டையாடிகள். அது வேட்டையாடவிருக்கிற மயில் அடுத்த நொடி துள்ளவிருக்கிறது என்றால், இது இந்த நொடியே துள்ளி விடும். குண்டூசி விழுகிற சத்தம்கூட கேட்கிற அளவுக்கு நுட்பமான செவித்திறன் குள்ள நரிகளுக்கு உண்டு. குள்ள நரியின் கால்கள் எத்தகைய கரடு முரடான குறுங்காட்டுக்குள்ளும் நடக்க முடிந்தவை. குள்ள நரிகளின் வாலை கப்பலின் சுக்கான்போல என்று சொல்லலாம். குள்ளநரிகளின் வால் அதன் உடம்பில் பாதி அளவுக்கு இருக்கும். உதாரணத்துக்கு, குள்ளநரி இரண்டடி நீளம் இருக்கிறது என்றால், அதன் வால் ஓரடி நீளம் இருக்கும். இந்த இடத்தில் சிலருக்கு நண்டு வளைக்குள் குள்ளநரி தந்திரமாக அதன் வாலை விட்டு ஆட்டி நண்டுகளை வேட்டையாடுகிற குழந்தைப் பருவத்து கதை நினைவுக்கு வரலாம். அதற்கான காரணத்தையும் சொல்லி விடுகிறேன்’’ என்றவர், சிரித்தபடி விவரிக்க ஆரம்பித்தார்.
’’குள்ளநரிகளுக்கு நண்டுகளை சீண்டி விளையாடுவதில் அலாதிப்பிரியம் உண்டு. ஒரு நண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது என்றால், அதன் பின்னால் மெதுவாக குள்ளநரியும் நடக்க ஆரம்பிக்கும். ஒருகட்டத்தில் நண்டின் முதுகில் காலால் செல்லமாக ஒரு தட்டு வைக்கும். பயந்துபோன நண்டு வேகமாக ஓட ஆரம்பிக்கும். குள்ளநரியும் கொஞ்சம் வேகமாக நடக்க ஆரம்பிக்கும். கொஞ்ச நேரத்தில் மறுபடியும் நண்டை சீண்டும். நண்டு வேகம் எடுக்கும். குள்ளநரியும் வேகம் எடுக்கும். நண்டு அதன் வளைக்குள் நுழையப்போகும் நேரத்தில் குள்ளநரி அதன் முதுகில் ஒரே அடி. நண்டு நசுங்கிவிடும்; நரியும் அதை உண்டு விடும். நம் வீடுகளில் பூனைகூட எலியை இப்படி செய்வதை சிலர் பார்த்திருப்பீர்கள். இதை அதனுடைய வேட்டையாடும் இயல்பு என்று பார்த்தால், குரூரம் என்று யோசிக்க மாட்டோம். அது குள்ளநரிகளின் ஒருவகை வேட்டையாடல் இயல்பு, அவ்வளவுதான். இதில் வஞ்சகமும் தந்திரமோ எதுவும் இல்லை.
'பௌர்ணமி நாட்களில் நரிகள் ஊளையிடும் ஓவியங்களை' பல இடங்களில் பார்த்திருப்போம். இதன் பின்னணியில் இருக்கிற பல்வேறு தகவல்களை சமீபத்திய ஆய்வுகள் ஆச்சரியத்துடன் நமக்கு தெரிவிக்கின்றன. கொள்ளையர்களும் குள்ளநரிகளும்...குள்ள நரிகளைப் பற்றிய இன்னொரு கட்டுக்கதையையும் இங்கே சொல்லிவிடுகிறேன். அதாவது குறுங்காடுகளுக்குள் மனிதர்கள் தனியாக நடந்து செல்லும்போது குள்ளநரிகள் திடீரென அவர்களின் கால்களுக்கு இடையே நுழைந்து பயமுறுத்தும். அவர்கள் பயந்த நேரத்தில் கண்களில் மண்ணள்ளித் தூவி விடும் என்றெல்லாம் சொல்வார்கள். குறுங்காடுகளில் தனியாக செல்லும் மனிதர்களிடம் கொள்ளையடிப்பவர்களும் குள்ளநரிகளின் இந்த தந்திரத்தையே தாங்களும் கடைப்பிடிப்பார்கள் என்கிற கதையும் இங்கு உண்டு. அதுவும் மனிதர்களுடைய மிகையான கற்பனைதான். ஏனென்றால், மனிதர்களைக் கண்டால் குள்ள நரிகள் கூச்சத்தினாலோ அல்லது அச்சத்தினாலோ அதன் வங்குக்குள் சென்று பதுங்கிக் கொள்ளும். ஒருவேளை மனிதர்களுடன் எதிர்ப்பட வேண்டிய சூழல் வந்தால், அருகாமையில் இருக்கிற புதருக்குள் தன்னை மறைத்துக் கொள்ளும்.
பெளர்ணமி அன்று குள்ளநரிகள் சத்தமாக ஊளையிடுவது ஏன்?குள்ளநரிகளின் ஊளையிடும் சத்தம் மனிதர்களிடையே வெகு பிரசித்தம். 'பௌர்ணமி நாட்களில் நரிகள் ஊளையிடும் ஓவியங்களை' பல இடங்களில் பார்த்திருப்போம். பல கதைகளில் நரி ஊளையிடுவதைப் பற்றி படித்திருப்போம். இதன் பின்னணியில் இருக்கிற பல்வேறு தகவல்களை சமீபத்திய ஆய்வுகள் ஆச்சரியத்துடன் நமக்கு தெரிவிக்கின்றன. அதாவது, குள்ளநரிகள் ஊளையிடும் என ஒரு வரியில் நாம் சொல்லிவிடுகிறோம். உண்மையில் குள்ளநரிகள் 40 விதங்களில் ஊளையிடுமாம். அந்த ஊளைகள் எல்லாம் நரிகளுக்கு இடையே இருக்கிற மொழி பரிமாற்றமாம். எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஊளையிடுதல் என்பது நரிகளின் மொழி. அந்த 40 வகையான ஊளைகளும் தங்கள் கூட்டத்துக்கு இடையே நரிகள் பரிமாறிக்கொள்கிற தகவல்களாம். அதாவது, 'இங்கே ஒரு இரை இருக்கிறது, சாப்பிட வரலாம். இங்கே ஒரு பெரிய இரை சேற்றுக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறது, எல்லோரும் வந்தால் அதை வேட்டையாடி விடலாம்' என்பதுபோல ஒவ்வொரு ஊளையிடலுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது என்று அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தவிர, தங்களுடைய வாழ்விடம் பாதுகாப்பாக இருக்கிறதா, அங்கே எதிரிகள் நடமாட்டம் ஏதாவது இருக்கிறதா என்பதையும் ஊளையிட்டு சக குள்ளநரிகளுக்கு தெரிவித்துவிடுமாம். குள்ளநரிகள் இரவும் கவிழ்ந்து வரும் ஆறரை மணிக்கு ஊளையிட்டால் ’நாம் எல்லோரும் வேட்டைக்கு செல்லலாமா’ என்று அர்த்தமாம். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், குள்ளநரிகளின் சில ஊளையிடல் ஓசைகள் அவற்றின் குடும்பங்களுக்கு மட்டுமே புரியுமாம். அதாவது, அதன் கணவன் அல்லது மனைவிக்கும், குட்டிகளுக்கும் மட்டுமே அந்த ஓசைக்கான அர்த்தம் புரியுமாம். சக நரிகளுக்கு அந்த ஊளைக்கான அர்த்தம் தெரியாதாம். குடும்ப பாடல்போல குடும்ப ஊளையிடல் என்று இதைச் சொல்லலாம். இது அண்மையில் நடந்த ஆராய்ச்சியில் கிடைத்த ஓர் ஆச்சரியமான தகவல்.
காதல் விஷயத்தில் குள்ளநரிகள் எப்படி?ஒரு பெண் குள்ளநரி முதன் முதலில் எந்த ஆண் நரியை தன் துணைவனாக தேர்ந்தெடுக்கிறதோ அதே ஆண் நரியைத்தான் அடுத்தடுத்த இனப்பெருக்க காலகட்டத்திலும் தேர்ந்தெடுக்கும். இரண்டு நரிகளும் ஒரே வளையில் தங்கி குட்டிகளைப் போடும். குட்டிகள் பிறந்த பிறகு ஆபத்துக்காலத்தில் குட்டிகள் தப்பிப் பிழைப்பதற்காக சில திறப்புகளையும் அந்த வளையில் ஏற்படுத்தி வைக்கும். குள்ளநரி குட்டிகள் 4 மாதம் வரைக்கும் தாய்ப்பால் மட்டுமே அருந்தும். இந்தக் காலகட்டத்தில் தாய் நரி, குட்டிகளுக்கு பாதுகாப்பாக வளையில் தங்கி இருக்கும். ஆண் நரி, பெண் நரிக்காக உணவு தேடி எடுத்து வரும். பாலூட்டும் காலங்களில் தாய் நரிக்கு அதிகமான உணவு தேவைப்படும். இந்த நேரத்தில்தான், ஆண் நரி ஊருக்குள் நுழைந்து ஆடு, கோழி போன்றவற்றை இழுத்துச்சென்று விடும். சில நேரங்களில் ஆண் நரியைக் குட்டிகளுக்கு பாதுகாப்பாக வைத்துவிட்டு, பெண் நரி தானே சென்று தனக்கான உணவுகளை தேடிக்கொள்ளும். குட்டிகள் பால் குடிக்க மறந்ததும், அதன் பெற்றோர் தாங்கள் சாப்பிடுகிற உணவை நன்கு மென்று உமிழ்நீருடன் தன் குட்டிகளுக்கு ஊட்டும். இதன் வழியாகத்தான் செரிமானத்துக்கான நொதிகள் குட்டி நரிகளுக்கு கிடைக்கும்.
நரி குட்டிகள் தங்களுடைய எட்டாவது மாதத்தில் இருந்து வேட்டையாட பழகும். பழக்குவிப்பது தாய் தான். குறிப்பாக பௌர்ணமி நாட்களில் இந்த வேட்டையாடும் பயிற்சி குறுங்காடுகளில் நடைபெறும். பௌர்ணமி இரவுகளில் நரிகள் பயங்கரமாக ஊளையிடும் என்று கதைகளின் படித்திருக்கிறோம் அல்லவா... அதற்குப் பின்னணியில் இருக்கிற காரணம் இதுதான். முயலை வேட்டையாடும் போது காதை பிடிக்க வேண்டும்; காடையை வேட்டையாடும் போது கழுத்தை பிடிக்க வேண்டும் என்று குள்ளநரிகளின் வேட்டையாடும் பயிற்சியும் சுவாரஸ்யமாகவே இருக்கும்.
தின்றபடியே கொல்லும்!குள்ளநரிகள் தனித்தும் வேட்டையாடும். ஆண் பெண் சேர்ந்தும் வேட்டையாடும். யானை, எருது போன்ற பெரிய விலங்குகள் சகதிக்குள் சிக்கிக்கொண்டால் கூட்டமாக சேர்ந்து அவற்றையும் வேட்டையாடி விடும். குள்ளநரிகள் உருவத்தில் சிறியவை என்பதால் அவற்றால் யானை எருது போன்ற பெரிய விலங்குகளின் குரல்வளையைக் கடித்து வேட்டையாட முடியாது. அவை சகதிக்குள் நின்று கொண்டிருந்தாலும் குள்ளநரிகளால் அதன் கழுத்து உயரத்துக்கு தாவ முடியாது. அதனால் பெரிய விலங்குகள் சிக்கிக் கொண்டால், கூட்டமாக சேர்ந்து அதன் கால்களை கடிக்க ஆரம்பிக்கும். அவை வலி தாங்காமல் கால் மடங்கி உட்காரும்போது அதை கூட்டமாக சாப்பிட ஆரம்பிக்கும். குள்ளநரிகளால் பெரிய காட்டுயிர்களைக் கொன்று சாப்பிட முடியாது. அதனால் அது தின்றபடியேதான் அந்த விலங்கை கொல்லும்.
இத்தனை திறமையுடன் வாழ்ந்த குள்ள நரிகள், அப்புறம் எப்படித்தான் இந்த அளவுக்கு அழிந்தன என்கிறீர்களா? சொல்கிறேன் கேளுங்கள்’’ என்றவர், அந்த வேதனை கதையையும் பகிர ஆரம்பித்தார்.

’’இந்த அளவுக்கு குள்ளநரிகள் அழிந்துபோனதற்கு என்னென்ன விஷயங்கள் காரணங்களாக அமைந்தன என்று பார்த்தால், மேய்ச்சல் நிலங்கள் சுருங்கிவிட்டது முதல் காரணம். இரண்டாவது காரணம், தங்கள் பட்டியில் இருக்கிற ஆடுகளை குள்ளநரிகள் இழுத்துக்கொண்டு சென்று விடுகின்றன; கோழிகளை தின்று விடுகின்றன என்று மக்கள் குள்ளநரிகளை அழிக்க விரும்பினார்கள். அந்த நேரத்தில்தான் மக்களுக்கு உதவியாக வந்தார்கள் ஒரு நாடோடி இன மக்கள். அவர்களுக்கு தங்களுடைய தோட்டத்தில் எந்த இடத்தில் குள்ளநரிகள் குழிதோண்டி பதுங்கி இருக்கிறது என்பதை உரிமைக்காரர்கள் காட்டிக் கொடுக்க ஆரம்பித்தார்கள். குள்ளநரிகள் இரவில் வேட்டையாடுபவை. அந்த இரவாடிகள் குழியிலிருந்து இரவு நேரத்தில் உணவு தேட வெளியே வரும். அந்த நேரத்தில் அந்த நாடோடி இன மக்கள் நரிகளைப் பிடித்து கொன்று அதன் இறைச்சியை சாப்பிட ஆரம்பித்தார்கள். அதோடு நிற்காமல் குள்ளநரியின் தோல், வால், பல் போன்றவற்றை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் சேரும் என்று சொல்லி அவற்றை மக்களிடம் விற்க ஆரம்பித்தார்கள். அவர்கள் சொன்னதை நம்பி மக்களும் வாங்க ஆரம்பித்தோம். இந்த வியாபார உத்தியும் எக்கச்சக்க குள்ளநரிகளை கொன்று குவித்தது.
Elephants: மகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்; மருமகளை ஏற்றுக்கொள்ளாது; தாய்மாமனுக்குப் பெண் கொடுக்காதுநரிக்கொம்பு அழகானப் பெண்களை வசியம் செய்யுமா?குள்ளநரிகளின் உறுப்பு விற்பனையில் ஹைலைட்டான விஷயம் நரிக்கொம்பு. உண்மையில் குள்ளநரிகளுக்கு கொம்பு இருக்கிறதா என்றால் இல்லவே இல்லை. அப்படியென்றால், குள்ளநரிகளின் எந்த உறுப்பை அந்த இன மக்கள் நரிக்கொம்பு என்று சொல்லி விற்பனை செய்தார்கள் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா? பத்தாயிரம் நரிகளில் ஒரு குள்ளநரியின் உச்சந்தலையில் சதை திரண்டு நிற்கும். அதன் மேல் மயிர் மூடி மறைத்திருக்கும். இதை அந்த இன மக்கள் நரியின் கொம்பு என்று நம்பினார்கள்; அதையே நம்மிடமும் சொன்னார்கள்.
ஆண்கள்தான் நரிக்கொம்பை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். காரணம் என்ன தெரியுமா? நரிக்கொம்பு உங்களிடம் இருந்தால், அழகான பெண்கள் எல்லாம் உங்களிடம் மயங்குவார்கள் என்கிற அந்த இன மக்களின் வார்த்தையை நம்பிய ஆண்கள், அந்தக்காலத்தில் நரிக்கொம்பு என்று சொல்லப்பட்ட அந்த சதை திரட்சியை தங்களுடன் வைத்துக்கொண்டு அலைந்தார்கள். நரிக்கொம்பு உங்களுடன் இருந்தால் சூதாட்டத்தில் ஜெயிக்கலாம் என்கிற மூடநம்பிக்கையும் அன்றைக்கு இருந்ததால், அதையும் முயற்சி செய்து பார்த்தார்கள் அந்தக்காலத்து ஆண்கள். விளைவு, அந்த அப்பாவி ஜீவன்கள் இன்னும் வேகமாக அழிய ஆரம்பித்தன. இதில் வேதனையான நகைச்சுவை என்னவென்றால், தற்போது ஆன்லைனிலேயே நரிக்கொம்புகள் கிடைக்கின்றன. சில வெளிநாடுகளில் செயற்கையாக நரிக்கொம்புகள் தயாரித்து ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார்கள்.
நரிகளை தங்கள் நிலத்தில் விட்டு ஓட ஓட விரட்டுவதை ஒரு பழக்கமாக செய்து வருகிறார்கள். இதன் பெயர் நரி ஜல்லிக்கட்டு. ஏறுதழுவுதல் தான் தமிழர்களுடைய பண்பாடு. நரி ஜல்லிக்கட்டு தமிழர்களுடைய பண்பாடு அல்ல. 7 வருடங்கள் ஜெயில் தண்டனை!குள்ளநரி பிடிப்பதும், கொல்வதும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி குற்றம். மீறினால், 7 வருடங்கள் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும். இந்த சட்டத்தை 1972-லேயே அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்து விட்டார். அந்த சட்டம் வருவதற்கு முன்னரே 96 சதவிகித குள்ளநரிகள் கொல்லப்பட்டு விட்டன என்பதுதான் கொடுமை. மீதமிருந்த நான்கு சதவிகித குள்ளநரிகளை காப்பாற்றியது இந்தச் சட்டம்தான். ’நரி பிடிப்பதே தொழிலென’ இருந்த இனக்குழுவுக்கு கூட்டுறவு சங்கங்கள் வழியே ஊசிமணி, பாசிமணி விற்பதற்கான கடனுதவி, அதன் தொழிற்சாலைக்கான கடனுதவி, அவர்கள் வீடு கட்டிக் கொள்வதற்கான வீட்டுமனைகள் எல்லாம் வழங்கப்பட்டது.
ஒரே துணை; ஒரேயொரு முட்டை; சடலங்களே உணவு... கொத்துக் கொத்தாக இறந்துபோன பாறு கழுகுகளின் கதை!தற்போது குள்ள நரிகளின் நிலைமை...சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், வாழப்பாடி போன்ற கிழக்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரங்களில் இருக்கிற முப்பது, முப்பத்தைந்து கிராமங்களில் மிச்சம் மீதியுள்ள குள்ளநரிகள் தப்பிப் பிழைத்து வாழ்ந்துக்கொண்டிருக்கின்றன. அங்கு வாழ்கிற மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை பொங்கல் அன்று, குள்ளநரிகளைப் பிடித்து வந்து அதன் வாயையும் பின்னங்கால்களையும் கட்டி கூண்டில் அடைத்து விடுவார்கள். மூன்று தினங்கள் வரைக்கும் அந்த நரியின் முகத்தில் குழந்தை குட்டிகளில் ஆரம்பித்து பெரியவர்கள் வரை அனைவரும் விழித்துக்கொண்டே இருப்பார்கள். மனிதர்கள் முகத்தில் விழிக்கிற அந்த நரிகளோ மரண பயத்துடன் இருக்கும். மூன்று நாட்கள் கழித்து அந்த நரிகளை தங்கள் நிலத்தில் விட்டு ஓட ஓட விரட்டுவதை ஒரு பழக்கமாக செய்து வருகிறார்கள். இதன் பெயர் நரி ஜல்லிக்கட்டு. ஏறுதழுவுதல் தான் தமிழர்களுடைய பண்பாடு. நரி ஜல்லிக்கட்டு தமிழர்களுடைய பண்பாடு அல்ல.

கர்நாடகாவில் இருக்கிற ஓர் இனக்குழு, மகர சங்கராந்தி அன்று இப்படி குள்ளநரியின் முகத்தில் விழிப்பதை தங்கள் பண்பாடாக பின்பற்றி வருகிறார்கள். தவிர, மகர சங்கராந்தி அன்று நரியின் கழுத்தை அறுத்து அதன் ரத்தத்தை தங்கள் நிலத்தில் தெளித்தால் அடுத்த வருடம் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்று நம்பி அதையும் பின்பற்றினார்கள். சமூக ஆர்வலர்கள் அரசுடன் இணைந்து, ‘அதுவொரு காட்டுயிர். அதை நீங்கள் இப்படி கொல்லக் கூடாது’ என்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு,’ நீங்கள் செய்வது சட்டப்படி தவறு; இதற்கு உங்களுக்கு தண்டனை கிடைக்கும்’ என்று எடுத்துச்சொல்லி அந்த பழக்கத்தை 20 வருடங்களுக்கு முன்பே நிறுத்திவிட்டார்கள். அந்த சந்ததியில் இருந்து வந்தவர்களோ அல்லது அங்கிருந்து வந்தவர்களோ இப்போதும் நான் மேலே சொன்ன பகுதிகளில் குள்ளநரியை பிடிப்பதையும் அதன் முகத்தில் விழிப்பதையும் அதை விரட்டுவதையும் ஒரு பழக்கமாக பின்பற்றி வருகிறார்கள். அவர்களுக்கும் நரிகள் தொடர்பான சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ’இது எங்களுடைய வழிபாட்டு உரிமை’ என்பவர்கள் சுடுமண் குதிரை போல சுடுமண் நரியை சமைத்து ஆண்டு முழுவதும் வழிபடலாம். பொம்மை நரிகளை வழிபடுங்கள்; உண்மை நரிகளை வாழ விடுங்கள்’’ என்கிறார் கோவை சதாசிவம்.
வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்
Link :- https://bit.ly/VikatanWAChannel

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs